Title of the document


"ரியோ பாராலிம்பிக்ஸில் நான் பதக்கம் வாங்கியதை அடுத்து நான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. இங்கு ரியோவில் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் பயந்து கிடக்கிறேன்.
என் அம்மாவும் மிகுந்த பயத்துடன் இருக்கிறார். எனது வெற்றிக்கு கொஞ்சம் கூட தொடர்பே இல்லாதவர்கள் இப்போது எங்களைத் வருகிறார்கள்.
என் அம்மாவுக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் அழுகிறார் " என்று பயமும், வருத்துமாகச் சொல்கிறார், பாராலிம்பிக் நிறைவுவிழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிச் செல்லவிருக்கும் மாரியப்பன். ரியோ பராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றதும், இதையடுத்து, தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ. 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளதும் தெரிந்த விசயம்தான்.
இந்த நிலையில், மாரியப்பன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ரூ. 30 லட்சத்தை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக அளித்ததாக வதந்தி பரவியது. சேலம் பெரியவடகம்பட்டியைச் அரசு பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாக இந்த தகவல் வெளியானது. ஆனால்,' அப்படி நான் கூறவில்லை ' என ராஜேந்திரன் மறுத்துள்ளார்.
இதற்கிடையே சேலம் பகுதியைச் சேர்ந்த சில வங்கிகள் மாரியப்பன் குடும்பத்தார், உறவினர்களை அணுகி பரிசுப் பணத்தை தங்கள் வங்கியில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தி வருகின்றன. தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் கார் பரிசளிக்கவும் சில வங்கிகள் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம்தான் மாரியப்பனின் தாயார் சரோஜாவை வெகுவாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் மாரியப்பன் ஒரு ஆங்கிலப் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கங்களை, வருத்தங்களை கொட்டியிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
" பாராலிம்பிஸ்ல் நான் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த வெற்றிக்கு கொஞ்சமும் தொடர்பே இல்லாதவர்கள் எல்லாம் என் குடும்பத்தினரை தேடி வருகிறார்கள்.
உண்மையில் எனது வெற்றிக்கு முழு முதல் காரணம் எனது பயிற்சியாளர் சத்ய நாராயாணா சார் மட்டும்தான். இரண்டு வருடங்களுக்கு முன் சத்யாநாராயணா சாரை நான் சந்தித்தேன். அன்று முதல், அவர்தான் எனக்கு பயிற்சி அளிக்கிறார். அவரை சந்தித்த பிறகுதான் காலணி அணிந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். அதுவரைக்கும் வெறுங்காலில்தான் உயரம் தாண்டி வந்தேன்.
மாதம் எனக்கு ரூ. 10 ஆயிரம் அளித்து எனது குடும்பத்துக்கும் சத்ய நாராயாணா சார் உதவி செய்தார். பயிற்சி அளிக்கவே கட்டணம் வாங்கும் இந்த காலத்தில் பணம் கொடுத்து யார் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், சத்திய நாராயாணா சார் எனக்குச் செய்தார். அவர்தான் என்னை ஜெர்மனிக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார். எனக்காக அவர் நிறைய கஷ்டப்பட்டுள்ளார். சத்யநாராயணா சார் தந்த பயிற்சியிலும் உதவியினாலும்தான் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
இப்போது நான் வெற்றி பெற்ற பிறகு ராஜேந்திரன், இளம்பரிதி போன்றவர்கள் உரிமை கொண்டாடுவதாக எனக்குத் தகவல் வருகிறது. அவர்களுக்கும் இந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழ்நாடு பராலிம்பிக் சங்கம் எனக்கு அணு அளவும் உதவி செய்ததில்லை. இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் எனது குரு சத்ய நாராயாண சார்தான். இந்த பதக்கத்தை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
என் அம்மா கூலி வேலை பார்த்து, குடும்பத்தைக் காப்பாற்றினார். அப்போது எனது உறவினர்கள் என்னையும் எனது அம்மாவையும் மதித்ததே இல்லை. ஆனால் இப்போது எனது தாயாரை தேடி வந்து பேசுகிறார்களாம். பாசத்தைப் பொழிவதைப்போல நடிக்கிறார்களாம். என்னிடம் போனில் சொல்லி அழுகிறார்.
அதனால் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். பயத்துடனே ஒவ்வொரு நிமிடங்களையும் கழிக்கிறேன். எனது அம்மாவை எப்போது பார்க்கப் போகிறேன் என்று இருக்கிறது. சில விஷயங்களைக் கூறி என்னிடம் அம்மா அழும் போது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.
என் அம்மாவையம், தான் பெற்ற நான்கு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு சென்றவர் என் தந்தை தங்கவேலு இப்போது மீண்டும் எங்களுடன் சேர முயற்சிக்கிறாராம். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் என் அம்மாவை கொடுமைப்படுத்தியவர் அவர். ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார். எந்த காரணத்தைக் கொண்டும் அவர் முகத்தையே நான் பார்க்க விரும்பவில்லை அவருக்கு என் மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் அவ்வளவுதான்.!" என்று கண்ணீரோடு பேசியிருக்கிறார் மாரியப்பன்.
தங்கம் வென்று பரிசுகள் குவிந்ததும்.
ஓடிப்போன தந்தை வருகிறார். மதிக்காத உறவினர்கள் நெருங்குகிறார்கள். வெற்றியில் தொடர்பே இல்லாதவர்கள் உரிமை கோருகிறார்கள்.
மாரியப்பனின் வென்ற தங்கப் பதக்கத்தின் பிரகாசத்தில் வெளிப்படுகிறது.. மனிதர்களின் கொடூர முகங்கள்!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post