தாமஸ் ஆல்வா எடிசனும் எங்கள் பள்ளி புங்கமரமும்.அறிவியல் அரட்டை: 01தாமஸ் ஆல்வா எடிசனும் எங்கள் பள்ளி புங்கமரமும்…..

நாங்கள் எங்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த நேரத்துக்கு இணையாக, எங்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும் புங்க மரத்தடியில் இருந்திருப்போம், கதை பேசியிருப்போம், விளையாடி இருப்போம, அமர்ந்து படித்திருப்போம்…. இவ்வாறு எங்கள் பள்ளி வாழ்க்கையின் ஒரு பகுதியாக வரும் புங்க மரம் எங்களுக்குப் பல பாடங்களைப் புகட்டியுள்ளது…


ஒருநாள் பள்ளி விட்டு வீட்டுக்குக் கிளம்பும் நேரம்…. எனது மாணவன் ஆரோக்கிய சர்ஜின் ராஜ் புங்க இலையில் ஒன்றைப் பிய்த்து கையில் வைத்து அடிக்க “டப்” என்ற சத்தத்துடன் இலை கிழிந்தது. “ இதில் என்ன அதிசயம், எல்லா மாணவர்களும் செய்வதுதானே” என்கிறீர்களா?.. இதற்கும் எடிசனுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?... சொல்கிறேன் கேளுங்கள்….எடிசன் கதையை நிறைய முறை வகுப்பில் பேசியிருக்கிறோம். அதில் எடிசன் சிறுவயதில் அறிவியல் ஆர்வம் காரணமாக ரயிலில் வேதிப்பொருட்களைக் கொண்டு சோதனை செய்ய தீப்பிடித்த சம்பவம் பற்றியும், இதனைக் கேள்விப்பட்ட ரயில் அதிகாரி தாமஸ் ஆல்வா எடிசனை காதோடு சேர்த்து அறைந்ததால் காது செவிடாய்ப் போன சம்பவம் பற்றியும் பல முறைப் பேசியுள்ளோம்.
இப்போது இங்கே கை விரல்களை உருட்டி உருளையாக வைத்துக்கொண்டு அதன்மீது புங்க இலையை வைத்து அடிக்கும்போது “டப்” என்ற சத்தத்துடன் இலையின் மையப்பகுதி கிழிந்ததையும், அங்கே தாமஸ் ஆல்வா எடிசன் காதில் ரயில் நிலைய அதிகாரி பளார் என்று அறைந்ததையும் ஒப்பிடலாமா?
கண்டிப்பாக ஒப்பிடலாம்.இலையை, இடது கைவிரல்களை விரித்து நடுவில் வைத்து அடிக்கும் போது டப் என்ற சத்தத்துடன் இலை கிழிவதில்லை, ஆனால் இடது கை விரல்களை உருட்டிப் பிடித்து குழல்போல வைத்துக் கொண்டு அதன்மீது இலையை வைத்து வலது கையால் உருட்டிய கைவிரலின் எல்லா பகுதியும் மூடும்படி “பட்” என்று அடிக்கும் “டப்” என்று இலை கிழிவதைப் பார்க்கிறோம்.
இதற்கு ஒரு குழல் போன்ற அமைப்பின் இடையில் இலை இருக்கும் போது மேலிருந்து நாம் திடீரென அடித்தோமானால் இலையின் இருபுறமும் திடீரென அதிகரிக்கும் அழுத்த வேறுபாடு மற்றும் அதிகப்படியான அதிர்வு காரணமாக இலை கிழிகிறது. அதுபோலவே காதில் திடீரென அறையும்போதும், அதிக சத்தம் உண்டாக்கும் வெடிச்சத்தம் போன்றவை காதில் உள்ள மெல்லிய செவிப்பறையைச் சேதம் செய்கிறது. இங்கு செவிப்பறைக்கு வெளியே அறைந்ததால் உண்டான அதிக அழுத்தமும்,செவிப்பறைக்கு உள்ளே இருக்கும் குறைந்த அழுத்தமும் உண்டாக்கும் அதிக அழுத்த வேறுபாடே செவிப்பறை கிழிதலுக்கு முக்கியக் காரணமாகிறது. அழுத்த வேறுபாடு அதிகம் இருக்கும் இடங்களிலேயே அதிகம் சத்தம் உண்டாகிறது. இதனாலேயே புங்க இலையை சரியாக கைவிரல் உருளையில் வைத்து அடிக்கும்போது டப் என்ற சத்தம் உண்டாகிறது. பலூன் வெடிக்கும்போது உண்டாகும் சத்தம்கூட பலூன் உள்ளேயும் வெளியேயும் உண்டான அழுத்த வேறுபாடாலேயே ஏற்படுகிறது.
இப்போது விளங்கியிருக்குமே…. தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் எங்கள் பள்ளி புங்க மரத்துக்கும் இடையே உள்ள தொடர்பு. இனி புங்க இலை சோதனையை காதின் செவிப்பறை கிழிதலுக்கு உதாரணமாக விளக்கலாம்.

செவிப்பறை என்பது வெளிக்காதுக்கும் நடுக்காதுக்கும் இடையே காணப்படும் கூம்பு வடிவ சவ்வு ஆகும். இது tympanic membrane or myringa எனவும் அழைக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment