Title of the document
பத்தாம் வகுப்பு மாணவியின் தாய் முதல்வருக்கு எழுதிய திறந்த மடல்
பெறுநர் :
                1. தமிழக முதல்வர் அவர்கள் ,
                2 . தமிழக துணை முதல்வர் அவர்கள்,
                3. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள்.
அனுப்புநர் : 
                  பத்தாம் வகுப்பு மாணவியின் தாய்.
பொருள் : கொஞ்சம் எங்கள் மனவலியை புரிந்துகொள்ளுங்கள்.
ஐயா , 
           நான் நன்கு படித்த தாயாய் இருப்பதால்  என்னுடைய மகள் இந்த கல்வியாண்டில் 2019 -2020 பத்தாம் வகுப்பிற்கு  அடியெடுத்து வைக்கும் போது சராசரி தாயாய் இருந்து விடக்கூடாது என்று தீர்மானித்து இருந்தேன்.   
1. புதிய பாடத்திட்டம், 
2.ஆங்கிலம் முதல் தாள் இரண்டாம் தாள் என்று தனி தனியாய் கிடையாது ஒரே பரிச்சையாய் நூறு மதிப்பெண்ணிற்கு இருக்கும்.
3. கூடுதல் வகுப்பு வைக்கக்  கூடாது.
4. கேள்வித்தாள் குறித்த தெளிவற்ற அறிக்கைகள்.
5. எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத வரலாறு பாட புத்தகச்சொற்கள். 
      இப்படி வருடம் முழுவதும் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் , பெற்றோருக்கும் நீங்கள் கொடுத்த குழப்பங்களும், மன உளைச்சலிற்கும் அளவே கிடையாது. இருந்தும் நாங்கள் எல்லாவற்றையும் மௌனமாய் ஏற்றுக் கொண்டோம். காரணம் எங்கள் பிள்ளையின் பத்தாம் வகுப்பு தேர்வு மட்டுமே எங்கள் கவனமாய் இருந்தது. 
 இப்போதும் உலகம் முழுவதும் கொரோனா கொள்ளை நோய் பிடியில் இருக்க நீங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வின்றி அடுத்த வகுப்பிற்கு  அனுப்பப்படுவர் என்று அறிவித்து விடுமுறை கொடுத்து பிள்ளைகளை பத்திரமாய் வீட்டில் பாதுகாப்பாய் இருக்க வைத்தீர்கள். அதற்கு நன்றி! நல்லது !
ஆனால் மூன்றாம் திருப்புதல் தேர்வு எழுதி கொண்டு இருந்த பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு திடீர் என்று தடை பட்ட தேர்வு  என்பது முடிவை நெருங்கும் ஓட்டப்பந்தய வீரனின் கண்களுக்கு திடீர் என்று இலக்கு மறைக்கப் பட்டது போன்று ஆகிவிட்டது. இனி அந்த வீரன் ஓடவேண்டுமா?  அல்லது நிற்க வேண்டுமா? இதான் எங்கள் பிள்ளைகளின் நிலைமையும் கூட. நாடே, உலகமே முடங்கி கிடக்கும் இந்த நாளில் பத்தாம்  வகுப்பு பிள்ளைகள் மட்டும் எப்படி படித்துக்கொண்டு மட்டுமே இருப்பர்? ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் எல்லா பிள்ளைகளுக்கும் கிடைப்பது எப்படிச் சாத்தியம்? பலமுறை பத்தாம் வகுப்பில் மார்க்ஷீட் அவசியம் அதனால் தேர்வு அவசியம் என்று மட்டும்  பேசுகிறீர்கள். ஏன் ? கொள்ளைநோய் காலத்தில் தேர்வின்றி கொடுக்கப்பட்ட சான்றிதழ் என்ற ஒன்றை நீங்கள் பிள்ளைகளுக்கு மாற்றாக வழங்கக் கூடாது? ஒருவேளை அவசியம் இருக்கும் எனில் விரும்பிய பாடம் படிக்க அந்த அந்த கல்வி ஒரு நுழைவு தேர்வு வைத்துகொள்ளுங்கள் என்று ஒரு சலுகை கொடுக்கலாமே? சரி அப்படி கட்டாயம் தேர்வு வைத்தே தீர்வது என்று நீங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு  இருக்கிறீர்கள் என்றால் தயவு செய்து பத்து நாளைக்கு ஒரு முறை தேர்வு இப்போது இருக்கும், அப்போது இருக்கும் என்று அறிக்கை கொடுப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். 
நீங்கள் கொரோனாவில் சாவும் மனிதர்களின் உயிரை கவனியுங்கள், குடும்பங்களில் இருக்கும் வறுமையை முற்றும் நீக்க வழிவகையை நடைமுறை படுத்துங்கள். பிள்ளைகள் தைரியமாய் வெளியில் வரலாம் கொரோன நோய் தொற்று இனி இருக்காது என்ற நிலையை உருவாக்குங்கள். அதற்கு பிறகு நாங்கள் எங்கள் 
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் சகஜ நிலை வந்த பிறகு ஒரு மூன்று வாரம் பாடங்களை  திருப்புதலுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அதற்கு பிறகு தேர்வு வையுங்கள். 
    தயவு செய்து மே கடைசி வாரம் , ஜூன் முதல் வாரம். ஜூலை கடைசி வாரம் பத்தாம் வகுப்பு போது தேர்வு இருக்கும் என்ற அறிவிப்புகளை சொல்லி சொல்லி எங்களை மனஉளைச்சலுக்கு ஆட்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு எங்கள் பிள்ளையின் உயிர் முக்கியம், அவர்கள் மனஆரோக்கியம் அதை விட முக்கியம். பத்தாம் வகுப்பு தேர்வு எல்லாம் அதற்கு பிறகு தான் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். 
                                                                                    
                   நன்றி, 
                                                                                                                             
      தங்கள் உண்மையுள்ள ,
                                                                                                             பத்தாம் வகுப்பு மாணவியின் தாய் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. S mam . Ur feelings r very correct... when will they understand our children's problems?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post