அழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்

Join Our KalviNews Telegram Group - Click Here

 அழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்


சில மாணவர்களுக்கு, இயல்பிலேயே அழகான கையெழுத்து அமையப் பெற்றிருக்கும். சிலருக்கு சுமாராகவும், சிலருக்கு மோசமான நிலையிலும் இருக்கும்.
மோசமான கையெழுத்தை, எப்படி அழகான கையெழுத்தாக மாற்றலாம் என்ற ஆலோசனைகள், கல்விமலர் இணையதளத்தில் முன்பே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, அதைப்பற்றி இங்கே விவாதிக்க வேண்டாம். தேர்வு நெருக்கத்தில் நமது ஆலோசனை என்னவென்றால், நமக்கிருக்கும் கையெழுத்து தரத்தை, எந்தளவிற்கு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றித்தான்.
பொதுவாகவே, ஒரு வினாத்தாளில், வார்த்தைக்கு வார்த்தையும், வரிக்கு வரியும், பதிலுக்கு பதிலும் எந்தளவிற்கு இடம்விட வேண்டும் என்பது மட்டுமின்றி, உப தலைப்பிற்கும், பதிலுக்கும் இடையே எந்தளவிற்கு இடம் இருந்தால், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக, இதுவரை நாம் கடந்துவந்த கல்வியாண்டுகளில், பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். அப்படியும், சில மாணவர்களுக்கு சரியான புரிதல் இல்லையென்றால், அவர்கள், ஆசிரியர்களிடமோ அல்லது அந்த விஷயத்தில் ஓரளவிற்கு நல்ல அறிவுள்ள சக மாணவர்களிடமோ அல்லது வேறு சிலரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்று மட்டும் மிக முக்கியம். தயவுசெய்து, அடித்தல், திருத்தல்களை முடிந்தளவு தவிர்க்கவும். எனவே, எதையும் எழுதும் முன்னதாக, சற்றே யோசித்து, நாம் சரியான பதிலைத்தான் எழுதுகிறோமா என்பதை உறுதிசெய்தே எழுதவும். எதிர்பாராத சிறிய அடித்தல் திருத்தலுக்கு, ஒயிட்னர் பயன்படுத்தலாம். பெரிய தவறாக இருந்தால், அவற்றின்மேல், ஒரே ஒரு  x மார்க் போட்டு விடலாம். அனைவரும் கேள்விப்பட்ட ஒரு பொது கருத்து, அனைத்திலும் உண்டு.
"மனிதனாக இருந்தாலும் சரி அல்லது ஏதேனும் ஒரு பொருளாக இருந்தாலும் சரி, அது பார்ப்பதற்கு நன்றாக இல்லையென்றாலும், அதை சீர்படுத்தி, அலங்காரம் செய்து காட்டும்போது, ஓரளவிற்கு அழகானதாக மாறிவிடுகிறது" என்பதே அந்தக் கருத்து.
எனவே, நம் கையெழுத்து சற்று மோசமானதாக இருந்தாலும், அதை விடைத்தாளில், சரியான முறையில் எழுதும்போது, அது ஓரளவிற்கு அழகானதாகவே மாறிவிடுகிறது. நம் பேப்பரை திருத்தவுள்ள ஆசிரியருக்கு, அதைப் பார்த்தவுடன் எரிச்சல் வராது. நமது மதிப்பெண்களுக்கும் பங்கம் வரப்போவதில்லை.
அழகான கையெழுத்து இருந்துவிட்டால் மட்டும்...
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே அழகான கையெழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எழுத வேண்டியதை சரியாக எழுதவில்லை என்றால், யாரும் போனஸ் மார்க் கொடுப்பதில்லை. அழகான கையெழுத்து என்பது ஒரு கூடுதல் நன்மை, அவ்வளவே.
அதற்காக, மோசமான கையெழுத்து உள்ளவர்களெல்லாம், சரியாக எழுதியிருந்தாலும், அவர்களுக்கு நியாயமான மதிப்பெண் கிடைக்காது என்றும் நாம் சொல்ல வரவில்லை.
சரியில்லாத கையெழுத்தை, அழகான முறையில் எழுதாமல், அதாவது, அடித்தல் திருத்தலுடனோ அல்லது சரியான இடஒழுங்கைப் பின்பற்றாமலோ எழுதுவதில் என்ன சிக்கலென்றால், திருத்தும் ஆசிரியருக்கு படித்துப் பார்ப்பதிலேயே பிரச்சினை இருந்துவிடக்கூடாது என்பதுதான். மேலும், அதிகளவு அடித்தல் - திருத்தல் இருக்கும்போதும், நம்மைப் பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் உருவாகி விடுகிறது என்பதுதான் பிரச்சினையே. எனவே, ஒரு கையெழுத்தானது, விஷயத்தை சரியான கொண்டு சேர்க்குமளவிற்கு இருந்தால் நலம்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்