Title of the document


இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பில் (பி.எட்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை செப். 30-க்கு பின்னர் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 பி.எட். கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,777 இடங்களுக்கு மட்டும், ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 650-க்கும் அதிகமான சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் முழுவதையும், அவர்களே நிரப்பிக் கொள்கின்றனர்.

இந்த இரண்டு ஆண்டு படிப்பில் 2016-17ஆம் கல்வியாண்டு சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அரசு சார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடத்தப்பட்டது.


இதில் மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் மட்டும் நிரம்பின. நிரப்பப்படாத 463 இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


செப். 30 வரையே சேர்க்கை அனுமதி: ஒட்டுமொத்த பி.எட். சேர்க்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து பி.எட். கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

அதில், அரசுக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். சேர்க்கை அன்றைய தினத்தோடு நிறைவு செய்யப்படுகிறது.

இதனால், கல்லூரிகள், பி.எட். படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை செப்டம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
இதன்படி, தனியார் பி.எட். கல்லூரிகள் 30-ஆம் தேதி வரை சேர்க்கை நடத்திகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post