அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு, நாளை தொடக்கம் :


சென்னை:
நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யலாம். நாளை முதல் இந்த சேவை செயல்பாட்டுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
தமிழகத்தில் ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது. பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.
இனி தமிழக அரசு இசேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம்.
பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆதார் பதிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளும் என்று ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள், சென்னை அரசு தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த மையங்களின் மூலம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு இணைய சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:
ஆதார் எண்களை வைத்திருத்தவர்களுக்கு அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அட்டைகளை அரசு இணைய சேவை மையம் மூலம் வழங்கி வந்தோம். இனி, ஆதார் பதிவுகளையே மேற்கொள்ள உள்ளோம்.
இதற்கென தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 1,280 கருவிகளை வழங்கியுள்ளது. இந்தக் கருவிகள் மூலம் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியும். அரசு இணைய சேவை மையங்கள் அதிகளவு உள்ளதால் ஆதார் பதிவுகளை விரைவாகவும், மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் உடனடியாக மேற்கொள்ளவும் வழி ஏற்படும்.
ஆதார் பதிவை மேற்கொள்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. அரசு இணைய சேவை மையங்களில் பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், ஆதார் பதிவு அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
பிளாஸ்டிக் அட்டை:
ஆதார் எண் உருவாக்கப்பட்டவுடன், அதற்கான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் ஆதார் பிளாஸ்டிக் அட்டையை அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்கலாம்அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜேடிஓ பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல்- டெலிகாம் நிறுவனத்தில் 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.12-2/2016-Rectt
பதவி: Junior Telecom Officer
தகுதி: பொறியியல் துறையில் Tele Commmunication, Electronics, Radio, Computer, Electrical, Electronics, IT, Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியலில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2016
கேட்-2017 தேர்வு நடைபெறும் தேதி: 04.02.2017 முதல் 12.02.2017 வரை
JTO பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2017 முதல் 31.01.2017 வரை
JTO பணி தொடர்பான கூடுதல் விவரம் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ www.externalexam.bsnl.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்


இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).
பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

மாவட்டக்கல்வி அலுவலர்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

6205 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17 ந் தேதி கடைசி நாள்


கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியில் 6205 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அளவில் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் துவக்க நிலை ஆசிரியர்கள், பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 6,205 காலிப் பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்ப கட்டணமாக முதல்வர் பணிக்கு ரூ.1,200, இதர பணிகளுக்கு ரூ.750 ஐ ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர், டிசம்பர் 2016-இல் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, பெங்களூரு. ஹைதராபாத். திருவனந்தபுரம்.
மேலும், இப்பணியிடங்கள் குறித்த வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை கேந்த்ரிய வித்யாலயத்தின் www.mecbsekvs.in 
 www.kvsangathan.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17-ஆம் தேதி கடைசி நாளாகும்

துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை அசல் சான்றிதழ்

கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தற்போது வழங்கப்பட உள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்கள் 29-ஆம் தேதி காலை 10 மணி முதல், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்குச் சென்று இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த மார்ச் மாதம் முதல் முறையாகத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாமல் ஜூன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வு எழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

மற்ற தேர்வர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அக்.8 முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை


வங்கிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணபரிவர்த்தனை செய்து கொள்ளுமாறு வங்கி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
அடுத்த மாதம் வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9ம் தேதி ஞாயிறு, 10ம் தேதி ஆயுதபூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி முகரம் பண்டிகை என தொடர்ந்து ஐந்து நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கும் மேற்கண்ட ஐந்து நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.
இனிமேல்
பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலை பல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்த மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு சென்று படிக்க இயலாதவர் களுக்கும் பணியில் இருந்துகொண்டு படிப்பை தொடர விரும்புவோருக்கும் கைகொடுப்பது தொலைதூரக்கல்வி படிப்பு கள்தான் (அஞ்சல்வழி கல்வி திட்டம்), தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து படித்தும் வருகின்றனர். தொழில் நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம்கூட தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கு கிறது. பிஎட் படிப்பும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது.

அதிகார எல்லை

                              ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட அதிகார எல்லை (Territorial Jurisdiction) வரையறுக்கப்பட்டுள்ளது. உதார ணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை உள் ளடக்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்படு கின்றன. அதேபோல், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

தற்போது பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. தேர்வு மையங் களையும் நிறுவி வருகின்றன. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் படிக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது.

யுஜிசி உத்தரவு

                       இந்த நிலையில், பல்கலைக் கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகள் நடத்துவதற்கும் தேர்வு மையங்கள் அமைப் பதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தக்கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், திறந்தநிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தவும், தேர்வு மையங்களை நிறுவவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

யுஜிசி-யின் இந்த உத்தரவின்படி, இனிமேல் தமிழக பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தேர்வு மையங் களையும் அமைக்க முடியும் உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகம் இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த இயலும். அங்கு மட்டுமே தேர்வு மையங்களையும் அமைக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள ஒரே திறந்த நிலை பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த யுஜிசி அனுமதி அளித்திருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.பில், பிஎச்.டி. படிப்புகளை மீண்டும் ரெகுலர் முறையில் நடத்துவதற்கு யுஜிசி அனுமதி அளித்திருப்பதாகவும் அப்படிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யுஜிசி உத்தரவுக்கு தடை

                                      இதற்கிடையே, யுஜிசியின் உத்தரவுக்கு சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றிருக்கின்றன. எனவே, அப்பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொலைதூரக் கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகரிடம் கேட்டபோது, “யுஜிசி உத்தரவுக்கு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தடை ஆணை பெற்றிருக்கிறோம். எனவே, வழக்கம்போல் தொலை தூரக்கல்வி படிப்புகள் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களைப் போன்று பல பல்கலைக்கழகங்களும் இது போன்று தடை ஆணை பெற்றிருக்கக் கூடும்” என்றார்

3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளி களை ஒட்டிய பகுதிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆசிரியர் குழுக்கள் பிரசாரம் செய்கின்றன; ஆனாலும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் முன்வருவது இல்லை.

அதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்க பள்ளிகள் மூடப்படுகின்றன; அங்கு படிக்கும் மாணவர்கள், அருகிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சமகல்வி இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுபற்றிய தகவல்கள் பெற்றுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டு களில், 11 மாவட்டங்களில், 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் படித்த மாணவர்கள், சற்று தொலைவிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 11 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர், ஐந்து; நீலகிரி, நான்கு; திருவள்ளூர், கடலுார் மற்றும் கோவை தலா, மூன்று; ராமநாதபுரம், இரண்டு; திருநெல்வேலி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா, ஒன்று என, 35 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சமகல்வி இயக்கத்தினர், 12 மாவட்டங்களில், 155 பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். 83 சதவீத அரசு தொடக்க பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், ஒரே வகுப்பில் அமர்ந்திருக்கும் நிலையே உள்ளது; அவர்களுக்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்துவதும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.

*உள்ளாட்சித் தேர்தல் 2016* *வாக்காளர் பட்டியல்* *பாகம் எண்,வரிசை* *அறிய வேண்டுமா*


1⃣
கீழே உள்ள  *link* ஐ *click*செய்யுங்கள்
👇🏼👇🏼👇🏼

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx
http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx
2⃣
உங்கள்
*Voter ID number*ஐ பதிவிடுங்கள்

3⃣
*"SUBMIT"*
என்ற optionஐ
Click செய்யுங்கள்

4⃣
வாக்காளர் பட்டியலில்
உங்கள்
*பாகம் எண்*
*வரிசை எண்*
*முகவரி*
போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

குழந்தைகளை நம்புங்கள்* ஜான் ஹோல்ட் உங்களால் குழந்தைளின் கல்வியைப் பற்றி ஒரே ஒரு புத்தகத்தைத் தான் படிக்க முடியுமென்று இருக்குமேயானால், ஆசிரியர் ஜான் ஹோல்ட் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்

1967ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இன்றும் குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் பரிந்துரைக்கப் படும் புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  நவீன யுகத்தில் குழந்தைகள் கற்கும் விதம் பற்றிய (ஐந்து வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கான கல்வி), ஒரு கூர்மையான பார்வையை முன் வைத்தவர் ஜான் ஹோல்ட்.

குழந்தைகள், பெரியவர்களைக் காட்டிலும், இயல்பாகவே அதிகம் கற்கும் திறன் கொண்டவர்கள்.  குழந்தைகளின் இந்த இயல்பான கற்றல் திறனை ஆர்வ மிகுதியால், பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி என்ற பெயரால் குலைத்து விடுகின்றனர் என்கிறார் ஜான் ஹோல்ட்.  இது ஒரு வலுவான குற்றச் சாட்டு.  குழந்தைகளால் எப்படி, தம்மாலேயே எதையும் கற்றுக் கொள்ள முடியும்?  பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் பிரச்னையா?  இது என்ன அபத்தமான பார்வை, என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுவது இயல்பே.  நம் முன் முடிவுகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் வாதங்களை பரிசீலிக்கலாம்.

குழந்தைகளின் கற்கும் திறன்

கன்றுக் குட்டி பிறந்தவுடன் எழுந்து நிற்கிறது.  மீன் குஞ்சுகள் பிறந்தவுடன் நீந்துகின்றன.  இவற்றோடு ஒப்பிடும் போது, குழந்தைகள் பிறந்தவுடன் எந்தப் பெரிய பௌதீகச் செயலையும் செய்யும் திறனற்றவர்கள் என்பது உண்மையே.  ஆனால், இதே குழந்தைகள், ஐந்து வயதாவதற்குள், வேறெந்த மிருகத்தாலும் செய்ய முடியாத, சிக்கலான காரியங்களைச் செய்யும் திறன் கொண்டவர்களாக - உதாரணமாக, மொழியை இலக்கணத்துடன் பேச்சில் கையாளுதல் போன்ற உயர் நிலைத் திறன்களை கொண்டவர்களாக – மாறுவது எப்படிச் சாத்தியமாகிறது?  ஒரு நாள் கூட பள்ளிக்குச் செல்லாத குழந்தை, பிறக்கும் போது மொழி என்றால் என்ன என்று கூடத் தெரியாத குழந்தை, ஐந்தே வருடங்களில் பேசுகிறதே? அது எப்படி?  பல ஆண்டுகள் முறையாக கல்வி பயின்ற, கல்லூரிப் பட்டம் பெற்ற, ஒருவரால் கூட, தமக்குத் தெரியாத ஒரு மொழியைக் கற்க மிகுந்த பிரயத்தனப் பட வேண்டி உள்ளதே?   குழந்தையாயிருந்த போது நம்மில் உறைந்திருந்த கற்கும் திறன், நாம் வளர்ந்த பிறகு எங்கே போய் விடுகிறது?  வயதான பின்னர், நாம் கற்றுக் கொள்ளத் தடுமாறுவதற்கு என்ன காரணம்? இவை தான் ஜான் ஹோல்ட்டின் அடிப்படையான கேள்விகள்.

வயதாக, வயதாக நாம் உலகைப் பற்றிய ஒரு புரிதலை, ஒரு கருத்துப் படிவத்தை (idealogical model) உருவாக்கிக் கொண்டு விடுகிறோம்.  புதிதாக ஏதாவது ஒன்றை கற்க முயலும் போது, உலகத்தைப் பற்றிய நம் படிவத்திற்கு ஒவ்வாத விஷயங்களை முற்றிலும் ஒதுக்கி விட்டு, தேவையானதை மட்டும் கற்க முயல்கிறோம்.  இந்த அணுகுமுறை ஒரு துறையில் விரைவாக நிபுணத்துவம் பெற மிகவும் உதவலாம். இந்த ஒரு அனுகூலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாம் குழந்தைகளின் கல்வியை பெரும்பாலும் தகவல்களைத் திறம்படத் தொகுத்து அளிக்கும் ஒரு பயிற்சியாகப் பார்க்கிறோம். நல்ல ஆசிரியர் என்பவர் திறம்பட தகவல்களை தொகுத்து வழங்கும் திறம் கொண்டவர் என்றும், புத்திசாலி மாணவர்கள் அந்தத் தகவல்களை விரைவில் கிரகித்துக் கொள்பவர்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த அடிப்படையில் கல்வியை மதிப்பிடுவதால்,  எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் திறனுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கிறோம்.  கல்வி ஒரு சர்க்கஸ் சாகசமாக மாறி விடுகிறது. இதன் பின் விளைவுகள் ஆழமானவை.  உதாரணமாக, தனக்குத் தெரியாத ஒன்றைச் செய்ய, ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று 'படித்த'வர்களை அழைத்தால், அந்த அழைப்பை பெரும்பாலாணோர் ஏற்றுக் கொள்வதில்லை.  ஏதாவது சால்ஜாப்பு சொல்வார்கள்.  இல்லையேல், அது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல என்று வாதம் செய்வார்கள். இதற்கு என்ன காரணம்? புதிதான ஒன்றைக் கற்கும் போது, நேரும் பிழைகளை அவரால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.  தான் ஒன்றை, விரைவில் கற்றுக் கொள்ளா விட்டால், தான் ஒரு புத்திசாலி அல்ல என்று பிறர் (தானும்) கருதக் கூடும் என்று உள்ளூர அஞ்சுகிறார்.   இந்த அச்சம் கல்வி என்பது தகவல் தொகுப்பு மட்டுமே என்ற புரிதலின்  நேரடி விளைவு.  வயதான அனைவரும், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் படிப்படியாக வளர்வதை/கற்றுக் கொள்வதை மட்டுமே விரும்புகிறார்கள்.  தெரியாத துறைகளில் நுழைவதை, பயனற்றதாக, முட்டாள்தனமான ஒன்றாகக் கருதுகிறார்கள். இப்படி ‘வளர்ந்த பெரியவர்களின்’ கற்றல் முறையை குழந்தைகளின் இயல்பான கற்றல் முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
 
குழந்தைகளின் கற்றல் முறை:

குழந்தைகள், பிறந்தவுடன் எந்தத் திறமையும் கொண்டவர்கள் அல்லர். அவர்களிடம் உலகைப் பற்றிய எந்த முன்முடிவுகளும் (படிவங்களும் - models) இல்லை.  குழந்தைகளின் உலகம் பெரும் விந்தைகளும், குழப்பங்களும், சிக்கல்களும் நிறைந்த ஒன்று.  குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர். உதாரணமாக, குழந்தை அழுகிறது என்று வைத்துக் கொள்வோம். குழந்தையின் அழுகைக்கு வரும் எதிர் வினையை குழந்தையின் பார்வையில் பார்ப்போம்.  சில சமயம், குழந்தை அழும் போது, அம்மா வந்து பால் கொடுக்கிறார்கள். பிறிதொரு முறை, அப்பா வந்து இடுப்புத் துணியை மாற்றுகிறார்.  இன்னொரு முறை, தாத்தா எடுத்துக் கொஞ்சுகிறார்.  இப்படி, குழந்தையின் ஒரே செய்கைக்கு (அழுதல்), பல விதமான எதிர்வினைகள் விளைகின்றன.  இந்தப் பல எதிர்வினைகள் கூட நிரந்தரமானவை அல்ல. சில சமயம், குழந்தை பசியால் அழும் போது, அப்பாவிற்கு பதில் அம்மா வந்து வந்து இடுப்புத் துணியை மாற்றலாம். அல்லது, அம்மாவிற்குப் பதில், அத்தை வந்து உணவு புகட்டலாம்.  அல்லது, தாத்தா வந்து கொஞ்சி விளையாடலாம். ஆக, குழந்தையின் பார்வையில் வெளிஉலகம், நிச்சயங்களற்றது.  வெளி உலகின் விதிமுறைகள் எளிதில் புலப்படாதவை.  இருந்தாலும், அந்தக் குழந்தைக்கு உலகைப் பற்றி, ஒவ்வொரு முறை அழுகும் போது, இன்ன நிகழலாம் என்ற ஊகம் மெலிதாக இருக்கிறது.  பல முறை, ஒரு நிகழ்வு தொடர்ந்து நடக்கும் போது, அந்தக் குழந்தையால், தன்னுடைய ஊகத்தை கொஞ்சம், கொஞ்சமாக வலுவாக்கிக் கொள்ள முடிகிறது.  எந்தக் காரியத்திற்கு, யார் வருவார்கள், என்ன செய்வார்கள், என்பதைக் குத்துமதிப்பாக அந்தக் குழந்தை புரிந்து கொள்கிறது. ஒவ்வொரு முறையும், அந்தக் குழந்தையின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழும் போது, தன் புரிதலைக் கொஞ்சம் விஸ்தாரப்படுத்தி, திருத்தி அமைத்துக் கொள்கிறது. உதாரணமாக, உணவு கொடுக்க அம்மா மட்டுமல்ல, அத்தையும் வரலாம் என்ற புரிதல், முதலில் இருந்த புரிதலைக் காட்டிலும் கொஞ்சம் விஸ்தாரணமானது.  முதலில் உணவென்பது, வெறும் பாலும், கஞ்சியும் மட்டும் தான் என்று எண்ணிய குழந்தை, முதலில் பருப்பைச் சுவைக்கும் போது, அந்தக் குழந்தையின் உணவு எனும் உலகம் விரிவடைகிறதல்லவா? இப்படி, முதலில் ஒரு காரண/காரிய தொடர்பைப் பற்றிய மெலிதான ஊகம், பின்னர் நிகழ்வுகள்/தவறுகள் மூலம் ஊகம் வலுப்படுதல்/தெளிவடைதல், வலுவடைந்த ஊகம் மூலம் உலகைப் பற்றிய புரிதல் விரிவாகுதல் என்ற தொடர் சுழல் மூலம் குழந்தைகள் கற்கின்றன.

இந்தக் கற்றல் முறையில் குழந்தைகளுக்கு முதலில் உலகைப் பற்றிய குறைவான/பிழையான புரிதல்கள் இருப்பது இயற்கையானது மட்டுமல்ல, தேவையானதும் கூட.  குழந்தைகளைப் பொருத்தவரை உலகம் ஒரு பரிசோதனைக் கூடம்.  தங்களது புரிதல்கள்/ஊகங்கள், தம் உலகை விளக்கப் போதுமானதாக இல்லாத போது, குழந்தைகள் இயல்பாகவே, தங்களது புரிதல்களை விஸ்தாரப்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. பெரும்பாலான பெரியவர்களிடம் இந்தத் திறன் இருப்பதில்லை.  உலகத்தைப் பற்றிய தங்களது முன்முடிவுகளை, படிவங்களை, வெகு சிலரே தங்கள் வாழ் நாள் முழுவதும் திருத்தி, மேம்படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

குழந்தைகளும் விளையாட்டும்

குழந்தைகளின் கற்றல் முறையின் முக்கிய அம்சம் விளையாட்டும்/கற்பனையும் தான்.  தங்களை ஒரு ராஜாவாக, ராணியாக கற்பனை செய்து கொண்டு அவர்கள் விளையாடுவதை நாம் அதிகப் பட்சம் கொஞ்சம் அன்பு நிறைந்த பெரிய மனசோடு பார்க்கிறோம்.  பெரும்பாலான சமயம், ‘சரி, சரி விளையாடியது போதும். போய்ப் படி”, என்று அவர்களது முயற்சியை கனிவுடன்  மட்டம் தட்டுகிறோம். ஆனால், அந்த விளையாட்டுகள்/கற்பனைகள் மூலம் தான் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அத்தகைய விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் வெளியுலகத்தைப் பற்றிய குறியீடுகளை (Symbols) தங்களின் தேவைக்கேற்பத் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர். குழந்தைகள், தங்கள் விளையாட்டுகள் மூலம், தங்களை மீறிய உலகத்தை தங்களது உலகிற்கும் கொண்டு வருகிறார்கள்.  அதைப் புரிந்து கொள்கிறார்கள்.  நீங்கள் குழந்தைகளின் விளையாட்டுகளைத் தொடர்ந்து கவனித்தால், அந்த விளையாட்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக மிகவும் சிக்கலான விதிகளைக் கொண்டதாகப் பரிணாம வளர்ச்சி அடைவதைப் பார்க்கலாம்.  முதலில், பந்தை நேராகத் தள்ளி விட்டுப் பிடிப்பதை விரும்பிய குழந்தை, வெகு விரைவிலேயே பிறருக்கு எட்டாத வகையில் வீசுவதை விரும்புகிறது.  கொஞ்ச நேரத்திலேயே, அந்த விளையாட்டைத் தானே மாற்றி அமைத்தும் கொள்கிறது.  பெரியவர்கள் செய்ய வேண்டியது  குழந்தைகளின் விளையாட்டில் தலையிடாமல் இருப்பது மட்டுமே.

குழந்தைகளின் தவறுகளை அவசரப்பட்டுத் திருத்தாதீர்கள்

குழந்தைகள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகைப் பார்க்கும் போது ஆயாசமடையாமால் இருப்பது அதிசயம் தான்.  தங்களைச் சுற்றியிருக்கும் பொருட்கள் என்னவென்றோ, அவை எதற்காகவென்றோ குழந்தைகளுக்குத் தெரியாது.  அவர்கள் பார்வையில், அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், கடவுளைப் போலத் தெரியும், பெரிய மனிதர்கள் (பெற்றோர்கள், ஆசிரியர்கள்) தாம் நிர்ணயிக்கிறார்கள்.  இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  ஒரு நாளில் நீங்கள் சந்திக்கும் அனைவரும் உங்களை விட பல மடங்கு புத்திசாலிகள். அவர்களால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களைக் காட்டிலும் திறம்பட செய்ய முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  மேலும், அவர்கள் உங்கள் மேலாளர் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் எப்படி உணர்வீர்கள்?  அது தான் குழந்தைகளின் உலகம்.  இந்த உலகத்தில் தான் குழந்தைகள் தம் இருப்பை நிருவ வேண்டி உள்ளது. அப்படி நிருவுவதற்கு தேவையான எந்தத் திறமையும் இல்லாமல் இருக்கிறார்கள்.  இது, எவ்வளவு சிக்கலான காரியம்?  ஆனால், அதைச் செய்யும் தனித் திறமை கொண்டவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள்.

குழந்தைகள் தவறு செய்வது இயல்பானது.  உதாரணமாக, ‘பாஸ்கர்’ என்ற பெயரை, ‘பாக்கர்’ என்று ஒரு குழந்தை சொல்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படிச் சொல்லும் குழந்தையை, பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும், “அது, பாக்கர் இல்லையம்மா, பாஸ்கர்”, என்று (அன்புடன்) திருத்துகிறார்கள். குழந்தையைப் பொருத்தவரை, ஒரு உயிருள்ள மனிதரை, ஒரு ஓசையைக் கொண்டு அழைப்பதென்பது மிகப் பெரிய சாகசச் செயல்.  இந்தச் செயலைச் செய்வதற்கு முன், அந்தக் குழந்தை, அந்தக் குறிப்பிட்ட மனிதரின் அங்க, அடையாளங்களை, அந்த மனிதரின் பெயருக்கான ஒலித்தொடரோடு இனைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாகசச் செயலைக் கொண்டாடாமல், அந்தக் குழந்தையின் பேச்சில் இருக்கும் பிழையைத் திருத்துவது, குழந்தையை இரண்டு விதங்களில் பாதிக்கிறது.
முதலில், தாம் செய்யும் தவறுகளைத் தாமே உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பை அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறோம். இப்படிக் குழந்தைகளை அடிக்கடித் திருத்துவது, இந்த உலகத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற குழந்தையின் தன்னம்பிக்கையைப் பாதிக்கிறது.  குழந்தைகள் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டியது, தாம் செய்யும் தவறுகளை தாமே கண்டுபிடித்து திருத்திக் கொள்ளும் திறனைத் தான்.  அந்த வாய்ப்பை நம் அவசரக் குறுக்கீடு தடை செய்கிறது.  இப்படி நான் எத்தனை முறை ‘அன்புடன்’ என் குழந்தைகளின் தவறுகளைத் திருத்தி இருக்கிறேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.

இரண்டாவதாக, குழந்தைகள் உலகைப் பற்றிய ஒரு படிவத்தை தாமே உருவாக்கிக் கொண்டால் மட்டுமே, அதைப் பற்றிய உறுதியான புரிதலோடு இருக்க இயலும்.  அதை விடுத்து, ஆசிரியர்களின்/பெற்றோர்களின் அவசரக் குறுக்கிடல்கள், குழந்தைகளுக்கு உலகத்தைப் பற்றிய புரிதலை இரவலாக மட்டுமே அளிக்கின்றன.  அவர்களால் தாமே சிந்தித்து உலகைப் பற்றிய அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் முக்கியமான பயிற்சி இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.  இப்படிப் பட்ட உறுதியான புரிதல் நிகழ, குழந்தைகளுக்கு நேரம் அவசியம்.  அறிதலுக்கும், அறியாமைக்கும் இடையில் உள்ள சாலையை பல முறை முன்னும், பின்னும் கடந்து சென்று பின்னர் தான், அவர்களது ஊகங்கள் வலுவடைந்து, ஸ்திரமான அறிதலாகிறது.  இந்தச் சாலையில் பயனிக்கும் குழந்தைகளை நீங்கள் நெம்பித் தள்ளியோ, தரதரவென்று இழுத்துக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ, ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்திற்கு கொண்டு செல்ல முடியாது.   நீங்கள் குழந்தைகளுக்கு அவகாசம் கொடுங்கள்.  அவர்கள் செய்யும் பிழைகளை அவசரப்பட்டுத் திருத்தாதீர்கள்.  பிழைகள் அவர்களின் கற்றலின் இயல்பான படி நிலை என்று உணருங்கள்.  உங்கள் பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள், என்று சொல்கிறார் ஜான் ஹோல்ட்.  குழந்தைகள் தாமே கற்றுக் கொள்வர், என்று உறுதியாக்க் கூறுகிறார்.
தற்கால கல்வி முறையில் உள்ள பிழைகள்

ஒரு பத்து கல்வியாளர்களை அழைத்து குழந்தைகளுக்கு எப்படிப் பேசக் கற்றுக் கொடுப்பது என்பதற்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கச் சொன்னால், அவர்கள் என்ன செய்வார்கள்?

“முதலில், குழந்தைகளுக்கு அடிப்படையான சில ஒலிகளை (phonotic bases) சொல்லிக் கொடுக்கலாம்; அதன் பின்னர் அந்த ஒலிகளைக் கொண்டு எளிய ஒலித்தொடர்களை (எளிய வார்த்தைகள்) கற்றுக் கொடுக்கலாம்; பின்னர், அந்த ஒலித் தொடர்களை எப்படிச் சேர்ப்பது என்பதற்கான இலக்கண அடிப்படைகளைக் கற்றுக் கொடுக்கலாம்; அதன் பின்னர் அவர்கள் அந்த ஒலித் தொடர்களைச் சேர்த்து ஒரு வாக்கியத்தை அமைக்கக் கற்றுக் கொடுக்கலாம். ஒவ்வொரு படி நிலையிலும் மாணவர்கள் அந்தப் படி நிலைக்குத் தேவையானத் திறனை அடைந்து விட்டார்களா, என்று பரிசோதனை செய்த பின்னர் அடுத்த படி நிலைக்கு அனுப்பலாம்.”

இந்த மாதிரி பாடத்திட்டம் தானே வரும்?  இதை நீங்கள் பின்பற்றினால் என்ன ஆகும்?  சுருங்கச் சொன்னால், இப்படிச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தானே உண்மை?

ஆனால், நாம் இந்த அபத்தத்தைத் தானே கல்வி என்ற பெயரில் தொடர்ந்து செய்து வருகிறோம்?  இந்த ஒரு விஷயம் தெரிந்தால், உனக்குப் பின்னால் ஒரு நாள் உதவும், அதனால், இதை நீ இப்போது கற்றுக் கொள் என்று சொல்வது தானே பெரும்பாலான வகுப்புகளில் நிகழ்கிறது?  இதனால் எனக்கு, இப்போது என்ன பயன்? என்ற குழந்தைகளின் கேள்விக்கு நேர்மையான பதில் சொல்லத் தெரியாத பெற்றோர்களும் (ஆசிரியர்களும்), மிரட்டல் (சொன்னதைச் செய், இல்லாட்டி ...), லஞ்சம் (கண்ணா, இதைச் செஞ்ச பின் ஐஸ் கிரீம், சரியா?), அல்லது கெஞ்சல் என்ற குறுக்கு வழியில் குழந்தைகளைச் செய்ய வைக்கிறார்கள்.  இந்தச் சித்திரவதையினால் குழந்தைகள் வெகு விரைவிலேயே, கல்வி என்பது தங்களது வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட ஒன்று எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள்.
கற்றல் என்பது, அழுத்தமற்ற சூழலில், தனக்கு விருப்பமான ஒன்றை தெரிந்து கொள்ள முனையும் பொது  இயல்பாக நிகழும் ஒன்று.  கல்விக் கூடங்கள், இந்த வகையான கற்றல் நிகழும் சாத்தியங்கள் அதிகம் உள்ள களமாக இருக்க வேண்டும். குழந்தைகளை வற்புறுத்தாமல், சுவாரசியமான ஒரு சூழலை உருவாக்கினால் போதும்.  அவர்களே கற்றுக் கொள்வார்கள்.  உதாரணமாக, வகுப்பறையில் நீங்கள் பத்திருபது ஊசல்களை (பெண்டுலம்) வைத்து விட்டு, எதுவும் சொல்லாமல் இருந்தாலே போதும்.  அந்தக் குழந்தைகளே, கொஞ்சம், கொஞ்சமாக அந்தப் ஊசல்களின் அடிப்படைகளைக் கண்டு பிடித்து விடுவார்கள்.  ஊசல்கலைப் பற்றி நீங்கள் சொல்லித் தர திட்டமிட்டிருந்த கேள்விகள் இயல்பாகவே வரும்.  நீங்கள் திட்டமிடாத சில கேள்விகளும் வரும்.

அப்படியானால், இது வரை உலகத்தில் கண்டு பிடிக்கப் பட்ட அனைத்து அறிவையும் குழந்தைகளே எப்படி கற்றறிந்து கொள்ள முடியும்? அதற்கான நேரம் இருக்கிறதா? என்ற கேள்விகள் நியாயமானவையே. குழந்தைகளை நாம் புதிதாக ஒரு சக்கரத்தை உருவாக்க்ச் சொல்லவில்லை. சக்கரம் இருக்கிறது.  அதைப் பற்றிய ஒரு படிவத்தை (model) அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான் ஜான் ஹோல்ட் சொல்வது. அதை விடுத்து, சக்கரத்தைப் பற்றிய எல்லாத் தகவலையும், அவர்களுக்கு ஒரு வகுப்பில் உட்கார வைத்துச் சொல்லித் தருவது, சக்கரத்தைப் பற்றிய அறிவை இரவலாகத் தருவதற்கு ஒப்பானது.  சக்கரத்தைப் பற்றிய சாத்தியங்களைப் பற்றி அவர்களே சிந்தித்துப் புரிந்து கொள்வது, அவர்களது உண்மையான அறிவு.  அவர்கள் சக்கரத்தைப் பற்றி மட்டும் கற்றுக் கொள்வதில்லை.  அவர்கள், தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி எப்படிக் கற்றுக் கொள்வது என்றும் கற்றுக் கொள்கிறார்கள். அது தான் முக்கியம்.

குழந்தைகள் தமக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்ள முயலும் போது கற்றல் சிரமமில்லாமல் நிகழுகிறது.  அந்த முயற்சியில் அவர்கள் பல முறை தோல்வி அடைவது கற்றலுக்கு அவசியமான ஒன்று.    அந்த முயற்சியில், அவர்கள் தோல்வியடைவதைத் தவிர்க்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் குறுக்கிடுவது தான் அவர்களது கற்றலைத் தடை செய்கிறது.  குழந்தைகள், கற்பது தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி மட்டுமல்ல.  அதை விட முக்கியமாக, அவர்கள் எப்படிக் கற்றுக் கொள்வது என்பதையும், தங்களால் எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையையும் தான்.  இரண்டே வார்த்தைகளில் சொல்லப் போனால், “குழந்தைகளை நம்புங்கள்”, என்று சொல்கிறார் ஜான் ஹோல்ட்.

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1967 ஆம் ஆண்டு வெளி வந்தது.  இந்த 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மீள் பதிப்பில் (Revised Edition), ஜான் ஹோல்ட் முதல் பதிப்பின் வரிகளுக்கிடையே தனது புதிய புரிதல்களை பதிவு செய்துள்ளார்.  இது, முதல் வாசிப்பில் கொஞ்சம் இடரலாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தின் நடை கொஞ்சம் வித்தியாசமானது.  தனது அனுபவங்களை, தேதி வாரியாக, ஒரு நாட்குறிப்பு மாதிரி எழுதி இருக்கிறார். தனது கருத்துக்களை, மிகக் கவனமாக தனிப்பட்ட குழந்தைகளின் உதாரணத்துடன், தொகுத்து எழுதியுள்ளார்.  இந்தப் புத்தகத்தை நான் பலமுறை படித்தேன்.  ஒவ்வொரு முறையும், எவ்வளவு தூரம் உன்னிப்பாகக் கவனித்து குழந்தைகளின் கல்வியைப் பற்றி எழுதி இருக்கிறார் ஜான் ஹோல்ட், என்று ஆச்சர்யப் பட வைத்த புத்தகம் இது.  நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் குழந்தையை சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பீர்கள் என்பதில் எனக்கு இம்மியும் சந்தேகமில்லை. குழந்தைகளின் கல்வியைப் பற்றிய பதற்றம் நிறைந்த பெற்றோராக நீங்கள் இருந்தால், உங்கள் பதற்றத்தை இந்தப் புத்தகம் பெருமளவில் குறைக்கும்.

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்

'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.

ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது.

2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி ஜெயலலிதா அறிவிப்பு!!!


சென்னை, பெரிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் அம்மா வை-பை மண்டலம் அமைக்கப்படும் என்றும், 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி மேம்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் முனைவோர் மையம்அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி ‘உலகமே சிறு கிராமம்’ என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் உலகையே சுருக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடையும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.* தொழில் முனைவோரின் திறனை மேம்படுத்தும் வகையில் சென்னையிலுள்ள டைடல் பார்க்கின் முதல் தளத்தில் 6,860 சதுர அடியில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையம் ஒன்று நிறுவப்பட்டு 1.3.2016 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் தொழில்முனைவோர் மையங்களை ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.அதன்படி, இந்த ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க்கில், வாடகைக்கட்டிடத்தில் 2 கோடி ரூபாய் முதலீட்டில் 50 இருக்கை வசதியுடன் கூடிய தொழில் முனைவோர் மையம் ஒன்று அமைக்கப்படும். இந்த மையத்திற்கு ‘நாஸ்காம்’ நிறுவனம் ஒரு அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.50 பள்ளிகளில்...* எங்களது தேர்தல் அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை-பை என்னும் கம்பியில்லா இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பஸ் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வை-பை மண்டலம்’ ஏற்படுத்திட நான் ஆணையிட்டுள்ளேன். இந்த இடங்களில் வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி மற்றும் கட்டணமில்லா இணைய வசதி ஏற்படுத்தப்படும்.மேலும், “மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா இணையதள வசதி செய்து தரப்படும்” என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவை 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். மேலும், இந்த சேவையினை நன்முறையில் தொடர்ந்து வழங்குவதற்கு ஆண்டுதோறும் ஏற்படும் செலவினத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.ரூ.80 கோடி* தமிழ்நாடு மின்னணு நிறுவனம் கடந்த 2004-05-ம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு ‘எல்கோசிஸ்’ நிறுவியது. தற்போது சோழிங்கநல்லூர் எல்கோசிஸ் 45,000 இளைஞர்களுக்கு நேர்முக வேலைவாய்ப்பையும், 90,000 இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சோழிங்கநல்லூர் ‘எல்கோசிஸ்’ தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த ஏற்றுமதியின் மதிப்பு 16,536 கோடி ரூபாய் ஆகும். இது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும். சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும்தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க ஏதுவாக, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்கோஸ்சில், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், தகவல் தொழில் நுட்ப கட்டிடம் ஒன்றினை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.ஆதார்* தேசிய மக்கள்தொகை பதிவு ஆவணத்திலிருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத்தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்திய பொது அடையாள எண் ஆணையகம் ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளராக தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை அங்கீகரித்துள்ளது. குடிமக்களுக்கும், அரசு துறைகளுக்கும் சிறந்த சேவைகளை வழங்கிட ஏதுவாக, ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டினை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மாநிலம் முழுவதும் 650 நிரந்தர பதிவு மையங்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இந்த நிரந்தர பதிவு மையங்களை தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும்.ரூ.25 கோடிமுதற்கட்டமாக, இந்நிரந்தர பதிவு மையங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தாலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னை நீங்கலான இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் நிறுவப்பட்டு, ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இம்மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். இத்திட்டம் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.* தமிழக அரசின் சேவைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் வாயிலாக, பொதுமக்களுக்கு, இணையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, பெருவாரியான மக்கள், சிறந்த தொழில்நுட்ப வசதியுள்ள கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அரசு சேவைகள் கைபேசி செயலிகள் வாயிலாக அளிக்கும் வகையில் “அம்மா இ-சேவை” என்ற ஒரு திட்டத்தினை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். முதற்கட்டமாக 25 முக்கிய சேவைகள் இத்திட்டம் வாயிலாக வழங்கப்படும். இந்த கைபேசி செயலித்திட்டம் ஒரு கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.* தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் மின் ஆளுமை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை ஆழ்வார்பேட்டையிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கத்திலும் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.இந்நிறுவனங்களுக்காக கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக இடத்தில் 5 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இக்கட்டிடத்தில், தற்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மின் ஆளுமை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவை செயல்படும். இந்த நடவடிக்கைகள் மூலம், தகவல் தொழில்நுட்பத்தின் பயன் பொதுமக்களை எளிதில் சென்றடைய வழிவகை ஏற்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி


அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (மே, டிசம்பர்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக இலவச அழைப்பு சேவை வழங்க களமிறங்கும் பி.எஸ்.என்.எல்!


தொலைத்தொடர்பு துறையில் புதிதாக களம் இறங்கி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், புதிய சலுகைகளுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் களத்தில் குதிக்க உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 'ரிலையன்ஸ் ஜியோ' என்ற பெயரில் புதிய தொலை தொடர்பு சேவையை துவங்கியுள்ளது. இதன் மூலம் இலவச அழைப்புகள், குறுந்தகவல், இணைய சேவை என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் மற்ற சேவை நிறுவனங்கள் கதி கலங்கி உள்ள நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஜியோவுக்கு போட்டியாக இலவச அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது பற்றி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தொலை தொடர்பு சந்தைமற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகளை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.
வரும் புத்தாண்டிலிருந்து நாங்களும் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள் உள்ளிட்ட புதிய சேவைகளை வழங்க உள்ளோம். அந்த சேவைகளும் கூட ஜியோவை விட மிக குறைந்த விலையில் இருக்கும் இவ்வாறுஅவர் தெரிவித்தார்.
ஜியோவைப் பொறுத்தவரை தன்னுடைய சேவைகளை 4ஜி வடிக்கையாளராக்களுக்கு மட்டும் அளித்து வருகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளிலும் இலவச அழைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் உள்ள மொத்த அலைபேசி இணைப்புகளில் பெரும்பா ன்மையானவை இத்தகைய இணைப்புகளில் இயங்குகின்றன என்பது நினைவு கூறத்தக்கது.

சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்


சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் உட்பட 6 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. இதற்கிடையில், தமிழக உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி ஆகிய தலைவர் பதவிக்கு கடந்த ேதர்தலில் நேரடியாக மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தனர். ஆனால், இந்தமுறை நேரடி தலைவர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களே, தலைவர்களே தேர்வு செய்வார்கள். இதற்கான அரசாணை சமீபத்தில் தமிழக அரசு பிறப்பித்தது. அதே சமயம் பொது, பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எது என்பது குறித்த முழு விவரம் தெரியாமல் இருந்தது.
அதேநேரத்தில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனுக்களை மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தன. ஆனால் எந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டுகள் இடஒதுக்கீட்டில் யாருக்கு ஒதுக்கப்பட்டது என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திணறி வந்தனர். இதனால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமா என்பது தெரியாமல் ஆண்களும் விண்ணப்பித்த அவலம் நடந்தது. தனி வார்டில் பொதுப்பிரிவினர் போட்டியிட தங்கள் கட்சியில் விருப்ப மனு அளித்த சம்பவமும் நடந்தது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இந்த குழப்ப நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அரசாணை விவரம் வருமாறு:
மாநகராட்சிகள்:
பெண்கள்: சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
பொது: திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவி (பொது) ஆண்கள் அல்லது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
எஸ்.சி.எஸ்.டி.(ஆண்): தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி/எஸ்டி(ஆண்)க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
நகராட்சிகள்:
எஸ்.சி(பொது): நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலைநகர்.
எஸ்.சி(பெண்கள்): ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், பேர்ணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர். எஸ்.சி.டி(பெண்கள்): கூடலூர். 
பெண்கள்(பொது): ஆம்பூர், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவக்கோட்டை காரைக்குடி, கீழக்கரை. தாராபுரம், உடுமலைப்பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், 
பத்மநாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர், வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை. மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம். 
பொது: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனாகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம். பெண்கள்: செங்கல்பட்டு, மதுராந்தகம்.
எஸ்,சி(பொது): மறைமலைநகர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள்:
பொது: திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, 
எஸ்.டி பெண்கள்: நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி(பொது): நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள்(பொது): காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி. ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வார்டு வாரியாக ஒதுக்கீடு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
* தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. 
* 2011ல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 2016 அக்டோபர் 24ல் பதவிக்காலம் முடிவடைகிறது.
* இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 26க்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
* இன்று உள்ளாட்சி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு


சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை


 ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1 ல் மாநில அரசு பணியில் உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல் அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள
விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களை நியமிக்க கூடாது.
அரசியல் சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்த கூடாது.
அதிக வாக்காளர்கள் அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம் காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் ஒரே வாக்குச்சாவடியில் ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள் நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால் வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு
உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சித் தேர்தலுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வார்டுகள், தெருக்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதனை கடந்த 19-ஆம் தேதிக்குள் வெளியிட அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
அதன்படி, பிரதான வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தப் பட்டியல்: பிரதான வாக்காளர் பட்டியலுடன், திருத்தப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலை வரும் 26-ஆம் தேதிக்குள் தயார் செய்ய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் மாற்றங்கள், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரையில் சேர்த்து வெளியிடப்படும்.

வாக்குச்சாவடி சீட்டுகள் ("பூத் சிலிப்'): உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி, வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை வரும் 27-இல் தொடங்கி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்கவும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

கால்பந்து: இந்தியா 148வது இடம்புதுடில்லி: 'பிபா' உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 148வது இடத்துக்கு முன்னேறியது.
உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, 'பிபா' வெளியிட்டது. இதில் இந்திய அணி 152வது இடத்தில் இருந்து 148வது இடத்துக்கு முன்னேறியது. இதற்கு, சமீபத்தில் மும்பையில் நடந்த புயர்டோ ரியோ அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் வெற்றி பெற்றது காரணம்.
இதன்மூலம் இந்திய அணி, 17 மாதங்களுக்குப் பின், மீண்டும் 'டாப்-150' வரிசையில் இடம் பிடித்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் 147வது இடம் பிடித்தது.
கடந்த ஜூலை மாதம் வெளியான தரவரிசையில் 152வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் 152வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 26வது இடத்தில் உள்ளது.
'நம்பர்-1' இடத்தில் அர்ஜென்டினா அணி நீடிக்கிறது. இதனை தொடர்ந்து, முறையே பெல்ஜியம், ஜெர்மனி, கொலம்பியா, பிரேசில் அணிகள் உள்ளன.

துாத்துக்குடி அணி சாம்பியன்: டி.என்.பி.எல்., தொடரில் அசத்தல்


சேப்பாக்கம்: சேப்பாக்கம் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., பைனலில் அபினவ் முகுந்த் விளாச, துாத்துக்குடி அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், கோப்பை வென்று அசத்தியது. தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' தொடரின் பைனல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் துாத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற துாத்துக்குடி அணி, 'பேட்டிங்' தேர்வு செய்தது. அபினவ் அசத்தல்: துாத்துக்குடி அணிக்கு துவக்கமே அபாரமாக அமைந்தது. கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த் இணைந்து எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். அஷ்வத் வீசிய 4வது ஓவரில் அபினவ் முகுந்த் நான்கு பவுண்டரி விளாசினார். தன் பங்கிற்கு சாய் கிஷோர் பந்தை கவுசிக் காந்தி பவுண்டரி விரட்டினார். இருவரும் அரை சதம் கடந்தனர். கவுசிக் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் (55) அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். முடிவில், துாத்துக்குடி அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. அபினவ் (82), ஆனந்த் (1) அவுட்டாகாமல் இருந்தனர். கணேச மூர்த்தி 'ஹாட்ரிக்': கடின இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி, கணேச மூர்த்தி 'சுழலில்' ஆட்டம் கண்டது.

இவர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் தலைவன் சற்குணம் டக்-அவுட்டானார். பின், கோபிநாத், சதீஷ், சசிதேவ் இவரிடமே ரன் எதுவும் எடுக்காமல் சிக்கினர். இதன் மூலம், கணேச மூர்த்தி 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினார். யோ மகேஷ் (11), சுபாஷ் (8) நிலைக்கவில்லை.

சரவணன் (30) ஆறுதல் தந்தார். மற்றவர்களும் ஏமாற்ற, சேப்பாக்கம் அணி 18.5 ஓவரில் 93 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இதன் மூலம், இத்தொடரின் முதல் 'சீசனில்' துாத்துக்குடி அணி கோப்பை கைப்பற்றியது.

ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டி: 239 பதக்கங்களுடன் சீனா முதலிடம்.. 43வது இடத்தில் இந்தியா!


ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 239 பதக்கங்களைப் பெற்று சீனா பதக்க பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன. கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
இந்தப் போட்டியில் 107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது.
இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியிலும் பதக்க பட்டியலில் சீனாவே முதலிடம் பிடித்திருந்தது. அப்போது 231 பதக்கங்களை அந்த நாடு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதவி ஆணையர், பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 72 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணி வாரியாக அசிஸ்டன்ட் கமிஷனர் பணிக்கு 2 பேரும், பிரின்சிபால் பணிக்கு 40 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 880 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 660 பேரும், பட்டதாரி ஆசிரியர் (மூன்றாம் மொழிகள்) 255 பேரும், மிஸ்க் கேட்டகரி டீச்சர் பணிக்கு 235 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு: 
உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31–7–2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி: 
முதுநிலை அறிவியல் மற்றும் கலைப்படிப்புகளுடன், பி.எட். படித்தவர்கள், இளநிலை பட்டிப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: 
உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1500–ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9–10–2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 14–10–2016–ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத் தேசிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும். 
இது பற்றிய விவரங்களை   www.nvs-hq.org/ www.mecbsegov.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்திபள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.
20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை. இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'

பி.எட்.: செப். 30-க்கு பின்னர் சேர்க்கை நடத்த அனுமதி இல்லை !


இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பில் (பி.எட்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை செப். 30-க்கு பின்னர் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 பி.எட். கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,777 இடங்களுக்கு மட்டும், ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 650-க்கும் அதிகமான சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் முழுவதையும், அவர்களே நிரப்பிக் கொள்கின்றனர்.

இந்த இரண்டு ஆண்டு படிப்பில் 2016-17ஆம் கல்வியாண்டு சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அரசு சார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடத்தப்பட்டது.


இதில் மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் மட்டும் நிரம்பின. நிரப்பப்படாத 463 இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


செப். 30 வரையே சேர்க்கை அனுமதி: ஒட்டுமொத்த பி.எட். சேர்க்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து பி.எட். கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

அதில், அரசுக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். சேர்க்கை அன்றைய தினத்தோடு நிறைவு செய்யப்படுகிறது.

இதனால், கல்லூரிகள், பி.எட். படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை செப்டம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
இதன்படி, தனியார் பி.எட். கல்லூரிகள் 30-ஆம் தேதி வரை சேர்க்கை நடத்திகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

CCE GRADE FORM

எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு

பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பல தனியார் வங்கிகள், இத்தகைய கார்டுகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளன. தேசிய வங்கிகள், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க கோரின; ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.
வரும், 30ல் கெடு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வங்கிகள் கோரின; அதை ஏற்க மறுத்து, ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள அறிக்கை: பாதுகாப்பு அம்சம் பொருந்திய, ஏ.டி.எம்., கார்டுகளை வழங்குவதற்கான காலக்கெடு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டது; இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. அதனால், ஏற்கனவே கூறியபடி, 2018 துவக்கத்தில், 'சிப்' பொருந்திய ஏ.டி.எம்., கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாணவர்களின் ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும்.
இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார் எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று துவக்கம்


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று துவங்கியது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் மனுவை தாக்கல் செய்யலாம்.

விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் செப்., 22ம் தேதியாகும். தி.மு.க. சார்பில் 19-ந்தேதி முதல் விருப்பமனு பெறப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு


பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள்வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார்.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!


இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது.

இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன், ஐடியா
நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்துபவர்களை  தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்தது.
இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வழங்க வேண்டும். ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்களை துண்டித்துள்ளது.
ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது. ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ் கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது.
டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு 14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது.

தமிழகத்தில் புதிதாக ஐந்து வட்டாரங்கள் முதல்வர் அறிவிப்பு


தமிழகத்தில் புதிதாக ஐந்து வட்டங்கள் அறிவிப்பு
கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் பிரித்து ஜமீன் கயத்தார்.
காட்டுமன்னார்கோயில் பிரித்து ஸ்ரீமுஷ்ணம்.

திருப்பத்தூர் பிரித்து சிங்கம்புணரி.
உடையார்பாளையம் பிரித்து ஆண்டிமடம்.
நீடாமங்கலம் பிரித்து கூத்தாநல்லூர்.
முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கொலைகார அப்பா! சுயநல உறவுகள்!: மாரியப்பன் கண்ணீர்


"ரியோ பாராலிம்பிக்ஸில் நான் பதக்கம் வாங்கியதை அடுத்து நான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. இங்கு ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் பயந்து கிடக்கிறேன்.
என் அம்மாவும் மிகுந்த பயத்துடன் இருக்கிறார். எனது வெற்றிக்கு கொஞ்சம் கூட தொடர்பே இல்லாதவர்கள் இப்போது எங்களைத் வருகிறார்கள்.
என் அம்மாவுக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் அழுகிறார் " என்று பயமும், வருத்துமாகச் சொல்கிறார், பாராலிம்பிக் நிறைவுவிழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிச் செல்லவிருக்கும் மாரியப்பன். ரியோ பராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றதும், இதையடுத்து, தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ. 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளதும் தெரிந்த விசயம்தான்.
இந்த நிலையில், மாரியப்பன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ரூ. 30 லட்சத்தை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக அளித்ததாக வதந்தி பரவியது. சேலம் பெரியவடகம்பட்டியைச் அரசு பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாக இந்த தகவல் வெளியானது. ஆனால்,' அப்படி நான் கூறவில்லை ' என ராஜேந்திரன் மறுத்துள்ளார்.
இதற்கிடையே சேலம் பகுதியைச் சேர்ந்த சில வங்கிகள் மாரியப்பன் குடும்பத்தார், உறவினர்களை அணுகி பரிசுப் பணத்தை தங்கள் வங்கியில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தி வருகின்றன. தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் கார் பரிசளிக்கவும் சில வங்கிகள் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம்தான் மாரியப்பனின் தாயார் சரோஜாவை வெகுவாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் மாரியப்பன் ஒரு ஆங்கிலப் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கங்களை, வருத்தங்களை கொட்டியிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
" பாராலிம்பிஸ்ல் நான் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த வெற்றிக்கு கொஞ்சமும் தொடர்பே இல்லாதவர்கள் எல்லாம் என் குடும்பத்தினரை தேடி வருகிறார்கள்.
உண்மையில் எனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனது பயிற்சியாளர் சத்ய நாராயாணா சார் மட்டும்தான். இரண்டு வருடங்களுக்கு முன் சத்யாநாராயணா சாரை நான் சந்தித்தேன். அன்று முதல், அவர்தான் எனக்கு பயிற்சி அளிக்கிறார். அவரை சந்தித்த பிறகுதான் காலணி அணிந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். அதுவரைக்கும் வெறுங்காலில்தான் உயரம் தாண்டி வந்தேன்.
மாதம் எனக்கு ரூ. 10 ஆயிரம் அளித்து எனது குடும்பத்துக்கும் சத்ய நாராயாணா சார் உதவி செய்தார். பயிற்சி அளிக்கவே கட்டணம் வாங்கும் இந்த காலத்தில் பணம் கொடுத்து யார் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், சத்திய நாராயாணா சார் எனக்குச் செய்தார். அவர்தான் என்னை ஜெர்மனிக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார். எனக்காக அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். சத்யநாராயணா சார் தந்த பயிற்சியிலும் உதவியினாலும்தான் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
இப்போது நான் வெற்றி பெற்ற பிறகு ராஜேந்திரன், இளம்பரிதி போன்றவர்கள் உரிமை கொண்டாடுவதாக எனக்குத் தகவல் வருகிறது. அவர்களுக்கும் இந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழ்நாடு பராலிம்பிக் சங்கம் எனக்கு அணு அளவும் உதவி செய்ததில்லை. இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் எனது குரு சத்ய நாராயாண சார்தான். இந்த பதக்கத்தை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
என் அம்மா கூலி வேலை பார்த்து, குடும்பத்தைக் காப்பாற்றினார். அப்போது எனது உறவினர்கள் என்னையும் எனது அம்மாவையும் மதித்ததே இல்லை. ஆனால் இப்போது எனது தாயாரை தேடி வந்து பேசுகிறார்களாம். பாசத்தைப் பொழிவதைப்போல நடிக்கிறார்களாம். என்னிடம் போனில் சொல்லி அழுகிறார்.
அதனால் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். பயத்துடனே ஒவ்வொரு நிமிடங்களையும் கழிக்கிறேன். எனது அம்மாவை எப்போது பார்க்கப் போகிறேன் என்று இருக்கிறது. சில விஷயங்களைக் கூறி என்னிடம் அம்மா அழும் போது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.
என் அம்மாவையம், தான் பெற்ற நான்கு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு சென்றவர் என் தந்தை தங்கவேலு இப்போது மீண்டும் எங்களுடன் சேர முயற்சிக்கிறாராம். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் என் அம்மாவை கொடுமைப்படுத்தியவர் அவர். ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார். எந்த காரணத்தைக் கொண்டும் அவர் முகத்தையே நான் பார்க்க விரும்பவில்லை அவருக்கு என் மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் அவ்வளவுதான்.!" என்று கண்ணீரோடு பேசியிருக்கிறார் மாரியப்பன்.
தங்கம் வென்று பரிசுகள் குவிந்ததும்.
ஓடிப்போன தந்தை வருகிறார். மதிக்காத உறவினர்கள் நெருங்குகிறார்கள். வெற்றியில் தொடர்பே இல்லாதவர்கள் உரிமை கோருகிறார்கள்.
மாரியப்பனின் வென்ற தங்கப் பதக்கத்தின் பிரகாசத்தில் வெளிப்படுகிறது.. மனிதர்களின் கொடூர முகங்கள்!

ரூ.500-க்கு 600 GB - ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி?!


கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.
இந்த ஒரு அறிவிப்பால சுமார் 20,000 கோடி ரூபாய் வரை மற்ற டெலிகம்யூனிகேஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இப்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மற்ற நிறுவனங்கள் மீண்டதா என்று தெரியவில்லை. அதற்குள் ஜப்பான் மீது இரண்டாவது அணு குண்டை வீசியது போல, அடுத்த ஆஃபர் குண்டுகளை பொழியத் தொடங்கி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.

பயன்படுத்தும் இணையத்தின் வேகம், பயன்படுத்தும் அளவு, விலை ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து அலறவிட்டிருக்கிறது.
இந்த அணு குண்டை 3 வகையாக பிரிக்கலாம்.
1. விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் திட்டங்கள் :
உதாரணமாக 500 ரூபாய் செலுத்தினால், 600 ஜிபி நெட்டை, 15 எம்.பி.பி.எஸ் வேகத்தில், அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மற்ற திட்டங்களை கீழே பாருங்களேன்.
இப்படி 500 ரூபாயில் தொடங்கும் திட்டம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை இருக்கிறது.


2. Mbps அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், 2000 ஜிபி இணையத்தை, 1500 ரூபாய் செலுத்தி, அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையான திட்டங்களில் எம்பிபிஎஸ் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இணைய டேட்டா அளவு குறையும், விலையும் அதிகரிக்கும். ஆனால் வேலிடிட்டி நாட்கள் குறையாது.


3. வால்யூம்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இதில் நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் டேட்டாக்களை ஜிபியில் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறன. நாள் ஒன்றுக்கு 5 ஜிபி தொடங்கி 60 ஜிபி வரை திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஒரு குறை என்ன என்றால் எவ்வளவு வேகத்தில் இணையம் கிடைக்கும் என்பதை சொல்லவில்லை. அதே போல் விலையும் சற்று புரியாத வகையிலேயே இருக்கிறது.

மிக முக்கியமான விஷயம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எந்த அதிகாரிகளாலும் இதுவரை இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த அளவுக்கு இணையத்தில் புதிய அணு குண்டுகளை கட்டாயமாக வீசும் என்பதை மட்டும் அனலிஸ்டுகளும், டெலிகம்யூனிகேஷன் வல்லுநர்களும் கணித்திருக்கிறார்கள்.
அப்புறம் என்ன, சும்மாவே யூடிப்ல படம் பாப்போம், இனிமே ஒன்லி ஹெச்டி தானே. வாங் போய் படம் பாப்போம் பாஸ்.

டிஎஸ்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்: 81 பேரும் பணியை தொடரலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுதில்லி: டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் 83 பேர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2000-2001ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி "குரூப் 1' தேர்வில் தேர்ச்சி பெற்று 2005-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட 83 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை தொடக்கத்தில் உறுதி செய்தது. ஆனால் அதன் பிறகு, பாதிக்கப்பட்ட 83 பேரும், தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி ஆகியவற்றின் சார்பிலும் முறையீடு செய்யப்பட்டதையடுத்து, முன்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்ததது. அப்போது, 83 அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த மனுதாரர்களில் ஒருவரான மாதவன் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி முன் வைத்த வாதம்:
"2001-ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான விதிமுறைகள் தெளிவாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. அதில், நீல நிற மை கொண்ட பேனாவை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து.
ஆனால், தேர்வு எழுதிய பலர் இந்த விதியைப் பின்பற்றாதது பின்னர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 83 பேரின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதற்கான காரணமும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யும் வகையில் தொடரப்பட்டுள்ள தமிழக அரசும் சம்பந்தப்பட்டவர்களும் தொடர்ந்துள்ள முறையீட்டு வழக்கு தேவையற்றது. எனவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி "குரூப் 1 தேர்வு உரிய விதிமுறைகளின்படியே நடைபெற்றது. இந்த விவகாரத்தில்,தேர்வு முறையை மனுதாரர் (மாதவன்) புரிந்து கொள்ளவில்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த வழக்கில் 83 பேரின் விடைத்தாள்களை சரி பார்க்க வசதியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (யுபிஎஸ்சி) மனுதாரராகச் சேர்க்க நீதிமன்றம் விரும்புகிறது. '
எனவே, இது பற்றிய யுபிஎஸ்சியின் நிலையை அடுத்த ஆண்டு (2015) ஜனவரிக்குள் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 83 பேரும் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் பணியில் தொடரலாம் எனவும் அவர்களுக்கு பணி வழங்க உத்தரவிட்டு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
83 பேரில் 2 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் எஞ்சிய 81 பேர் பணியில் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் : பள்ளி கல்வித்துறை


சென்னை: காவரி நீர் பிரச்னைக்காக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படஉள்ளது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், திட்டமிட்ட படி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு:அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாருடன் இணைந்து மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் நாளை கல்லூரிகள் இயங்கும்:தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லூரிகளுக்கு உரிய பாதுகாப்புவழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

தருமபுரியில் சட்டக் கல்லூரி அமைக்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்


                        தருமபுரியில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இந்திய மாணவர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 10-ஆவது மாநாடு சிஐடியூ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.                  மாவட்டத் தலைவர் ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் எஸ்.இளையமதி வரவேற்றார். மாநிலச் செயலர் பி.உச்சிமாகாளி தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் ஏ.பிரசாந்த் குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் தலைவர் எம்.மாரிமுத்து, மாநிலத் துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் ஆகியோர் பேசினர்.

 முன்னதாக எஸ்.வி. சாலையில் உள்ள காந்தி சிலை அருகிலிருந்து பல்வேறு வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணியாக வந்து மாநாடு நடைபெறும் இடத்தை அடைந்தனர்.

 மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும்.

 அரசுப் பள்ளி, கல்லூரிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள தருமபுரி டாக்டர் அம்பேத்கர் அரசுக் கல்லூரி மாணவர் விடுதியை புதுப்பித்து கட்டவேண்டும்.

 பைசுஅள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

 தருமபுரியில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் பிற்பட்டோருக்கான அரசுக் கல்லூரி விடுதி அமைக்க வேண்டும். அரசாணை எண். 92-ஐ அமல்படுத்த வேண்டும். அரசு விடுதி மாணவர்களின் உணவுப் படியை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாநாட்டில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.எம்.சசிகுமார், மாவட்டச் செயலராக எஸ்.இளையமதி உள்ளிட்ட 20 பேர் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்

நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!


தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் நாளை முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அரசுப் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேரும், சென்னை மாநகரில் 15 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.