15 மாணவருக்கு குறைவா : மானியம் இல்லை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்சா) திட்டத்தில் 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் 2018-19 முதல் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில் 15 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மானியம் கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து 28,263 பள்ளிகளுக்கு 89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் 15 முதல் 100 மாணவர்கள் பயிலும் 21,378 பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 பேர் பயிலும் 6,167 பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், 251 முதல் ஆயிரம் பேர் வரை பயிலும் 714 பள்ளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய், ஆயிரம் பேர் மேல் பயிலும் 4 பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன. 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 3,003 அரசு பள்ளிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை. மேலும் உதவிபெறும் பள்ளிகளுக்கும் இந்த ஆண்டு மானியம் வழங்கவில்லை