Title of the document
ஆன்லைன்' வகுப்பு நடைமுறை என்ன? மனிதவள அமைச்சகம் ஆலோசனை
 'ஆன்லைன்' வகுப்பு நடைமுறை என்ன? மனிதவள அமைச்சகம் ஆலோசனை
புதுடில்லி: மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' வகுப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை வரையறுக்கும் பணியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, நாடு முழுதும், மார்ச், 16லிருந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக, மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன. 
பெற்றோர் புகார்
இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளில், 'மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப்' ஆகியவற்றின் மூலமாகவே மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிகமான நேரத்தை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் செலவிட வேண்டியுள்ளதாகவும், அதனால், அவர்களது உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அடுத்ததாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் ஆன்லைன் மூலமாக படிக்க வைப்பது சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.சில வீடுகளில் ஒரே ஒரு ஸ்மார்ட் போன் இருந்து, அந்த வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு எப்படி ஆன்லைன் வழியாக பாடம் கற்பிக்க முடியும் என்றும் புகார் தெரிவித்துள்ளனர். 
இதுதவிர, ஆன்லைன் வழியாக பாடம் கற்கும்போது, தேவையில்லாத அல்லது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இணையதளங்களை குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் ஏற்படும் விளைவு குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், ஆன்லைன் வகுப்பின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வரையறுக்கும் 
பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
நேர வரையறை
இது குறித்து, மத்திய மனிதவளத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ஆன்லைன் வகுப்பின்போது, மாணவர்கள், மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரையே நீண்ட நேரம் தொடர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். 
எனவே, ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்கான நேர வரையறை உருவாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, கல்வியாளர்கள், டாக்டர்கள், மன நல ஆலோசகர்கள், பெற்றோருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். பெற்றோரின் வருவாய், அவர்களது வீடுகளில் உள்ள வசதி, இணைய வசதி போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனவே, இவை அனைத்தையும் ஆய்வு செய்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அந்த 
வட்டாரங்கள் தெரிவித்தன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post