பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: 200 மாணவர்களுக்கு துணிப்பைகள் விநியோகம்

பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 200 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக துணிப் பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் நோய்த் தடுப்பு, பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இதில், பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதினால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து பாரம்பரியமாக வாழை இலைகள், பாக்கு மரத் தட்டுகள், துணிப் பைகள், சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்துவது, டெங்கு கொசுக்கள் உருவாகும் விதம், அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதில், பங்கேற்ற 200 மாணவர்களுக்கு இலவசமாக துணிப் பைகள் வழங்கப்பட்டன.இதைத்தொடர்ந்து, டாக்டர் பெசன்ட் சாலை, அயோத்தி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு குறித்த மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.