2020 ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு பணிகள் துவக்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனை கண்காணிக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
2-வது ஆண்டாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு பதில் இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கலந்தாய்வினை நடத்துகிறது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்வதற்கான மென்பொருளை வடிவமைக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக பொறியியல் கலந்தாய்வினை நடத்தியது. இதனையடுத்து அரசின் வழிகாட்டுதலின்படி 2018 -19-ஆம் கல்வியாண்டில் முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவை அரசு மாற்றி அமைத்தது. அதில் தனக்கு வழங்கப்பட்ட பதவியினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஏற்க மறுத்ததுடன் , அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களையும் கலந்தாய்வு பணியில் ஈடுபடக்கூடாது என கூறினார்.
இதனைத் தாெடர்ந்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தனியார் நிறுவன உதவியுடன் ஆன்லைன் மூலம் நடத்தியது. கவுன்சிலிங்
இந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், 2020-21 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ப்பதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் உருவாக்கும் பிரத்யேக மென்பொருளை உருவாக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் , உறுப்பினர்களாக சந்தோஷ்குமார் ஐ.ஏ எஸ் சந்தோஷ் கே.மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் புதிய மென்பொருள் உருவாக்கம் மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 25 முதல் பொறியியல் கலந்தாய்வு துவங்கி ஜூலை 28-ஆம் தேதி வரையில் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த ஆண்டு கலந்தாய்வு துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது
Post a Comment