Title of the document

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நேரடி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டுமே - பதவி உயர்வுக்குப் பொருந்தாது!! பள்ளிக் கல்வித்துறை தெளிவான முடிவை எடுக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை !!

 

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நேரடி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப் பொருந்தாது!! தெளிவான முடிவை பள்ளிக் கல்வித்துறை எடுக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

----------------------------------

1. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தேசிய ஆசிரியர் கல்விக்  கவுன்சில் (NCTE) ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான கல்வித் தகுதிகளை வரையறை செய்து புதிய  அறிவிப்பாணை  3344 G1/2010 வெளியிட்டது. 2010 ஆகஸ்ட் 23 ஆம் நாள் வெளியிடப்பட்ட இவ்வறிவிப்பாணையில்,  ஒருவர் ஆசிரியராக நியமனம் செய்யப்பட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு முன்னரே ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவர்களும் வரும் காலங்களில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறுபவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று இவ்வறிவிப்பில் கூறப்படவில்லை.

2. தேசிய ஆசிரியர் கல்விக்  கவுன்சில் (NCTE), 2011 பிப்ரவரி 11 ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்துவதற்கான நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பை (எண் 76-4/2010/NCTE/Acad) வெளியிட்டது. இவ்வறிவிப்பாணையில் ஒருவர் ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு உரிய அரசாங்கம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் எனவும் உரிய அரசாங்கம்  ஆண்டுக்கு ஒரு முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3. கல்வி உரிமைச் சட்டம்  2009, நடைமுறைக்குப் பின்னர் நாடு முழுவதும் பள்ளிகளில் அதிகமான ஆசிரியர் நியமனம் செய்யவேண்டிய சூழலில், தேசிய அளவில் ஆசிரியர்களைத்  தேர்வு செய்யும் முறையில் தரம் மற்றும் சரியான அளவீட்டை உருவாக்கவும் ஆசிரியர் பயிற்சிக்கான கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் கல்வி கற்போரின் தரத்தை மேம்படுத்தவும் ஆசிரியர் தகுதித் தேர்வு வழிவகுக்கும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்  கவுன்சில் (NCTE), 2011 பிப்ரவரி 11 ஆம் நாளன்று வெளியிட்ட அறிவிப்பாணையில் சுட்டிக்கட்டப்பட்டது.  ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைக்கு முன்னரே ஆசிரியராக நியமனம் செய்யப்
பட்டவர்களும் வரும் காலங்களில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறுபவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் வலியுறுத்தவில்லை.

4. தேசிய ஆசிரியர் கல்விக்  கவுன்சில் (NCTE), 2011 பிப்ரவரி 11 ஆம் நாளைய அறிவிப்பாணையின்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்துவதற்கான தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 181,  2011 நவம்பர் 15 ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்புக்கு முன்னரே ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவர்களும் வரும் காலங்களில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறுபவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று தமிழ்நாடு அரசாணையிலும் இடம்பெறவில்லை.

5. தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வித்துறை துணைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் (Special Rules for the Tamil Nadu Elementary Education Subordinate Service) அரசாணை எண் 12, 2020 ஜனவரி 30 ஆம் நாளன்று வெளியிடப்
பட்டுள்ளது. இவ்வரசாணையிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்று குறிப்பிடப்படவில்லை. தலைமை ஆசிரியர் பதவிக்கு நேரடி நியமனம் நடைபெற்றால் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிர்வாக நலன், கல்வி நலன் கருதி பதவி உயர்வு மூலமே நிரப்பப்படுகின்றன.  

 
6. தேசிய ஆசிரியர் கல்விக்  கவுன்சில் (NCTE), மற்றும் தமிழ்நாடு அரசு,  தொடக்கக் கல்வி ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பாணைகள் மற்றும் அரசாணைகள் மூலம்  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் நியமனம் என்பது ஆசிரியர்  நேரடி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பொருந்தாது என்பது தெளிவாகிறது.  

7. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சிலர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் தங்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கவேண்டும் என  சென்னை உயர் நீதி மன்றத்திலும் மதுரை உயர்நீதி மன்றக் கிளையிலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற ஆணையின் காரணமாக 2023 – 2024 ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கலந்தாய்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் ஏற்படும் நிர்வாகம் மற்றும் கற்பித்தல் பணி இடர்பாடுகளால் குழந்தைகள் கல்விப் பாதிப்புக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

8. வழக்கு விசாரணையின் போது, ஆசிரியர் நேரடி நியமன முறைகள், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முறைகள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதன் நோக்கம், கலந்தாய்வை காலம் கடத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் கல்விப் பாதிப்புகள் ஆகியவை குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெளிவான பதில் வாதங்கள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படாததால் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கலந்தாய்வை ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

9. தேசிய ஆசிரியர் கல்விக்  கவுன்சில் (NCTE), மற்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைகளின் படி ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடக்கக் கல்வி (1 முதல் 8 வகுப்புகள்) கற்பிக்கும் நேரடி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும்.  ஆசிரியர் தகுதித் தேர்வு நடமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து பத்தாண்டுகளாக இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முன்கூட்டியே எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம் என்று விதிகளை உருவாக்கினால் கல்வித்துறையில் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும். சிலருடைய பதவி ஆசைகளை அடிப்படை உரிமையாகக் கருத முடியாது.

10. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது நியாயமற்றது. பரிசீலிக்கத்தக்கதும் அல்ல. இத் தவறான கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால், 2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசு வகுத்த ஆசிரியர் பணி நியமன விதிமுறைகளின் அடிப்படையில் முறையான ஆசிரியர் கல்வித் தகுதியோடு பணி நியமனம் பெற்ற எவரும் ஆசிரியராகப் பணியில் தொடரவும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறவும் முடியாத நிலை உருவாகும்.  

11. பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கலந்தாய்வை காலம் தாழ்த்துவது கல்வித்துறையில் நிர்வாக இடர்பாடுகளுக்கும் குழந்தைகளின் கல்விப் பாதிப்புக்கு வழிவகுக்கும். ஆசிரியர் நலனை விட குழந்தைகளின் நலன் முதன்மையானது என்பதால் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கலந்தாய்வுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குவதற்கு நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு அல்லது மேல்முறையீட்டு மனு சமர்பிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

12. தற்போது பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், பணி மாறுதல், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, ஊதிய நிர்ணயம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் அதிகமாகியுள்ளன. இதனால் கல்வி நிர்வாகத்தில் இடர்பாடுகளும், ஆசிரியர் நியமனம் தொடர்பான காலத்தாழ்வுகள் காரணமாக குழந்தைகளின் கல்விப் பாதிப்பும் தொடர்கதையாக உள்ளன. பள்ளிக் கல்வி நிர்வாகம் மூலம் ஆசிரியர் இயக்கங்களிடம் மாதமொருமுறை கலந்துரையாடல் மற்றும் குறைதீர் கூட்டங்கள் நடத்துவது பல்வேறு சிக்கல்களை நிர்வாக அளவிலேயே தீர்ப்பதற்கு வழி வகுக்கும். தமிழ்நாடு அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்.

13. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணி சார்ந்த குறைகளைத் தீர்ப்பதற்காக தமிழ்நாடு  அரசின் மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் 1988 டிசம்பர் 12 இல் உருவாக்கப்பட்டது.  ஆனால் 2001 ஜூன்  மாதம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் கலைக்கப்பட்டது. 2001 சூன் 30 அன்று 63,429 வழக்குகள் நிலுவையில் இருந்தன.  நிர்வாகத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட பிறகு  2017 ஆம் ஆண்டு டிசம்பர் 13 வரை 36 ஆயிரத்து 723 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கவேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகள் காலத்
தாழ்வில்லாமல் தீர்க்கப்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுகிறோம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post