Title of the document
மேகம் என்பது என்ன என்று  அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே  மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..


ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. 
சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும்  தண்ணீர்  , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன !
அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல , குளிர்ந்து , சிறு சிறு தண்ணீர் துளிகள் ஆகி  விடுகிறது இல்லையேல் உறைந்து சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் ஆகி விடுகிறது . அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும் , பனிக்கட்டி படிகங்களாகவும் ,மாற்றம் அடைந்து விட்ட நீராவி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில் , ஒட்டிக்  கொண்டு மேகங்களாக உருமாறி விடுகிறது!


மேகங்களுக்கு உண்மையில் நிறம் எதுவும் கிடையாது! ஆனால் , நம் கண்ணுக்கு அவை , வெள்ளை  நிறத்திலும் , சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள் , தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும்! அது ஏனெனில் , மேலெழும் வெப்ப காற்று , மேகத்தை வந்தடையும் போது , அக்காற்றின் வெப்பம் தாங்கமாட்டாமல் , மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன! தோற்றம் , பரிமாணம் , வடிவம் மற்றும்  அமைப்பை பொறுத்து மேகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1) ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Stratus Clouds) , படுக்கை விரிப்பை போன்றது.


2)கிமுளுஸ் மேகங்களை(Cumulus Clouds) , முகிற் கூட்டத் திரள் என்று அழகு தமிழில் சொல்வர். இவை , ஒன்றன் மேல் ஒன்றாக , அழகாக , குவிக்கப்பட்ட , திகைப்பு ஊட்டக்கூடிய வெள்ளை மேகங்கள்.இவ்வகை மேகங்கள் , சிறு சிறு தண்ணீர் துளிகளை தன்னுள்ளே கொண்டது!
3)சிர்ருஸ் மேகங்களை(Cirrus clouds) உயர் வானத்து முகில் வகை என்று குறிப்பிடுவர். ஆம் , இவை , மிக உயரத்தில் காணப்படும் மேகங்கள். இவை சுருள் சுருளாய் , அழகான வெள்ளை நிறத்தில் காணப்படும். இவ்வகை மேகங்கள் , சிறு சிறு பனிக்கட்டி படிகங்களை தன்னுள்ளே கொண்டது!


மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகை மேகங்களிலும் , சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது பனிக்கட்டி படிகங்கள் தளர்வாக கட்டப்பட்டிருக்கும். அதனால் , இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ,சுலபமாக ஊடுருவி செல்ல முடியும்!
4)அல்டோ  ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Alto Stratus clouds) , அழகாக விரித்த , வெள்ளை மற்றும் சாம்பல் நிற படுக்கை விரிப்பு போல வானத்தில் காட்சி அளிக்கும். சில நேரங்களில் , இவ்வகை மேகம் , மிக அடர்த்தியாக இருக்கும் காரணத்தினால் , பிரகாசிக்கும் சூரியனை , வெள்ளி போல் தகதகக்கும் , சந்திரனை கூட மறைத்து விடும் .


5) நிம்போ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Nimbo Stratus clouds), உயர் வானத்தில் காணப்படும் மேகம். இவை குறிப்பிட்ட வடிவில் இல்லாமல் , தன் வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும் இயல்புடையது. அவை , அடர்ந்த சாம்பல் நிறத்தில் , ஒரே விதமாக காணப்படும்.


6)கிமுளோ நிம்பஸ் மேகங்கள்(Cumulo Nimbus clouds) தான் உண்மையான மழை மேகங்கள்! இவற்றை கார் மேகம் என்று சொல்லலாம். நல்ல கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது! ஏனெனில், சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் , மேகத்தின் உள்ளே மிக அடர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்!


ஆனால் , இந்த கார் மேகம் , நம் கண்ணுக்கு புலப்படுவது போல் , நிஜமாகவே கருப்பு  வண்ணத்தில் இருக்காது . இந்த கார்மேகத்தின் மேல் , வானூர்தியில் சென்று பார்த்தால் , உண்மை விளங்கும்! வானூர்தியில் அமர்ந்து பார்க்கும் பொழுது , இவ்வகை கார் மேகங்கள் , பளிச் என்ற வெண்மை நிறத்தில் காட்சி அளித்து , காண்போரை திகைப்பூட்டும்! இவ்வகை மேகத்தின் மேலே , வெளிச்சம் பட்டு தெறிப்பதனால் ,வானூர்தியில் அமர்ந்து பார்ப்பவருக்கு வெள்ளை நிறத்திலும் , பூமியில் நின்று பார்ப்பவருக்கு ,மழை மேகமாய் ,கருத்த நிறத்திலும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்கிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post