Title of the document
ஊரடங்கு காலத்தில், குடும்பத்தினருடன் வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு குடும்பத்தினரே மாற்று முறையில் கல்வியைக் கற்பிக்கலாம்.
குழந்தைப் பருவம் என்பது கற்றலுக்கான பருவம். பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே குழந்தைகளுக்குக் கல்விக்கூடம்தான். எனவே, குழந்தைகள் தம் உடலின் அத்தனை பாகங்களின் வழியாகவும் இவ்வுலகிலிருந்து எந்நேரமும் எதையாவது எவ்வகையிலேனும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த உண்மையை உணர்ந்து, இந்த ‘ஊரடங்கு’ காலத்திலும் மதிப்பெண்ணுக்கான பாடப்புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்கச் சொல்லி குழந்தைகளைக் கட்டாயப்படுத்தாமல், அவர்களுக்கு விருப்பமான பல்வேறு வடிவங்களின் மூலமாக அவர்களின் பள்ளிப் பருவக் கல்விக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படும் வகையில் பல்வேறு விசயங்களை அவர்களுக்கு நாம் கற்பிக்கலாம்.

வரலாறு அறிவோம்

வரலாறு என்றாலே மன்னர்கள், ஆட்சியாளர்கள், தலைவர்கள், படையெடுப்பு, போர், போராட்டம், கி.மு., - கி.பி என்பதுதான் என நினைத்து மிரளும் குழந்தைகளுக்கு, வரலாறு என்பது சுவாரசியமானது, நமக்கு மிகவும் நெருக்கமானது, நாம் விரும்பிக் கற்க உகந்தது என்கிற எண்ணத்தை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த நீண்ட நெடிய வரலாற்றினையும், முன்னோர்களின் அருமை, பெருமைகளையும் பெற்றோர், தாத்தா - பாட்டிகள் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

குழந்தைகளுக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும். ஆகவே, வரலாறுகளை கதை வடிவில், குழந்தைகள் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தி சுவாரசியமாக சொல்லலாம். கதைகளுக்குள் குழந்தைகளையும் ஈடுபடுத்தி உரையாடிக் கொண்டே செல்லலாம்.

உங்களின் கிராமம், ஊர், பகுதிவாழ் மக்களின் வரலாறுகளையும் சொல்லலாம்.

உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், மிகமுக்கியமான தலைவர்கள் வாழ்ந்திருந்தால் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கதைகளாகச் சொல்லலாம்.

உங்கள் முன்னோர்களின் புகைப்படங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆய்வு புத்தகங்கள், பழங்கால பொருட்கள் எவையேனும் உங்களிடம் இருந்தால், அவற்றை தேடி எடுத்து குழந்தைகளிடம் காட்டலாம். அவற்றைத் தொடுவதன் மூலம் உங்கள் முன்னோர்களைத் தொடும் உணர்வைக் குழந்தைகள் பெறுவார்கள்.

பழங்காலப் பொருட்கள், உங்கள் வரலாற்றுக் கதைகளின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும்.

வரலாற்றுக் கதைகளை குழந்தைகளிடம் சுருக்கமாக எழுதச் சொல்லலாம். படங்கள் வரைந்து சிறு வரலாற்றுப் புத்தங்களை உருவாக்கலாம்.

கணிதம் கற்போம்

“எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’’ என்றார் ஔவையார். ஆனால், இன்று நாம் சின்னஞ்சிறு கணக்குகளுக்குக்கூட கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறோம். அல்லது காகிதத்தில் எழுதி விடை தேடுகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய கணக்கையும் மனதிலேயே கணக்கிட்டு சில வினாடிகளில் விடை சொல்லிவிடுவார்கள். காரணம், அவர்கள் வாழ்க்கையோடு கணக்கு இரண்டற கலந்திருந்தது.

மனக்கணக்கில் திறமை வாய்ந்த முதியவர்கள் நம் வீட்டிலும் இருக்கலாம். அவர்கள் குழந்தைகளிடம் மனக்கணக்கு மூலமாக விடை சொல்லி அசத்தலாம். மனக்கணக்கு முறையை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.

நம் முன்னோர்கள் முக்கால், அரை, கால், நாலுமா, மும்மா முக்கானி, மும்மா, அரைக்கால், இருமா என பழங்கால அளவீடுகளைக் கொண்டு கணக்கிட்டார்கள். ஞாபகமிருந்தால் முதியோர்கள் அதை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

கணித அறிவு மேம்பட ‘கணிதப் புதிர்’ மிகச்சிறந்த விளையாட்டு வடிவம். பெரியவர்களும் குழந்தைகளும் இணைந்து கணிதப் புதிர் விளையாட்டு விளையாடலாம். அவற்றை நோட்டுகளில் எழுதி வைத்து கொள்ளலாம்.

நம் வீடுகளில் மரக்கால், படி, தராசு, எடைக்கல், உடல் எடை இயந்திரம், எண்ணெய் அளக்கும் கருவிகள் போன்றவை இருந்தால் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும், கணக்கிடும் முறைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

நில அளவை முறையைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறைகளும் எவ்வளவு சதுர அடிகளைக் கொண்டது என்று கணக்கிடச் சொல்லலாம்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உயரத்தையும், எடையையும் கணக்கிட்டு ஒரு நோட்டில் எழுதி வைக்கலாம்.

மொழித்திறன் கல்வி

குழந்தைகள் பாடப் புத்தகங்களையும் கரும்பலகைகளையும் பார்த்து, படித்து, எழுதிப் பழகியே தங்களுக்கான எழுத்து வடிவ மொழியறிவைப் பெற்றிருக்கிறார்கள்.

மற்றொரு மொழிவடிவமான பேச்சுமொழியினை குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து செவி வழியாகவே பெறுகிறார்கள். அதை பேச்சுமொழியிலேயே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “குழந்தைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை; கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள்’’ என்கிறோம். 

குழந்தைகளுக்குச் சிறந்த பேச்சுமொழியைக் கற்றுக்கொடுப்போம். ‘பேச்சுமொழி’ பெரும்பாலும், பாடப் புத்தகங்களில் இருப்பது போன்று இலக்கண வகைக்கு உட்படாமல் மிக இயல்பாக இருக்கும். மேலும், அம்மொழி ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். அதை ‘வட்டார மொழி’ என்கிறோம். ஒரு பொருள் பல்வேறு வட்டாரங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். 

உதாரணமாக, ‘அவர்கள்’ எனும் பொதுவான வார்த்தையை, திருநெல்வேலி பகுதி மக்கள் ‘அவுக’ என்றும், மதுரை மக்கள் ‘அவய்ங்க’ என்றும், சென்னை மக்கள் ‘அவனுவ’ என்றும் அழைப்பதைக் கேட்டிருப்பீர்கள்.

உங்கள் வட்டாரத்திற்கென்று தனித்துவமான வட்டாரச் சொற்கள் ஏராளமாக இருக்கும். அவற்றை எல்லாம் பெரியவர்களிடம் குழந்தைகள் கேட்டறிந்து ஒரு குறிப்பேட்டில் எழுதி, ‘வட்டாரச் சொல் அகராதி’யை உருவாக்கலாம்.

கதைப் புத்தகங்கள் உங்கள் வீட்டில் இருந்தால், குழந்தைகள் அதை எடுத்து சில கதைகளைப் படித்துப் பழகுங்கள். அதில் உரையாடல்கள் பேச்சு மொழியில் இருப்பதை நீங்கள் அறியலாம். அதுபோல பேச்சு மொழியில் சில உரையாடல்களை நீங்களே எழுதிப் பழகுங்கள். உங்களால் முடியுமானால், ஒரு குட்டிக் கதையை எழுதுங்கள்.

இலக்கியச் சொற்களை குழந்தைகளுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தலாம். நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பஸ், கார், ஸ்கூல், காலேஜ் போன்ற ஆங்கில வார்த்தைகளை ஒரு நோட்டில் வரிசைப்படுத்தி எழுதி அதற்கான தமிழ் வார்த்தைகளையும் கண்டறிந்து எழுதலாம்.

ஒரு பொருளுக்குப் பல வார்த்தைகள் இருக்கும்; ஒரு வார்த்தை பல பொருட்களைக் குறிக்கும். அத்தகைய வார்த்தைகளை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சொல்ல குழந்தைகளை அவற்றை நோட்டில் குறித்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

கிராமிய, நாட்டுப்புற, கானாப் பாடல்களைப் பாடக்கூடியவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால், அவர்களைப் பாடச் சொல்லி குழந்தைகள் கேட்கலாம்.

அப்பாடல்களில் எளிய மக்களின் எதார்த்த வாழ்க்கை, உயிரோட்டமான சொற்களில், நெஞ்சைப் பிசையும் ராகத்தில் மண்வாசனையோடு வெளிப்படுவதை நாம் அறியலாம். குழந்தைகளும் அப்படியான பாடல்களைப் பாடிப் பழகலாம். எழுதி வைத்து ஆவணப்படுத்தலாம். எல்லாரும் சேர்ந்து ஒரு பாடலை எழுதி மெட்டமைத்து பாடலாம்.

விடுகதை குழந்தைகளுக்கு சிறந்ததொரு விளையாட்டு வடிவம். அதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறனையும், கற்பனாசக்தியையும் மேம்படுத்தலாம்.

விடுகதைகள், பழமொழிகள், குட்டிக் கதைகள் யாவும் புத்தகங்களாக கிடைக்கின்றன. காமிக்ஸ் புத்தகங்கள், கவிதைப் புத்தங்கள் அறிவியல் புதிர்கள், குறுக்கெழுத்துப் புத்தகங்கள், பஞ்ச தந்திர கதைகள், தெனாலிராமன் கதைகள் என நம்மிடம் இருக்கும் புத்தகங்களை எடுத்து, குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களைப் படிக்கச் சொல்லி கலந்துரையாடலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழித்திறனும் வாசிப்புத் திறனும் மேம்பட உதவலாம்.

நீதிபோதனைக் கருத்துகளையும் குழந்தைகளின் மனங்களில் எளிமையாக விதைக்கலாம்.

அறிவியல் பழகுவோம்

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு குழந்தைகளுக்குக் கற்பிக்கலாம்.

குழந்தைகள் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் எழுப்ப வேண்டும். உதாரணமாக, மின்சாரம் என்றால் என்ன? அது எங்கே, எப்படி உருவாகிறது? கப்பல் எப்படி தண்ணீரில் மிதக்கிறது? விமானம் எப்படி ஆகாயத்தில் பறக்கிறது?

சேவல் ஏன் அதிகாலையில் கூவுகிறது? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் குழந்தைகளிடம் ஏற்கெனவே இருக்கும். அந்த கேள்விகளையெல்லாம்

குழந்தைகளின் மனங்களிலிருந்து தோண்டி எடுத்து, உங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லலாம். அல்லது அத்தகைய துறை சார்ந்த வல்லுனர்கள் உங்கள் நண்பராய் இருந்தாய் அவர்களிடம் கைபேசி மூலமாக விடையைக் கேட்டறியலாம்.

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு புதிய பொருட்களை வடிவமைக்கலாம். ஒரு சிறு தாவரத்தை எடுத்துக் கொண்டு, அதன் ஒவ்வொரு பாகத்தையும் கண்டு ரசிக்கலாம்; தொட்டு உணரலாம். ஒவ்வொரு செடியிலும் அதன் இலை அடுக்குகள், இலைகளின் வடிவங்கள். நரம்புகள் மாறுபட்டிருப்பதைக் கண்டுணரலாம். ஒரு பூவின் மலர்ச்சியை முழுமையாகக் கண்டு ரசிக்கலாம்.

புவியியலைப் புரிந்து கொள்வோம்

நாம் வாழும் இவ்வுலகின் பூகோள வரைபடத்தை எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாடு பற்றியும், அவற்றின் இயற்கை வளங்கள், அரசியல், வரலாறு, மொழி, வணிகம், கலாச்சாரம், வாழ்க்கைமுறை பற்றி எடுத்துச் சொல்லுங்கள். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

சமையல் கலை கற்போம்

சமையல் ஓர் அற்புதமான கலை. அக்கலையைக் குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் குடும்பத்தில் சமத்துவம் நிலவும். மேலும், தாம் விரும்பிய உணவை தாமே சமைத்து உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும்.

இத்தகைய மாற்று முறையிலான கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்கி, ‘ஊரடங்கு’ காலத்தையும் பயனுள்ளதாக மாற்றுவோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post