Title of the document

பட்ஜெட் கூட்டம் முடியும் வரை போராட வேண்டாம்! அமைச்சர்கள் வேண்டுகோள்



'சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை, போராட்டம் நடத்த வேண்டாம்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம், அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளது.

இந்த போராட்டத்தை தவிர்க்கவும், அரசு ஊழியர்களிடம் பேசவும், மூத்த அமைச்சர் வேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், கடந்த 25ல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அடுத்தகட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டசபையில், மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஏப்., 15 வரை, துறை வாரியான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த நேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தால், எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பும்; சட்டசபையில் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும்.

எனவே, 'ஏப்., 15க்குப் பின் எந்த போராட்டத்தையும் நடத்திக் கொள்ளுங்கள்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினரை, அமைச்சர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post