Title of the document



கல்வி மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டின் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு ஆசிரியரும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு தனது சேவையினை சிறப்புற வழங்குதல் என்பது அவசியமாகும்.
அந்த வகையில் தற்போது பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்களுக்கிடையிலும் மற்றும் பாடசாலை சார்ந்த பல்வேறு உறுப்பினர்களிடையிலும் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இம் முரண்பாடுகளின் காரணமாக பாடசாலைக் கருமங்களை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. எனவே முரண்பாடுகளை சுமூகமாகத் தீர்க்கவேண்டியது அவசியமாகும். இக்கட்டுரையின் நோக்கம் ஒவ்வொரு ஆசிரியரும் தனது வகிபாகங்களை அறிந்து செயற்படுவதோடு பாடசாலையில் ஆசிரியர்களின் வகிபாகங்களை சிறந்த முறையில் கையாளவேண்டும் என்பதாகும்.


ஆசிரியர்கள் தனிமனிதனையும், சமூகத்தையும் ஏன் முழு உலகினையும் கூட உருவாக்குபவர்கள். ஆசிரியர்கள் அன்றி கல்விச் செயல்முறை இடம்பெற இயலாது. கல்வியின் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும் கல்வி நிர்வாகச் செயற்பாடுகள் காலத்துக்கு ஏற்றனவாயும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களைப் பொறுத்ததேயாகும். மாணவர்களது அறிவுமட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவுமட்ட வளர்ச்சி என்பனவற்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்ற கோட்பாடும் காணப்படுகின்றது.
பாரம்பரிய சமுதாயத்தில் ஆசிரியர்களின் சேவை இறைதொண்டாகக் கருதப்பட்டது. குருகுலக் கல்விமுறையும் குரு, சிஷ்ய மரபும் ஆசிரியருக்கிருந்த அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டின. அரசுகல்விப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் ஆசிரியர் அந்தஸ்த்து, கல்வி, சம்பளம், சொந்த நலன்கள் போன்ற அனைத்து அம்சங்களிலும் அரசின் வழிக்காட்டலும் கட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கின. அதன் எதிர்விளைவாகக் காலப்போக்கில் ஆசிரியர்களது சேவை தன்மதிப்பை இழக்கத் தொடங்கியது. அதாவது அரசுகள் ஆசிரியர்களின் நலன்களில் போதிய அக்கறை எடுக்காமையும் அவர்களது சுய கெளரவம், கடமை என்பவற்றை மதிக்கத் தவறியமையுமே ஆசிரியர்களின் இந்நிலைக்குக் காரணமாகும்.


1966 இல் பரீசில் யுனெஸ்கோவில் நடைபெற்ற ஆசிரிய அந்தஸ்துப் பற்றிய சர்வதேச மாநாடு இவற்றைக் கருத்திற் கொண்டு விதப்புரைகளை தயாரித்தது. இந்த விதப்புரைகள் ஆசிரியர் அந்தஸ்த்தினை உயர்த்தும் ஒரு சாசனமாக அமைந்தது யுனெஸ்கோவின் தீர்மானத்தின்படி முதலாவது உலக ஆசிரியர் தினம் 1991 அக்டோபர் 6 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர் தம் நிலையை உணர்வும் சமூகத்திற்கு ஆசிரியரின் மதிப்பை உணர்த்தவும் இத்தினம் நினைவுகூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் கற்பித்தல் அல்லது ஆசிரியர் தொழிலானது ஓர் உயர் தொழிலாகும். அதனை வாண்மை எனவும் குறிப்பிடுவர். வாண்மை என்பதை அல்லது உயர் தொழில் என்பதை Profession எனும் ஆங்கிலப் பதத்தால் குறிப்பிடலாம். இப்பதம் ஆசிரியர் தொழிலுக்கு பொறுகின்றது எனலாம். கற்பித்தல் ஓர் அர்ப்பணிப்பு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் இத் தொழிலுக்கான வாண்மையை நிலைநிறுத்த பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளது. அவையாவன

ஓர் உயர்தொழில் ஓர் அத்தியாவசியம் சேவையை வழங்குவது. தனிப்பட்ட குழந்தையைப் பொறுத்தமட்டில் அதற்கு கல்வி வழங்குவது ஓர் அவசியத் தேவை. பிறந்தவுடனேயே கற்கத் தொடங்கும் குழந்தைக்கு பாடசாலைக் கல்விக்கு முன்பிருந்தே ஆசிரியரது பங்களிப்பு அதன் நீண்டகால நடத்தை உருவாக்கத்திற்குப் பங்களிக்கின்றது. பாலர் முன்பள்ளியில் இருந்து ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கு இன்றியமையாதது. குழந்தையானது தனது குடும்பத்திற்கு வெளியே பரிவும், அன்பும் கொள்ளும் முதலாவது நபராக ஆசிரியர் காணப்படுகின்றார். எனவே குழந்தைக்கு ஓர் அவசியமான சேவையை வழங்கும் நபராக ஆசிரியர் விளங்குகின்றார்.
இதனைப்போலவே ஆசிரியர் ஒருவர் அறிவுத் தளத்தினைக் கொண்டிருப்பது அவசியமாகும். (Body Of Knowledge). ஒரு வைத்தியன் தனக்குரிய அறிவுத் தளமொன்றைக் குறிப்பிட்ட ஒரு நீண்டகாலப்பகுதிக்கு கற்கவேண்டி இருக்கின்றது. அதுபோலவே ஆசிரியரும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு கல்வியையும், பயிற்சியையும் பெறவேண்டி உள்ளது. அத்துடன் அல்லாமல் திறன்களையும் அத்தொழிலுக்கு பொருத்தமான உளப்பாங்கினையும் ஆசிரியர்கள் வளத்துக் கொள்கின்றார்கள்.
ஓர் உயர் தொழிலாளன் பெற்றிருக்க வேண்டிய திறன்களும் உயர் திறன் வகையைச் சார்ந்தவை. அத்திறன்கள் அறிவை அடிப்படையாகக் கொண்டவை. சாதாரணத் தொழில்நுட்ப திறன்களாக அவை இருக்காது. போதிய அறிவாற்றலைக் கொண்ட அல்லது அறிவாற்றல் தேவைப்படும் திறன்களாக அவை உள்ளன.


ஆசிரியர் தொழில் அல்லது கற்பித்தல் தொழில் விடய, பாட அறிவை மட்டுமன்றி கல்விக் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. கல்விக் கோட்பாட்டு அறிவின்றி ஓர் ஆசிரியன் “ஆசிரியன்” என்ற கணிப்புக்குரியவனாகக் காணப்படமாட்டான். ஆகவே கல்விக் கோட்பாடு தொடர்பான அறிவினை ஆசிரியர் கொண்டுள்ளான்.
ஓர் உயர் தொழில் உயர்தொழில் அதற்கான தொழில் சுதந்திரத்தைக் கொண்டதாகும். (ProfesinalFeedam) தேசிய கல்விக் கொள்கை,செயல்முறை என்பவற்றுக்குட்பட்டு ஓர் ஆசிரியன் தனது தொழிலை ஆற்றும்போதும் அவ்வெல்லைக்குட்பட்ட தொழில் சுதந்திரம் அவனுக்குண்டு அதன் காரணமாக அவன் புதியனவற்றை உருவாக்கவும், அதனைக் கற்பித்தலில் பிரயோக்கிவும் அவனுக்கு சுதந்திரமுண்டு. தனது தொழில் எவ்வகையில் ஆற்றப்படவேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் உடையவனாக அவன் உள்ளான். தனது மாணவன் தொடர்பாக அவனது கல்வி வளர்ச்சி தொடர்பாக வழிகாட்டவும்,தீர்மானத்தை மேற்கொள்ளவும் ஆசிரியருக்கு தொழில் சுதந்திரமுண்டு.

உயர் தொழிலானது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பாங்கினது. இவ்வுயர் தொழிலானது அறிவுத்தொகுதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும்,தொடர்ந்து மாற்றமுறும் தன்மை கொண்ட திறன்களைக் கொண்டிருப்பதாலும் அதுதொழில் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லுதல் வேண்டும்.

கல்விச் செயல் முறைகள்,பாட அறிவு என்பன வளர்ச்சியும், மாற்றமும் பெற்றுச் செல்வதால் ஆசிரியன் அவற்றை தொடர்ந்து கற்று, சேவைக்காலத்தில் பயிற்சிகளைப் பெற்றுத் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளான். உயர்தொழிலானது தனக்கென உரிய ஓர் ஒழுக்கக் கோவையொன்றினைக் கொண்டிருக்கும். ஓர் உயர் தொழிலாளனை மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியதாக்குவது இவ் ஒழுக்கக் கோவையாகும்.

வைத்தியர்கள், சட்ட அறிஞர்கள், பொறியலாளர்கள் ஆகியோருக்கு ஓர் ஒழக்கக்கோவை இருப்பதுபோன்று ஆசிரியர்களுக்கும் அவ்வாறான ஒழுக்கக்கோவை கல்வியமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஓர் எல்லைக்குட்பட்டுச் செயற்படக் கூடியதான பொருத்தமான தொடர்பை விளக்குவதாகவும் இவ் ஒழுக்கக்கோவை விளங்குகின்றது.

உயர் தொழில் ஒன்றிற்கு இருக்கக் கூடியமேலும் சிலபண்புகளாகத் தொழிற் சங்கம் ஒன்றைக் கொண்டித்தல், தனக்கே உரியதும், பொருத்தமான சம்பளத் திட்டமொன்றைக் கொண்டிருத்தல், பதவியுயர்வு முறையொன்றைக் கொண்டிருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளின் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ஆசிரியர் தொழில் ஒரு வாண்மைமிக்கத் தொழிலாகக் காணப்படுகின்றது எனலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post