Title of the document

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு, பல்வேறு விலையில்லாப் பொருள்களை அளித்துவருகிறது. அவற்றில் முதன்மையானது, சீருடை. மாணவர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கக் கூடாது என்பதற்காக உருவானதே சீருடை. சென்ற ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ``அடுத்த கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பச்சை நிறத்திலும், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்குப் பழுப்பு நிறத்தில் சீருடை வழங்கப்படும்" என்றார். 
மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் 4 செட் சீருடைகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
``அமைச்சர் அறிவித்துள்ளவாறு சீருடைகளை அளிக்கும்போது, சில விஷயங்களைக் கவனித்துக்கொண்டால், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அரசு திட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்" என்கிறார் திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி.
ஆசிரியை மகாலட்சுமி 1. சீருடைத் துணியின் தரம், வழக்கமாக வழங்கப்படுவதைவிட, மேம்பட்டதாக இருந்தால் அதிக நாள்கள் மாணவர்கள் பயன்படுத்த முடியும்.
2. சீருடையில் பொத்தான்கள் சரியாகத் தைக்கப்படுவதில்லை. அதிக நேரம் விளையாடும் பருவத்தில் இருப்பவர் மாணவர்கள். சீருடை கொடுக்கப்பட்ட சில நாளிலேயே பொத்தான்கள் கழன்று விழுந்துவிடுகின்றன. கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சட்டைகளில் வலுவாகத் தைக்கும் முறையைச் சீருடைகளிலும் பின்பற்றலாம்.
3. பொத்தான்களைப் பொருத்தும் துளைகள் பெரும்பாலும், கத்திரிகோலால் துளையிட்டதோடு விட்டுவிடுகிறார்கள். அதைச் சுற்றி `காஜா' தையல் போடுவதில்லை. இதைக் கவனித்தில்கொண்டு அடுத்த ஆண்டு சீருடைகளில் காஜா போட்டுத் தருவது நல்லது.
4. பொத்தான்களும் அதைப் பொருத்தவேண்டிய துளைகளும் நேராக இருப்பதில்லை. ஏற்றஇறக்கமாக இருப்பதால், சட்டையை அணிவதில் சிக்கலாகிறது. பொத்தான்களுக்கு நேராகத் துளைகள் இடுவது அவசியம்.
5. வழக்கமான சட்டைகளில் காலரின் தடிமனுக்கு உள்ளே ஏதேனும் வைப்பார்கள். சீருடைகளிலும் இதைப் பின்பற்றலாம்.
6. சில சீருடைகளில் துணியைத் திருப்பித் தைத்துவிடுகின்றனர். ஓர் ஆண்டுக்கு 500 செட் சீருடைகளாவது இப்படி வந்துவிடுகின்றன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
7. சீருடைகளின் அளவுகளுக்கு நகரத்துப் பிள்ளைகளின் உடல் அளவை வைத்தே முடிவு செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது. கிராமப்புற, மலைப்பகுதிகளில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம். அவர்களில் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு, 1 ம் வகுப்பு மாணவர்களின் அளவுதான் சரியாக இருக்கிறது. இதனையும் கவனத்தில்கொள்வது நல்லது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post