Title of the document

பழைய ஓய்வூதிய நெடுங்கனவு நிறைவேறுமா?


இந்தியாவிலேயே ஒன்றிய அரசு அறிவிக்கும் முன்னரே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முன்னோடி முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது ஓர் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் சரியாக 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்களிப்பாக இவர்களுக்குச் செலுத்துகிறது. இவ்விரு தொகைக்கும் அவ்வக்காலத்தில் அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி கணக்கிடப்பட்டு இறுதியில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது அறியத்தக்கது. கடந்த 31.3.2022 நிலவரப்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் உள்பட 61.28 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்று புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஏப்ரல் 1, 2003 க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம் பணி நிறைவு காலத்தில் தான் இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் மேற்குறிப்பிடப்பட்ட முறையில் சேர்ந்த ஒட்டுமொத்த தொகையையும் ஒரே தவணையாகப் பெறுவர். இடையில் வேறெந்த வழியிலும் இதிலிருந்து ஒரு பகுதியைத் திரும்ப செலுத்தும் வகையில் தற்காலிக முன்பணக்கடனாகவோ, பகுதி இறுதித் தொகையாகவோ பெறுவதற்கு இப்போதைக்கு வழியில்லை.

மாநிலத் தலைமைக் கணக்காயர் அலுவலகத்திலிருந்து கணக்கு முடித்து அளிக்கப்படும் கணக்குச்சீட்டில் உள்ளவாறு இவர்களுக்கு இத்தொகையும் உடன் கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மொத்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் தொகையையும் நிலுவையிலுள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் அரைச் சம்பள விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், சிறப்புச் சேமநலநிதி ஆகியவற்றையும் காசாக்கிப் பெறுவது என்பது எளிதல்ல. இவர்கள் பணிநிறைவு பெற்று வீட்டிற்கு வெறுங்கையுடன் தாம் அரசாங்கத்தால் முதலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.

மேலே கூறிய பணிநிறைவு காலப் பணப்பலன்கள் ஒருவாறு முழுவதும் வழங்கப்பட்டு விட்டதும் அரசுக்கும் இவர்களுக்குமான தொப்புள்கொடி உறவு முடிவு பெற்று விடும். அதன்பிறகு, இவ்விருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறுபது வயதைக் கடந்து பணிநிறைவு பெற்ற இவர்கள் அரசின் சார்பில் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ₹1000 முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையும் பெறத் தகுதியற்றவர்களாக ஆகிப் போய் விடுகின்றார்கள். அதாவது ஒரு ரூபாய் கூட பெற இயலாது.

இத்தகைய சூழலில், இவர்கள் வீடு மற்றும் வாகனம் சார்ந்த மாதாந்திர வங்கிக் கடன் தவணைத்தொகையினைத் தொடர்ந்து செலுத்த புதிதாக நகை அடமானமோ, அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதோ நிகழ்கின்றன. அரசிடமிருந்து கிடைக்கப் பெறும் ஓய்வூதிய மொத்த தொகையில் ஒரு பெரும் பகுதியை இக்கடன்களை அடைக்கவும் எஞ்சியதைக் கொண்டு மகன்/மகளது உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் மேற்கொள்ளும் சூழல் இருப்பது அறியத்தக்கது. இதை முன்கூட்டியே உணரும் ஆசிரியர்கள் பலரும் தாம் பணிநிறைவு பெறும் நாளில் நன்றிக்கடனுடன் நடத்தப்படும் அவர்கள் சார்ந்த இயக்கப் பாராட்டு விழாவில் மிக வெளிப்படையாக அனைவர் முன்னிலையிலும் ஏதேனும் வேலை இருந்தால் கண்டிப்பாகத் தெரிவிக்கவும் என்று கண்கலங்குவதும் மனம் புழுங்குவதும் வேதனைக்குரியதாகும்.

குறிப்பாக, கடந்த 2004 - 2009 வரையிலான காலக் கட்டங்களில் பணி நியமனம் பெற்ற பலர் வயது மூப்பு காரணமாகப் பணி ஓய்வு பெறும் சூழல் தற்போது அதிகரித்துக் காணப்படுவது கவனத்திற்குரியதும் கவலைக்குரியதும் ஆகும். இவர்களுள் பலரது நிலைமை மோசம். காலம் கடந்து வேலை கிடைத்ததால் தள்ளிப்போன திருமண வாழ்க்கையும் அதன் காரணமாக கால தாமதமாக நிகழ்ந்த பிள்ளைப்பேறும் அவர்களது தரமான பள்ளிக்கல்விக்கும் மருத்துவ வசதிக்கும் உழன்று வரும் கால ஓட்டத்தில் மொத்த பணிக்காலமும் முடியும் நிலையில் விளிம்பில் உள்ளனர். இனிதான் இவர்கள் தம் பிள்ளைகளுக்கு நல்ல உயர் கல்வியும் வேலைவாய்ப்பும் அதனைத் தொடர்ந்து சராசரியான மண வாழ்க்கையும் அமைத்துத் தரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இனி குடும்ப வருமானத்திற்கு என்ன செய்வது என்று கையறு நிலையில் நிற்கும் அவலம் கொடுமையானது.

தாம் பணிபுரியும் காலங்களில் ஒரு மதிக்கத்தக்க பதவியில் இருந்து அதிகம் கசங்காத வகையில் அரசு வேலை பார்த்தவர்கள் எஞ்சியுள்ள நாள்களில் தம் குடும்ப பாரத்தைச் சுமக்கும் பொருட்டு அறுபது வயதுக்கு மேல் ஏதேனும் ஒரு வேலைதேடி அலைவதும் தம் தகுதிக்குக் குறைவான அதிக உடலுழைப்புப் பணியை வேறுவழியின்றி ஏற்று நடக்கத் துணிவதும் என்பது சகிப்பதற்கில்லை. இதுபோன்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பல்லாண்டுகள் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பது புலனாகும். இதில் ஒன்றிய, மாநில அரசுகள் கைவிரிப்பதானது இவர்களின் அடிமடியில் கைவைப்பதற்கு ஒப்பானது.

நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் பொருள்கள் மீதான மோகம் ஆகியவற்றில் ஆட்பட்டுத் தவிக்கும் இந்த மத்திய தர வர்க்கம் எந்தவொரு சரியான தொலைநோக்கு திட்டமும் இல்லாமல் வாழ்க்கையைத் துய்க்கும் போக்கில் கையில் கிடைக்கும் காசைத் தாறுமாறாக செலவழித்து விடும் பாங்கு மலிந்துதான் காணப்படுகிறது. 90 விழுக்காட்டினர் மனநிலையும் இவ்வாறாகவே உள்ளது. மீதமுள்ளோரில் ஒரு சிலர் மட்டுமே இன்றைய பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வீடு, நிலம், தங்கம், வெள்ளி, முறையான பங்கு முதலீட்டுத் திட்டம் உள்ளிட்ட சொத்துகளிலும் உரிய உகந்த அதிக பலனளிக்கக்கூடிய மருத்துவக் காப்பீடு மற்றும் அதிக பணப்பலன்கள் கிடைக்கும் நீண்ட கால ஆயுள் காப்பீடு முதலான திட்டங்களிலும் முதலீடு செய்து சேமித்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

இது பரவலாக்கம் அடைவது காலத்தின் கட்டாயமாகும். இதுபோன்ற நிதியாளுகைக் கடைப்பிடிக்கப்படுவதும் சிந்தனைக்குள் வருவதும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். இந்தத் திட்டமிடுதல் அவசர அவசியமாகும். கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மட்டுமே சரியான முறையான சேமிப்பு வழிகள் குறித்த அறியாமையினால் குடும்ப வருமானம் மற்றும் சேமித்த சொத்து ஆகியவை பெருமளவில் கரைந்து நிரந்தர கடனாளியாக்கி விடுகிறது.

இந்த வழியறியாதப் பெரும்பான்மையோர் செய்வதறியாமல் தமக்கு ஏற்கெனவே பரிச்சயமான விவசாயம், நெசவு, கட்டுமானத் தொழில் போன்றவற்றில் ஈடுபட விழைதல் மற்றும் புதிய சிறுகுறு தொழில் முனைவோராக முயற்சித்தல், கடைகள் மற்றும் பெருவணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் ஊழியம் செய்தல், வேறு எதுவும் கிடைக்காத நிலையில் கூலி வேலைக்குச் செல்ல ஆயத்தமாதல் எனத் திக்குத் தேடியலையும் நோக்கும் போக்கும் அதிகரித்துக் கூடும்.

இனி காய்க்காது என்று அடையாளம் காணப்படும் கிளை பரப்பி நிழல் தரும் மரம் எவ்வாறு பிற தேவையின் பொருட்டு அழிக்கப்படுகிறதோ அதுபோல் வருமானத்திற்கு வழியில்லாமல் ஆகிப் போன இவர்களை மிக எளிதாகப் புறக்கணிக்கும் அல்லது கைவிடும் அசிங்கம் மனிதச் சமூகத்தில் மிகக் கூடும். இது நாகரிகம் மிக்க அரசுக்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. பெரும் அவமானகரமானதாகும். உண்மையாகவும் நேர்மையாகவும் உடலும் மனமும் பல நேரங்களில் நோகடிக்கப்பட்ட போதிலும் உவப்புடன் சிரமேற்கொண்டு ஓய்வறியாமல் ஆற்றிய உழைப்புக்கு அரசு தரும் மரியாதை இதுதானோ?

ஓய்வூதியம் வழங்குவது என்பது நிதிநிலை சார்ந்த புற அடிப்படையில் அரசுக்கு வீண் செலவினம் தரும் ஒன்றாக நினைக்கப்படலாம். ஆனால், சமூகவியல் சார்ந்த அக அடிப்படையில் அரசின் எந்திரத்தைச் செவ்வனே சிறந்த முறையில் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைத்திட ஓடாய் உழைத்த உழைப்பாளிகளுக்குக் காட்டும் நன்றிக்கடனாகக் கொள்வதே நலம் பயக்கும். இது அரசின் கடமையும் ஆகும். இதனைச் சுமையாக நினைப்பது அறமற்ற செயலாகும். அரசின் நிதி வருவாயை மட்டுமே கணக்கிலும் கவனத்திலும் கொண்டு, அதற்காக முனைப்பாகச் செயல்பட்டு மனித உதிரிகளை இனி ஒன்றுக்கும் உதவாத உபரிகளாகக் கருதுவது என்பதும் கைவிடத் துணிவதும் மனிதாபிமானமற்ற செயலாகும்.

பெற்று வளர்த்த பிள்ளைகள், பேணிக்காத்த உறவுகள், கூடிக் களித்த நட்புகள், கும்பிட்டு வணங்கும் கடவுள்கள், கூட வாழும் சமூகம் என யாவரும் சக மனிதரைப் போற்றும் தத்தம் கடமையிலிருந்து நழுவி வழுவினாலும் எல்லோரையும் வாழ்விக்க உதித்த விடியல் அரசும் இதுகுறித்து பாராமுகம் கொண்டு அசட்டையாக இருப்பதும் மீண்டும் மீண்டும் இவர்களது ஓங்கி ஒலிக்கும் ஓலக் குரலைக் கேளாதிருப்பது போல் உணர்வின்றி நடப்பது தகுமோ?

மீண்டும் பழுதில்லாமல் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்திடும் நல்லாட்சியை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் காலம் உள்ளவரை மறக்க மாட்டார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும். தாம் வாழும் காலத்தில் அரசால் அளிக்கப்பெறும் ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம் அந்திமக் காலத்தில் சொந்தக் காலில் சுய தெம்புடன் நிற்க உதவும் ஊன்றுகோல் போன்றதாகும். இவர்களது எஞ்சிய முதுமைக்காலம் இனிதே கழிய இதனால் நிறைய வாய்ப்புண்டு. மூத்தோர் சொல் குடும்ப பீடத்தில் நிச்சயம் ஆட்சி புரியும். இத்தகையோரின் இறுதிக்காலம் நிம்மதியாக நகரும். இவர்களது மரணம் குடும்பத்தினரால் மாண்புடன் கொண்டாடப்படும். முதுமையைச் சீரழித்த பலியும் பாவமும் ஒருபோதும் அரசுக்கு நேராது.


தம் பணிக்காலத்தில் முடிசூடா இந்நாட்டு மன்னர்களைப் போல் உலா வந்தவர்கள் வாழ்க்கை ஒரே புரட்டில் தலைகீழாக மாறி ஐந்திற்கும் பத்திற்கும் அலையும் கொடுந்துயரம் இவர்களுக்கு ஒருநாளும் வரவைக்கக் கூடாது என்ற நினைப்பை மெய்யாக்க தற்போதைய தமிழக அரசுக்கு ஒரு துளி மையும் கொஞ்சம் பெரிய மனதும் மட்டும் போதுமானது. பழைய ஓய்வூதியம் வரம் வேண்டி, பன்னெடுங்காலமாக கோடிக்கணக்கான எளிய இதயங்கள் மேற்கொண்டு வரும் குடும்பத்துடனான கூட்டுத் தவம் பலித்திட வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட அனைவரின் நிறைவேறத்தக்க நெடுங்கனவாகும். நிறைவேறுமா?

எழுத்தாளர் மணி கணேசன்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post