தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வித் துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த மனு கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என கூறப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.    இந்த அங்கீகாரமும் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.    இதற்காக ஆண்டுதோறும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கக் கோரி அதிகாரிகளின் முன்பு கல்வி நிறுவனங்கள் முறையிட வேண்டியுள்ளது.    புதுச்சேரியில் இதுபோன்ற நிலையைச் சுட்டிக்காட்டித் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தற்காலிக அங்கீகாரம் வழங்கும் முறையை ரத்து செய்தது.    மேலும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.    எனவே இதே போன்று தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.   இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டார்.   வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர், இயக்குநர் ஆகியோர் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.