கணக்கு
என்றாலே பலருக்கு வேப்பங்காய் போல கசக்கும். ஆனால், அரசுப் பள்ளி
ஆசிரியரான ரூபி கேத்தரின் தெரசா, கணக்குப் பாடத்தையே சுவையாக நடத்துகிறார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றுபவர் ரூபி கேத்தரின் தெரசா. கணித ஆசிரியரான இவர்,
கணிதத்தில் கடினமான பகுதிகளையும் எளிமையாக நடத்துவதில் கைதேர்ந்தவர்.
இவரைப் பற்றி இன்னொரு வியப்பூட்டும் செய்தியும் இருக்கிறது. கணக்கு
பாடங்களை யூ-டியூப் வீடியோக்களாகவும் நடத்து கிறார்.
அது குறித்து அவரிடம் பேசினோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
உங்களை பற்றி சுருக்கமாக கூறுங்கள்?
“நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுதான் என் சொந்த ஊர். அரசு வேலைக்கு
வருவதற்கு முன் சுமார் 18 ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியராகப்
பணியாற்றினேன். 2007-ம் ஆண்டுதான் அரசுப் பணி கிடைத்தது. சேலத்திலும், பின்
முளைச்சூரில் பணியாற்றி, இப்போது இந்தப் பள்ளிக்கு வந்திருக்கிறேன்.”
பலருக்கு கடினமானதாக இருக்கும் கணக்கு பாடத்தை, மிக எளிமையாக கற்றுக்கொடுப்பதாக கூறுகிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?
“ஏழைக் குழந்தைகளே பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு, கல்விதான் அடித்தளம். இதை
உணர்ந்ததால்தான், அன்பான ஆசிரியராகவும், புதுமையான ஆசிரியராகவும்
திகழ்கிறேன். மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும் கணக்கு பாடங்களை
எளிமைப்படுத்த முயல்கிறேன். வாய்ப்பாட்டை சினிமா பாடல் இசையோடு கலந்து
மனதில் பதியவைத்தேன். ‘ஒரு மதிப்பெண்' கேள்வி-பதில்களை மனப்பாடம் செய்யாமல்
இருக்க, அதன் பின்னணியில் இருக்கும் கணக்குகளை புரியவைக்கிறேன்.
‘பவர்பாய்ண்ட்' மூலமாகவும் பாடம் நடத்துகிறேன்.”
வீடியோ காட்சி மூலம் கணக்கு பாடம் நடத்தியது ஏன்? எப்போது?
இதற்கு முன் பணியாற்றிய பள்ளிகளில், எல்லா வகுப்பிலும் கரும்பலகை
இருக்காது. அதனால் கரும்பலகை இருக்கும் வகுப்புகளில் முன்கூட்டியே அனுமதி
வாங்கி, கணக்கு பாடம் நடத்துவது சிரமமாக இருக்கும். அப்படி நடத்தினாலும்
அன்று பள்ளிக்கு வராத மாணவர்களால் அதை கற்க முடியாத சூழல் இருந்தது.
இதற்காகவே நான் கணக்கு பாடம் நடத்துகையில், என்னுடைய ஸ்மார்ட்போனில் அதை
வீடியோவாக பதிய ஆரம்பித்தேன். வகுப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்த
நாட்களில், வீடியோ மூலமாக கணக்கு பாடம் படிக்க ஆரம்பித்தனர்.”
அரசுப் பள்ளி ஆசிரியர், யூ-டியூப் கணக்கு ஆசிரியராக மாறியது எப்படி?
“2016-ம் ஆண்டில் இருந்தே என்னுடைய கணக்கு வகுப்புகள் வீடியோவாக
பதியப்பட்டன. கணக்கு பாடத்தின் கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற எளிய
பாடங்களில் தொடங்கி, 10-ம் வகுப்பு கணக்குகள், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2
கணக்குகள் வரை எல்லா கணக்கு பாடங்களும் வீடியோவாக மாறின. அவற்றை
ஆசிரியர்கள் நிரம்பி இருக்கும் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பகிர ஆரம்பித்தேன்.
கற்பித்தல் முறை எளிமையாகவும், புதுமையாகவும் இருந்ததால், பல ஆசிரியர்களின்
ஆலோசனைப்படி, ‘ரூபி தெரசா' என்ற யூ-டியூப் சேனலின் கீழ் அந்த வீடியோக்களை
கொண்டு வந்தேன். மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் சேர்ந்தன.
இன்று 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் என் சேனலை பின் தொடர்கிறார்கள்.
லட்சக்கணக்கானோர் என் கணக்கு பாட வீடியோக்களை பார்த்து பயன் அடைந்திருக்
கிறார்கள்.”
கொரோனாவினால் தள்ளிப்போகும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்காக சிறப்பு வீடியோக்களை பகிர்ந்திருக்கிறீர்கள். அதுபற்றி கூறுங்கள்?
“10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் ஒருபக்கம்
நடக்கிறது. எதை படிப்பது?, எப்படி படிப்பது?, யாரிடம் சந்தேகங்களை
கேட்பது? போன்ற பல கேள்விகளும் மாணவர்களிடையே எழுகிறது. இதற்கு
பதிலளிக்கும் வகையில்தான், நான் 10-ம் வகுப்பு தொடர்பாக 45 சிறப்பு
வீடியோக்களை யூ-டியூபில் வெளியிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 10-ம்
வகுப்பின் முக்கிய பாடங்களையும், புரியாத பாடங்களையும் எளிமைப்படுத்தினேன்.
‘உறவுகளும் சார்புகளும்', ‘அணிகை', ‘புள்ளியல்', ‘வர்கமூலம்',
‘நாற்கரத்தின் பரப்பளவு', ‘வரைபடம்', ‘செய்முறை வடிவியல்' என பல
பாடத்திட்டங்களை, யூ-டியூப் பாடமாக நடத்தியிருக்கிறேன். பொதுத் தேர்வு
எப்போது நடந்தாலும், மாணவர்கள் தங்களது கணித அறிவை வளர்த்து கொள்ளவேண்டும்
அதற்கு இந்த யூ-டியூப் பாடம் உதவியாக இருக்கும்.”
யூ-டியூப் ஆசிரியராக, பெருமைப்படும் தருணம்?
ஆசிரியர்கள், மாணவர்கள், என் பிள்ளைகள் என பலரது உதவியால் யூ-டியூப்
ஆசிரியராக மாறினேன். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்
கைகளால் ‘கனவு ஆசிரியர்' என்ற விருது கிடைத்தது. நிறைய பிரபலங்களின்
பாராட்டுகளும் கிடைத்தன. இருப்பினும் யூ-டியூப் பக்கத்தில், பதிவாகும்
மாணவர்களின் ‘நன்றி கருத்துகள்' என்னை உற்சாகமூட்டுகின்றன. வீடியோக்கள்
உலகளவில் பகிரப்படுவதால், ஆங்கிலத்தில் பாடம் நடத்தும்படி கூறுகிறார்கள்.
இருப்பினும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்,
கணக்கு பாடத்தை தமிழ் மொழியிலேயே நடத்த ஆசைப்படுகிறேன்.
Post a Comment