புதிய இயல்பு முறையில் பொங்கல் கொண்டாட்டம் - சிறு தொழில் வியாபாரிகளுக்கு கை கொடுப்போம். !
மார்கழி மாதம் முடிஞ்சாச்சு. தை மாதம் பிறந்தாச்சு. தை மாதம் என்றாலே பொங்கல் தான் சிறப்பு. உலகில் வாழ் அணைத்து தமிழர்களும் கோலாகலமாக கொண்டாடப்படும் திருநாள் இப்பொங்கல் பெருநாள்.
போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக கொண்டாடப் படும் இத்திருநாள் அண்டை அயலார், உற்றார் உறவினர், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்வது மட்டுமின்றி ஆலயங்களுக்கு சென்று தெய்வ தரிசனமும் செய்வதுண்டு.
ஆனால், இவ்வருடம் அவ்வாறு கொண்டாட முடியாத நிலையில் நிறைய நாடுகள் உள்ளன. அதில் மலேசியா விதிவிலக்கல்ல. தற்போது அரசாங்கம் விடுத்துள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை மற்றும் அவசர கால பிரகடனம் நாம் புதிய இயல்பு முறையில் பொங்கல் பெருநாளை கொண்டாடும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
அதிகரித்து வரும் கொரோன நோய் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த திடீர் நடவடிக்கை பலரின் வருமானத்திற்கு மிக குறிப்பாக சிறு தொழில் வியாபாரிகளுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தற்போது பொங்கல் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களான பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், வாலை இலை, மா இலை, செங்கல், விறகு, சீனி,பால் நெய், பழங்கள், வெற்றிலை, தேங்காய் என இன்னும் பல பொருட்கள் தொடர்பான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தங்களின் பொருட்கள் விற்கப்படாமல் போகிவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர்.
இதில் செலவழித்த பணத்தை மீட்பது மட்டுமின்றி பொருட்கள் விற்பனை ஆகாமல் வீணாகிவிடுமோ என்ற கவலையில் இருப்பர்.
ஆதலால், நாளை கொண்டாடவிருக்கும் பொங்கலுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் இந்த சிறு தொழில் வியாபாரிகளிடமிருந்து வாங்கி அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு மலேசியா வாழ் இந்தியர்களை கேட்டுக் கொள்ளுகையில் நாம் நமக்கு கை கொடுப்போம். மற்றவர் முகத்தில் புன்னகை மலர நாம் காரணமாய் இருப்போம் என்று கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.
அதே வேளையில், அனைவரும் மிக முக்கியமாக அரசாங்கம் அறிவுறுத்திவரும் SOP எனும் நிலையான இயக்க நடைமுறையை பின்பற்ற ஒரு பொழுதும் மறக்க கூடாது. மக்கள் பாதுகாப்பான குறைந்தது 1 மீட்டர் தூர சமூக இடைவெளியை கடைபிடிப்பது; அடிக்கடி கைகளை நீர் மற்றும் சோப்பில் கழுவுதல் ; கை தூய்மையை பயன்படுத்துதல்; முக கவசத்தை சரியான முறையில் பயன்படுத்துதல்; அவ்வப்போது சுற்றுச்சூழல் மற்றும் உபயோகிக்கும் பொருட்களை சுத்திகரிப்பு திரவத்தை கொண்டு தூய்மை படுத்துதல்;
மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்
இதன்வழி கொரோனா தொற்று நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் அண்டை அயலார், நம் நண்பர்கள் என அனைவரையும் நம்மால் காப்பாற்ற இயலும் என கூறி புதிய இயல்பு முறையில் இவ்வருட பொங்கல் திருநாளை அனைவரும் குடும்பத்தாருடன் இன்பமாக கொண்டாட வேண்டும் எனவும் அணைத்து தமிழர்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் சார்ல்ஸ்
Post a Comment