Title of the document
#Thai_Magazine

ஒரு எக்ஸ்ரே பார்வை

#தமிழகத்தில்_பள்ளிக்_கல்வி_எப்படி இருக்கிறது? 

கடந்த நான்கு மாதங்களாகவே  மக்களின் அன்றாட வாழ்க்கையை எல்லா வழிகளிலும் பாதித்து அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.

பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆரோக்கியம் என ஒவ்வொருவரது வாழ்க்கையும் ஊரடங்கால் வேறுபட்ட நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. அளவில் வேறுபாடுகள் இருந்தாலும் இங்கு பாதிப்பு எல்லோருக்கும் பொதுவாக உள்ளது.

பள்ளிகளையும் குழந்தைகளையும் இந்த ஊரடங்குச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, கல்வியில் புதியபுதிய பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகிறோம்.

பத்தாம் வகுப்பு தேர்வுக் குழப்பங்கள் 

மார்ச் கடைசியில் 24 ஆம் தேதியன்று தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த போது மேல்நிலைப்பள்ளி வகுப்புகளான 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

இறுதித் தேர்வுகள் சில நிறுத்தி வைக்கப்பட்டன.  பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு கால அட்டவணைப்படி ஏற்கனவே திட்டமிடுதல் நடைபெற்று, தேர்வு நடைமுறைகள் முன்னேற்பாடுகள், ஆசிரியர்களுக்கான தேர்வுப் பணி ஒதுக்கீடு ஆகியவை வழக்கமாக நடந்தேறின.

ஆனால் ஊரடங்கால் தேர்வுகள் இருமுறை   தள்ளிவைக்கப்பட்டு பல குழப்பங்களை விளைவித்தது. பின்னர் தேர்வுகள் ரத்து என்று அரசு அறிவித்தது.

பரவல் அச்சுறுத்திய வேளையில், தொற்றுநோய் பரவும் சூழலில் மாணவர்கள் நலன் சார்ந்து அரசு அறிவித்த இந்த முடிவு வரவேற்கத் தக்கது.

அரசின் முடிவைத் தொடர்ந்து மீண்டும் பிரச்சனைகள் உருவாயின. ஆம்… பொதுத்தேர்வு ரத்து என்றால் மாணவர் தேர்ச்சி முடிவுகள் எவ்வாறு என்ற கேள்வி எழுந்தது.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 80 விழுக்காடும், மீதி 20 விழுக்காடு அவர்கள் பெற்ற வருகை சதவீதத்தையும் இணைத்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதிலும் சிக்கல்கள் இருந்தன.

அரசுப் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தும் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாட்களில் மதிப்பீடு செய்த விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

முதலிரண்டு நாட்களிலேயே அது குறித்த ஆய்வுக்கூட்டம் உயர்கல்வி அலுவலர் முன்னிலையில் நடக்கும். ஆகவே தேர்வு மதிப்பீட்டு மதிப்பெண் குறித்த விபரங்கள் பள்ளிகளில் பாட ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் இருவரிடமும் பதிவேடுகளாக முறையாகப் பராமரிக்கப்படும்.

எனவே, அரசின் அறிவிப்பின் படி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் பிரச்சனை வர வாய்ப்புகள் இல்லை.

இதே மதிப்பெண்கள் வழங்கும் முறை தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளே நடத்தப்படவில்லை என்ற பிரச்சனை எழுந்து ஊடகங்கள் வழியே தொடர்ந்து பேசப்பட்டது.

அதுமட்டுமா மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் வழங்க பெற்றோர்களிடம் பல ஆயிரக் கணக்கில் பணம் கேட்கும் நிர்வாகங்கள் குறித்த தகவல்களும் வெளியே தெரிந்தன. இதற்கான ஒரு மாற்றாக கிரேடு முறையில் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தனியார்  பள்ளிகளைக் கண்காணிக்கும் IMS அமைப்புகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலரின் கீழ் பள்ளிகள் இணைக்கப்பட்டன.

எனில் பத்தாம் வகுப்புகளுக்கு தேர்வு நடைமுறைகள் அரசுப் பள்ளிகளைப் போல தனியார் பள்ளிகளுக்கும் பின்பற்றப் பட்டிருந்தால் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம் .

இணையவழிக் கல்விப் பிரச்சனை:  தனியார் பள்ளிகள் 

ஜூன் மாதம் முடியப் போகிறது. வழக்கமான கல்வியாண்டு என்றால் பள்ளிகள் இயங்கி பாடநூல்கள் வழங்கப்பட்டு கற்றல் கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

ஆனால் பள்ளிகள் திறக்கப்படாமல் போனதால், அதற்கு மாற்றாக ஆன்லைன் வகுப்புகளை கையிலெடுத்த தனியார் பள்ளிகள் சமூகத்தில் வேறு வடிவங்களில் பிரச்சனையை உருவாக்கியுள்ளன.

கடந்த ஏப்ரல், மே மாதங்களிலேயே NEET மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்காக ஆன்லைன் பாடங்களைத் தொடங்கி மாணவர், பெற்றோர் மத்தியில் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பித்தன தனியார் பள்ளிகள்.

தற்போது முதல் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை பள்ளி நடைமுறை போலவே காலை முதல் மாலை வரை ஆன்லைன் வகுப்புகள் ஊரெங்கிலும் பிரபலமாகி வருவது ஒரு புறம்.

கல்வி என்பதை ஒரு டிவைஸ் வழியே தரமுடியுமா? ஆசிரியர் – மாணவர் நேரடிக் கற்பித்தல் இல்லை என்றால், கற்றல் நடைபெறுமா? இப்படி ஏராளமான கேள்விகள் ஒருபுறம்.

வீடுகளே குழந்தைகளுக்கு பள்ளிக் கூடங்களாகவும் பெற்றோருக்கு வேலை பார்க்கும் அலுவலகங்களாகவும் மாறிப்போய் மனதளவில் சிக்கல் உருவாகி இயல்பான உறவைச் சிதைக்கும் வன்முறை மறுபுறம்.

பெற்றோர்கள் புலம்பலையும் மாணவர் சலிப்புகளையும்  காது கொடுக்க முடியவில்லை.

பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான இணைப்புகளைத் தராமல் குழந்தைகளின் கல்விக்கட்டணம் முழுமையாகக் கட்டப்பட்டால்தான் சேர்த்துக் கொள்ளும் நிலை.

இதுபற்றிய செய்திகள், புகார்கள் என ஒருபுறம் பூதாகரமாகப் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன.

ஆன்லைன் வகுப்புகளால் தொடர்ந்து பல விபரீதங்கள், தனக்கு ஆன்லைன் வசதியில் கற்றல் சூழல் கிடைக்காததால் கேரளாவில் 14 வயது மாணவி தற்கொலையில் ஆரம்பித்து, தமிழகத்திலும் இப்படியான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்தின.

அதுமட்டுமா, கோவையில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போனில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல் பாலியல் காணொலிகளைக் கண்டு நிஜவாழ்க்கையில் பரிசோதிக்க, அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்த குடும்பத்தில் ஒரு மாணவியை நாசம் செய்த செய்திகள் வரை நம்மை செய்வதறியாது திகைக்க வைக்கின்றன.

கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆன்லைன் வகுப்புகளைத்  தடை செய்த நீதிமன்ற வழக்குகளும் நாம் கவனிக்க வேண்டியவை.

ஓரளவு வசதி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் கைகளில் அலைபேசி / கணினி வசதி இருப்பதால் பள்ளிகளுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதா (அ) இதன் மோசமான விளைவுகளை வைத்து இணைய வகுப்புகளை ஆபத்து என எதிர்மறையாக அணுகுவதா என்று குழப்பத்தில் இருக்கின்றனர் பெற்றோர்கள்.

அதுமட்டுமல்ல, இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. ஆனால் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தி வருகின்றன. அதற்கு காரணமும் தருகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவேண்டுமானால் நிர்வாகம் என்ன செய்வது? ஆதலால் கல்விக் கட்டணத்தைக் கட்டாயப் படுத்துகிறோம் என்கின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வாழ்வாதாரத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள்  சாத்தியமா?

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90% குழந்தைகள் பெரும்பாலும் ஆன்ட்ராய்டு வசதியுள்ள அலைபேசி, கணினி என எந்த வசதியும் இல்லாதவர்கள்.

அப்படியே வைத்திருந்தாலும் இணையவழிக் கல்விக்கு தினம் அவர்களது பெற்றோர்களால் ரீசார்ஜ் செய்ய பொருளாதார வசதி கிடையாது. அன்றாடம் வேலையே இல்லாமல், வருமானமின்றி இருக்கும் குடும்பங்கள், இந்த வசதிகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும்?

அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும்போது, பெரும்பாலும் தங்களை குழந்தைகளிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வருவதாகக் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் வழியே பாடத்தொடர்புடையவற்றை அனுப்பி கற்றலில் ஈடுபடுத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறும் இவர்கள், அந்த வசதி வெறும் 20% குழந்தைகளே பெற்றுள்ளனர் என்பதையும் வருத்தத்துடன் பகிர்கின்றனர்.

சத்துணவுக்காக பள்ளிக்கு வரும் பல லட்சம் குழந்தைகள், மலைவாழ் பழங்குடியினப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், ஊரடங்கால் குழந்தைத் தொழிலாளராக மாறியவர்கள் என பலதரப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி எப்படி சாத்தியம் என்பது திரும்பத் திரும்ப நம்முன் எழும் சந்தேகங்கள்.

உலக நாடுகளில் பின்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் தற்போதைய சூழலில் ஆன்லைன் கல்வியை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கு அவர்கள் ஊரடங்கு சட்டம் போடுவதற்கு முன் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து ஒருநாளில் சிலமணி நேரங்களில் மட்டும் ஆன்லைன் வழியே குழந்தைகளை கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

முக்கியக் காரணம், அங்கு ஒரே கல்வி முறை – பாடத் திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இணையவழிக் கல்வி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலம் தொலைக்காட்சி முறை வழியே இணையவழிக் கல்வியை முன்னெடுத்துள்ளது. ஆனால் நமக்கு மாநில அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள், பன்னாட்டு பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் என பல பிரிவுகளானப் பள்ளிகள்.

அங்கு பயிலும் குழந்தைகள் என வேறுபட்ட சூழலில் ஆன்லைன் கல்வி மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.

பள்ளி இல்லாக் குழந்தைகள் – இப்படியே விட்டுவிடலாமா ?

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வீடு என்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. பள்ளிகளும் இல்லை. வீடுகளும் குழந்தைகளுக்கு பள்ளிகளாக மாற்றம் பெற முடியாது.

இப்படியான சூழலில் குழந்தைகள் கல்விபெற குறைந்தபட்சம் மகிழ்ச்சியாக வாழ ஏதாவதொரு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கல்வி குறித்து தொடர்ந்து பேசி வருபவர்கள்  செயல்பாட்டாளர்கள், தன்னார்வலர் அமைப்புகள், இயக்கங்கள் போன்றவை குழந்தைகளின் கல்விக்காக மாற்று வழிகளை முன்வைத்து வருகின்றனர்.

கல்வித் தொலைக்காட்சியை கல்வித் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது அரசு.

தற்போது  NCERT கல்வி நிகழ்ச்சிகளைத் டிவி சேனல்கள் வழியாக ஒளிபரப்புகிறது. தமிழகத்திலும் SCERT, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இணைந்து NCERT ஐப் பின்பற்றலாம். பெரும்பாலான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. வெர்ச்சுவல் வகுப்பறைகளையும் கொண்டுள்ளன.

இவற்றை எல்லாம் வைத்து கற்பித்தல் செயலுக்கு ஷிப்ட் முறையில் மாணவரை வரவழைத்து பகுதிபகுதியாக பாதுகாப்பான முறையில் கற்றலில் ஈடுபடுத்தத் திட்டமிடலாம்.

அல்லது கிராமங்களில் நோய்த் தொற்று பரவல் இல்லாத இடங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் வீதிகளில்கூட திறந்தவெளி வகுப்பறைகளைத் திட்டமிடலாம்.

ஆசிரியர், பெற்றோர், கல்வி அலுவலர், கல்வியாளர்கள், ஊர் மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய காலமிது. பள்ளிக் கல்வியில் புதிய பரிமாணங்கள் பிறக்க வேண்டும்.

-உமா, பள்ளி ஆசிரியர், கல்வியாளர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post