Title of the document

15 அம்சக் கோரிக்கைகள் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  

  • ஆசிரியர் நலன் , 
  • மாணவர் நலன் , 
  • கல்வி நலன் , சமூக நலன் சார்ந்த 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம்

நாள் : 20.02.2021 சனிக்கிழமை நேரம் : காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 

ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பறித்து விட்ட தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக வைத்து இதுவரை நடைபெற்றுள்ள 17 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களில் நெஞ்சுறுதியோடு நேரடியாகப் பங்கேற்ற தமிழ்நாட்டின் ஒரே ஆசிரியர் இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி .

  தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி 26.11.2018 ) அன்று மாவட்டத் தலைநகரங்களில் அரசாணை எரிப்புப் போராட்டத்தை நடத்தி , அதற்காக ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் மீது ஏவப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளையும் , 17 ( ஆ ) நடவடிக்கைகளையும் நேர்மைத் திறத்தோடு எதிர்கொண்ட தமிழ்நாட்டின் ஒரே ஆசிரியர் இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி . 

கடந்த சில ஆண்டுகளில் ஆசிரியர்களிடமிருந்து உரிமைப் பறிப்புக்களைத் தமிழக அரசு நடத்தியுள்ளது . அவற்றை மீட்டெடுக்க பொதுமுடக்கக் காலத்திலும் கொதித்தெழுந்து போராடிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி . கூட்டுப் போராட்டங்களிலும் கூடுதல் பங்கேற்பை வழங்கிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி . ஆசிரியர் நலன் , மாணவர் நலன் , கல்வி நலன் சார்ந்த 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மூன்று கட்டப் போராட்டங்களை அறிவித்து , 17.12.2020 ல் மாநிலம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் போராட்டத்தையும் , 09.01.2021 ல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டத்தையும் நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , மூன்றாம் கட்டமாக 20.02.2021 அன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துகிறது . பல ஆசிரியர் பேரினமே ! ஆர்த்தெழுவீர் சென்னை நோக்கி !

 " எங்கே அடக்குமுறையும் , உரிமைப் பறிப்பும் தலைவிரித்தாடுகிறதோ - அங்கே புரட்சி வெடிக்கும் " சேகுவேரா


1. 2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்றைய தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் . 
 
2 . ( அ ) இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் . ( ஆ ) இடைநிலை ஆசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் ஊதிய அட்டவணையில் நிலை 10 ல் , தளம் 40 உடன் முடிவடைவதால் அதன்பிறகு ஆண்டு ஊதிய உயர்வே மறுக்கப்படுகிறது . தமிழக அரசு இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் . 
 
3. ( அ ) 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீதான 17 ( ஆ ) நடவடிக்கைகளையும் , குற்றவியல் நடவடிக்கைகளையும் , பணி மாறுதல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் . இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ( STFI ) தலைவர்களான திரு.மா.ரவிச்சந்திரன் , திரு . P. பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீதான பள்ளிக்கல்வித்துறையின் பழிவாங்கும் 17 ( ஆ ) நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் . 
 
4 . ( அ ) தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் : 37 , 116 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் . ( ஆ ) உயர்கல்வி பயில பின்னேற்பு அனுமதி கோரிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் 5 ஆண்டுகாலமாக கல்வித்துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன . பின்னேற்பு ஆணைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் . 
 
5. ( அ ) மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நீதியரசர் பொன்.கலையரசன் குழு பரிந்துரைப்படி 10 சதவீதமாக உயர்த்திட வேண்டும் . ( ஆ ) மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் . ( இ ) மருத்துவ மாணவர் சேர்க்கையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை , 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு என வழங்கி திருத்திய ஆணை வெளியிட வேண்டும் . 
 
6. ( அ ) ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் . 
 
7. தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் . 
 
8. " கற்போம் எழுதுவோம் " திட்டத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் . 
 
9. 2020-21 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட வேண்டும் . 
 
10. தமிழக அரசு நியமித்த திரு.சித்திக் , IAS தலைமையிலான குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு ஆசிரியர் , அரசு ஊழியர்களின் ஊதியக் குறைபாடுகள் களையப்பட வேண்டும் . 
 
11. தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் , ஒரு ஒன்றியத்திலிருந்து பல ஊர்கள் வேறு ஒன்றியங்களில் சேர்க்கப்பட்டதால் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில் தொடக்கக் கல்வித்துறை உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் . பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு முறை மட்டும் விருப்ப மாறுதல் வழங்கப்பட வேண்டும் . 
 
12. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குவதை பல மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆண்டுக்கணக்கில் தாமதப்படுத்துவதைக் கைவிட்டு உரிய ஆணைகள் உடன் வழங்கப்பட வேண்டும் . 
 
13. தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ( NHIS ) கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . 
 
14. அகவிலைப்படி ரத்து , சரண் விடுப்பு ரத்து , வருங்கால வைப்பு நிதி வட்டிக் குறைப்பு உள்ளிட்ட கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை உடன் வழங்கிட வேண்டும் . 
 
15 . ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளுக்கும் , அவற்றில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த பல்வேறு உதவிகள் சமீபகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன . அவ்வாறு நிறுத்தப்பட்ட உதவிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் . 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post