CBSE பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில், ஐ.சி.எஸ்.இ., - சி.பி.எஸ்.இ., பள்ளிகளை மட்டும் திறக்க அனுமதிப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டது. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லுாரிகளில், முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவினருக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காவது நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, தனியார் பள்ளிகளின் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இதன்படி, பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்பு நடத்த அனுமதிக்குமாறு, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பில், அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
அதேபோல, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும், சில நிர்வாகிகள், பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை திறக்க உத்தரவிட்டால், அதை அமல்படுத்தலாம் என, இந்த ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது.
பருவ மழை தீவிரமாக பெய்வதால், பள்ளிகளை திறந்தாலும், அடிக்கடி விடுமுறை விட வேண்டும்; எனவே, டிசம்பர் இறுதி வரை பொறுத்திருந்து, ஜனவரியில் திறக்கலாம் என, சில அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Post a Comment