Title of the document


மதுரையில் சாலையோர குடிசைகளில் வசிக்கும் குழந்தைகள் கல்வி கற்க ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் அரசு பள்ளிகளில் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்சா) திட்டம் சார்பில், பல்வேறு சூழலில் இடைநிற்றலைத் தடுக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்கின்றனர். அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அருகில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்கின்றனர்.

பள்ளிகளுக்கு செல்ல இயலாத குழந்தைகளாக இருந்தால், வசிக்கும் இடத்திலேயே தற்காலிக ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்து கல்வி பயிலும் சூழல் உருவாக்கித் தரப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

பெற்றோருக்கு உதவியாக இருந்து கொண்டே கல்வி பயிலும் இத்திட்டத்தில் ஏராளமான குழந்தைகள் மதுரையில் பயன் பெறுகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சர்வேயர் காலனி உட்பட பல இடங்களில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு வெளிமாநிலக் குடும்பத்தினர் சாலையோரங்களில் வசித்தவாறு பொம்மைகள், சுவாமி சிலைகள், கலைப் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். தேன் உள்ளிட்ட பொருட்களையும் விற்கின்றனர்.

இவர்களது குழந்தைகள் 25-க்கும் மேற்பட்டோருக்கு அங்கேயே கல்வி கற்றுக் கொடுக்க மதுரையைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை அவர்களின் குடிசைக்கு சென்று தமிழ், ஆங்கிலம், கணிதம், ஓவியம், இந்தி போன்ற பாடங்களை கற்றுத் தருகிறார்.

குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை தேர்வும் நடத்தப்படுகிறது. இவர்களுக்குப் பாடப்புத்தகம், நோட்டுகள், எழுது பொருட்கள், ஆடை ஆகியவை ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவர்களின் வருகைப் பதிவு உலகநேரி அரசு நடுநிலைப் பள்ளி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுகிறது.

வெளி மாநிலக் குழந்தைகளுக்கு வசிப்பிடக்கல்வி கற்றுத்தருவதன் மூலம், கல்வி மேம்பாடு மட்டுமின்றி தொழிலுக்கு உதவியாக இருக்கிறது எனக் குழந்தை களின் பெற்றோர் கூறுகின்றனர். அகமதாபாத்தைச் சேர்ந்த மீனாள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு வந்தோம். எனது 2 குழந்தைகளை மானகிரி பள்ளியில் படிக்க வைத்தேன். தொழில் தொடர்பாக சர்வேயர் காலனி சாலையில் குடிசை அமைத்து வசிக்கிறேன்.

ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை இருந்தாலும், நிரந்தர வசிப்பிடம் இல்லை. எங்களது தொழிலுக்கு குழந்தைகள் உதவியாக இருப்பதால் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டுக்கே வந்து கல்வி கற்றுத் தருவதால் எங்களது குழந்தைகள் இந்தி மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம் பேசுவதோடு ஓவியம் கற்கின்றனர். இதன் மூலம் புதிய வகையில் பொம்மைகள், சுவாமி சிலையை வடிவமைக்கின்றனர். தொழிலுக்கும் கல்வி உதவியாக உள்ளது என்றார்.

இது குறித்து மதுரை மாவட்ட ஓருங்கிணைந்த கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா கூறியதாவது:மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனையின்பேரில், இதுபோன்ற குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சர்வேயர் காலனி பகுதிகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். விரும்பினால் வயது வித்தியாசம் இன்றி கல்வித் கற்றுத் தருகிறோம்.

விருப்ப மொழி இந்தியாக இருந்தாலும், தமிழ், ஆங்கிலம் உட்பட பிற பாடங்களும் கற்றுத்தருவதால் சரளமாகப் பேசுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 22 சிறப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. இது போன்ற குழந்தைகளுக்குத் தொடர்ந்து வருகைப் பதிவு பராமரிக்கப்படுகிறது. சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போதும், பள்ளியில் சேர விரும்பினால் உரிய சான்றிதழ் வழங்கப்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post