இந்தியாவில் கொரோனா நோய்ப் பரவலைக் கண்டறியவும் கண்காணிக்கவும்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக விலை மற்றும் ரிசல்ட்
தெரியவர எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகிய காரணங்களால், தற்போது நடைமுறையில்
உள்ள PCR பரிசோதனை மூலம் பரவலாகப் பரிசோதனை மேற்கொள்வது கடினம். எனவே,
குறைந்த விலையில், குறுகிய நேரத்தில் ரிசல்ட் தெரியவரும் வகையில் பரிசோதனை
மேற்கொள்ள அதிவிரைவு பரிசோதனை (Rapid test) அவசியமாகிறது.
கொரோனா வைரஸ்
PCR பரிசோதனை முடிவுகள் தெரியவர 2 - 3 மணி நேரம் ஆகும்.
ஆனால் அதிவிரைவு பரிசோதனை மூலம் 15 நிமிடங்களில் முடிவை அறியலாம். மேலும் ஒரு பரிசோதனைக்கான செலவு சுமார் 50 ரூபாய் மட்டுமே.
இந்நிலையில், இந்தியாவுக்கு சீனாவிலிருந்து 5 லட்சம் அதிவிரைவுப்
பரிசோதனைக் கருவிகள் (Rapid test kit) வந்திருக்கின்றன என இந்திய மருத்துவ
ஆராய்ச்சிக் கழகம் (ICMR) தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ஐசிஎம்ஆர்
தொற்று நோயியல் துறைத்தலைவர் டாக்டர் R.கங்கா கட்கார் கூறுகையில், ``இந்த
அதிவிரைவுப் பரிசோதனை மூலம் இந்நோய் நம் நாட்டில் எந்தளவுக்குப்
பரவியுள்ளது என்பதை அறியமுடியும். இது நோயின் தாக்கத்தைக் கண்காணிப்பதற்கான
பரிசோதனையே தவிர உறுதிப்படுத்தும் சோதனை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது"
என்று கூறியுள்ளார்.
Swab Test
தமிழகத்துக்கு ஏற்கெனவே 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவிலிருந்து
வந்துள்ள நிலையில், மத்திய அரசு மூலம் கூடுதலாக 12,000 கருவிகள்
கிடைத்துள்ளன. ஆக நம் மாநிலத்துக்கு 36,000 கருவிகள் கிடைத்துள்ளன. நேற்று
சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக இக்கருவிகள்
மூலம் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுவிட்டன. சேலத்தில் நேற்று 18 பேருக்கு
ரேபிட் பரிசோதனைகள் நடைபெற்றன. திருச்சி அரசு மருத்துவமனைக்கு 50 ரேபிட்
கிட்கள் வந்திருந்த நிலையில், அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்
மற்றும் காவல்துறையினருக்கு அதிவிரைவுப் பரிசோதனை நடைபெற்றது.
ரேபிட் டெஸ்ட் செயல்படும் விதம் இதுதான். ஒருவருக்குக் கொரோனா தொற்று
ஏற்படுகிறது என்றால் அவர் உடம்பில் அந்த வைரஸில் உள்ள எதிர்ப்புத்
திறனூட்டியை (Antigen) எதிர்க்க, எதிர்ப்புரதம் (Antibody) நம் உடம்பில்
உருவாகும். அதாவது IgM, IgG என்ற ஆன்ட்டிபாடிகள் உருவாகும். ரேபிட் டெஸ்ட்
பரிசோதனை, இந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டறியும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
Representational Image
ரேபிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவி, கர்ப்பத்தை உறுதிசெய்யும் பரிசோதனை
அட்டையை (Pregnancy testing kit) ஒத்த அமைப்பில் இருக்கும். ரேபிட் டெஸ்ட்
பரிசோதனைக்கு சம்பந்தப்பட்டவரின் ரத்தம், குருதி நீர் (plasma), குருதி
ஊனீர் (Serum) ஆகியன மாதிரிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மாதிரியில்
IgM, IgG ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டால், பரிசோதனைப் பெட்டகத்தில் அதைக்
காட்டித்தரும் இடத்தில் வண்ணம் மாறும். இது நிறப்பகுப்பியல் சோதனை
(Chromatographic Technique). இந்த வண்ணமாறுதல் மூலம் ஒருவருக்குக் கொரோனா
இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். மருத்துவர்கள் மட்டுமன்றி,
மருத்துவப் பணியாளர்கள் யாரும் இந்தப் பரிசோதனையைக் கையாளலாம்.
ஆனால், இந்தப் பரிசோதனையின் நம்பகத்தன்மை PCR பரிசோதனையைவிடக் குறைவு.
காரணம், சம்பந்தப்பட்டவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி, மாதிரியில்
இருந்தால் மட்டுமே இந்தப் பரிசோதனை `பாசிட்டிவ்' எனக் காட்டும். ஒருவேளை
அவருக்குத் தொற்று இருந்தும், ஆன்டிபாடி உருவாகும் காலத்துக்கு முன்னரே
அதிவிரைவு பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், ரிசல்ட்டை `நெகட்டிவ்' என்றுதான்
காட்டும்.
இதுகுறித்து தொற்றுநோயியல் மருத்துவர், டாக்டர். சுரேஷ் குமாரிடம்
பேசினோம். ``அதிவிரைவுப் பரிசோதனைகள் இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இந்தியா முழுவதற்குமே 5 லட்சம் கருவிகள் மட்டுமே இப்போது
வந்துள்ளன என்பதால், நம் மாநிலத்துக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே கருவிகள்
கிடைத்துள்ளன. ஆதலால் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை
கொடுத்து இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். ஏழு நாள்கள் ஒருவருக்கு
அறிகுறி உள்ளது என்றால் அவருக்கு இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஐந்து
நாள்கள் அறிகுறி உள்ளவர்களுக்கு இந்தப் பரிசோதனை துல்லியமான முடிவைக்
காட்டாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment