Title of the document
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு யுக்திகளை கடைபிடித்து வருகின்றனர். இரவில் துண்டை தண்ணீரில் நனைத்து உடலில் மூடி தூங்குபவர்களும் உண்டு. ஆனாலும் முதுகில் உஷ்ணத்தை உணர்வார்கள்.

இந்த மாதிரியெல்லாம் முயற்சிக்கும் நாம் படுக்கை விஷயத்தில் கவனம் இல்லாமல் இருப்போம். இரும்புக் கட்டில், நவீன மெத்தைகளில் படுத்துக்கொண்டு வெட்கையை விரட்ட நினைப்போம். அது சாத்தியமல்ல. இதற்கு நம் பாரம்பரிய முறையே சரியான வழி. கோரைப் பாயை உபயோகிப்பதுதான் இதற்கு சிறந்த தீர்வு. இன்னும் பெரும்பாலான கிராமங்களில் படுக்கை விரிப்பாக கோரைப் பாயையே உபயோகித்து வருகிறார்கள்.

தென்னங்கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் கோரைப்புற்களைக் கொண்டு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. முதன் முதலில் தென்னை, பனை ஓலைகளைக் கொண்டே தயாரிக்கப்பட்டன. பின்பு நாணல் புற்களைக் கொண்டும், நீர்ப்பகுதிகளில் வளரும் கோரைப்புற்களைக் கொண்டும் பாய்கள் தயாரிக்கப்பட்டன.

இப்போது கம்பளி, பிரம்பு, ஈச்சம், பேரீச்சம், மூங்கில், இலவம் போன்றவற்றில் இருந்தும் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உடல் நலனுக்கு உகந்தவையாகும். இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து தூங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பின்னாட்களில் தான் கோரைப்பாய் நெய்தார்கள்.

ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப் புற்கள் வளர்கின்றன. இந்த கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

கோரை என்பது ஒரு தாவரம். கரும்பு போலவே இருக்கும். ஆறு மாதம் வரை வந்தவுடன் அறுவடை செய்யலாம். பிறகு இரண்டாக கிழித்து காய வைத்து அதை நெய்வார்கள். இந்த கோரைப்பாய் உடல் சூட்டை குறைக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கு பயன்படுத்துவார்கள். கப்பல்களில் பயன்படுத்துவார்கள்.

இன்றைக்கு பிளாஸ்டிக் நுழையாத இடமே இல்லை என்றாகிவிட்டது. பாயிலும் பிளாஸ்டிக் வந்துவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான பாய்கள் அதிகமாக வாங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. கோரைப்பாய் போன்ற இயற்கையான பாய்களைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியம். மேலும் அழிந்து வரும் ஒரு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post