Title of the document

ரோனா வைரஸ் நாளுக்கு நாள் பீதியை கிளப்பிவருவதால், மக்களுக்கு அவர்களது உயிர் மீதான அச்சம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் கரோனா.கரோனா.கரோனா.

இதிலிருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ள என்ன வழி? அதுதான் தனித்திருத்தல் (தனிமைப்படுத்திக் கொள்ளுதல்). இவ்வளவு காலம் கூட்டம் கூட்டமாக எப்போதும் நண்பர்களுடனும், உறவினர்களுடன் ஒட்டி, உரசிக்கொண்டிருந்த நமக்கு, தற்போது தனிமையாக இருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனால், நம்மையும் இந்த சமூகத்தையும் கரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க வழி செய்ய, இதனைத் தவிர வேறு வழியே இல்லை என்கின்றனர் சுகாதார அமைப்பினர்.

தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்றால் என்ன?

கரோனா வைரஸ் தொற்று நமக்கு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய, குறைந்தபட்சம் 14 நாட்கள் தேவைப்படும். நமக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தாலோ அல்லது வெளி நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பி இருந்தாலோ நாம் தனித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

*வீட்டில் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

*தண்ணீர் அருந்தவோ, உணவு சாப்பிடவோ அல்லது மற்ற விஷயங்கள் எதற்காக இருந்தாலும் வீட்டிலிருக்கும் மற்றவர்களுடனோ அல்லது வெளியே இருப்பவர்களுடனோ தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என தனி தட்டு, துண்டு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளை வைத்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.

*வீட்டில் இருக்கும் மற்றவர்களை உங்களைத் தொட அனுமதிக்காதீர்கள். நீங்களும் மற்றவர்களை தொடாதீர்கள்.

*அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

*எவ்வளவு அவசியமான வேலையாக இருந்தாலும் பொதுவெளியில் நடமாடுவதை தவிருங்கள். அது உங்களை மட்டுமல்லாமல், உங்களை சுற்றியுள்ளவர்களையும் காக்கும்.

*மருத்துவமனைக்குச் செல்வதாக இருந்தால், உங்களது மருத்துவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்லுங்கள். இப்படி செய்வதால், அந்த மருத்துவர் அதிக நோயாளிகள் இல்லாத சமயத்தில் உங்களை வரவழைக்கக்கூடும்.

இவ்வாறு செய்தால் உடன் இருப்பவர்களுக்கு கரோனா பரவாதா?

உங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அதுபற்றி உங்களுக்கு தெரியாமல் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை தொட்டாலோ அல்லது அவர்கள் முன் இருமினாலோ அல்லது தும்மினாலோ, உங்களிடமிருக்கும் வைரஸ் கிருமிகள் அவர்களிடத்தில் சென்று அவர்களையும் நோய் தொற்றிற்கு ஆளாக்கும். அதனால்தான் தனித்து இருக்க அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் கரோனா பரவும் விகிதத்தை மிக அதிக அளவில் குறைத்துக்கொள்ள முடியும்.

Self- Quarentine-க்கும் Isolation-க்கும் இருக்கும் வித்தியாசம்:

நிறைய மக்கள் Self Quarentine-ஐயும் Isolation-ஐயும் தவறாக புரிந்துகொள்கின்றனர். Self Quarentine என்பது, உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். ஆனால், Isolation என்பது மருத்துவர்கள் உங்களை தனிமைப்படுத்தி வைப்பது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு காச நோய் இருந்தால், அந்த நோய் பிறருக்கு பரவாமல் இருக்க, மருத்துவர்கள் உங்களுக்கு தனி வார்டு ஒதுக்கி சிகிச்சை அளிப்பார்கள்.

கரோனாவும் கிட்டத்தட்ட அதே போன்றதுதான். உங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு உங்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பர். அதற்கு முன்புவரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும்போது என்ன செய்யலாம்?

*உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும்போது மனதிற்கு இதமான பாடல்கள் அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தையும் செய்ய உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அது மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.

*நன்றாக தூங்கலாம். நன்றாக சாப்பிடலாம்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளலாம்.

*உங்களது உடல்நிலையை நீங்களே புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மிகவும் மோசமான உடல்நிலைக்கு சென்றால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

*நீங்கள் இருக்கும் இடத்தை முடிந்த அளவு தூய்மைப்படுத்துங்கள். செல்போன்களில் அதிக கிருமி படிய வாய்ப்புள்ளதால் செல்போன் பயன்படுத்துவதை முடிந்த அளவிற்கு குறைத்துக்கொள்ளலாம்.

*தனிமைப்படுத்திக் கொள்ளுதலின்போது உங்களது மனத்திடம் மிகவும் முக்கியமானது. கரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிப்பதற்கு பதிலாக, கரோனா வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்திப்பதே மிகவும் முக்கியமானது.

உலகம் முழுவதும் கரோனாவால் பலர் உயிரிழந்துகொண்டு இருக்கின்றனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இத்தாலியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததே கரோனா பரவுவதற்கு காரணம் என்று பரவலாக சொல்லப்பட்டாலும், அங்கிருக்கும் மக்கள் கரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டதுதான் இத்தாலியின் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதே நிதர்சனமான உண்மை. 150க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த கரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது என்றால் இதை சாதாரணமான விஷயமாக நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது.

மக்கள் முடிந்த அளவு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே இதனை எதிர்கொள்ள முடியும். மாற்று மருத்துவமுறை மூலம் கரோனாவை கட்டுப்படுத்தலாம். பூண்டு சாப்பிட்டால் கரோனா பரவாது. சுடு தண்ணீர் குடித்தால் கரோனா பரவாது. என்பதுபோன்று வரும் வதந்திகளை நம்பாமல், முடிந்த அளவு தனித்திருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் காத்துக்கொள்வோம்.

சிறுவயது முதல் ஒற்றுமையே பலம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்ந்த நம்மை, தற்போது தனிமையாக இருக்க சொன்னால் அது மிகவும் கடினமான காரியம். எனினும், தனித்திருத்தலில் ஒற்றுமையை கடைபிடிப்போம். கரோனா என்னும் கொடிய அரக்கனை விரட்டுவோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post