Title of the document

 முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு


ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும்தேர்வு முறையை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச் முதல், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படவில்லை. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் நடைபெற வேண்டிய பள்ளிகள் திறப்பும், காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளை நடத்துவதற்கு போதிய நாட்கள் இல்லாததாலும், அனைத்து நாட்களும், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளதாலும், பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பள்ளிக்கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் கட்ட அறிக்கையை, இந்த வாரஇறுதியில் தாக்கல் செய்ய உள்ளனர்.அதில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி, பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவம், ஆகஸ்டில் முடியும் என்பதால், அப்போது தான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது.எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பழைய முறைப்படி, இறுதியாண்டு தேர்வில், அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகளை இடம் பெறச் செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post