பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி சி.பி.எஸ்.இ. அறிமுகம் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
Image result for CBSE EXAM

 பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் புதிய செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது.  சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலில் தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வு தொடங்கியது.   இந்த நிலையில் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேற்று ஆரம்பித்தது. நாடு முழுவதும் 21 ஆயிரத்து 400 பள்ளிகளை சேர்ந்த 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.  முக்கிய பாடங்களில் ஒன்றான ஆங்கிலம் பாடத்தேர்வு நேற்று நடைபெற்றது.   இந்த தேர்வு எளிதாகவே இருந்ததாகவும், தகவல் இல்லாத வினாக்கள் மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும் மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல் பாடத்தேர்வு நடைபெறுகிறது.  கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.    இதனால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினார்கள்.  இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திருப்பதி தெரிவித்து இருந்தார்.  அதன்படி, வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுக்க சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இந்த ஆண்டு புதிய செயலியை (அப்ளிகேஷன்) அறிமுகம் செய்து இருக்கிறது.    சி.டி.எம்.எஸ். (மத்திய தேர்வு மேலாண்மை முறை) என்ற இந்த புதிய செயலியில் வினாத்தாள்களை வங்கியில் இருந்து எடுத்து வந்து மாணவர்களுக்கு வழங்கும் வரையில் பல்வேறு விதமான செயல்முறைகளை செய்ய வேண்டும்.  பொதுவாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தேர்வு வினாத்தாளை பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கும். அங்கிருந்து தான் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வினாத்தாளை பெற்று வந்து மாணவர்களுக்கு வழங்கும்.  இதற்காக வங்கிகளில் உள்ள அதிகாரிகள், தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளின் அதிகாரிகளின் செல்போனில் இந்த புதிய செயலி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.   அந்த செல்போன் எண்ணுக்கு வரும் ‘ஒரு முறை கடவுச்சொல்’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) மூலமே இந்த செயலியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்படுத்த முடியும்.  அந்தவகையில் வங்கியில் அரக்கு ‘சீல்’ இடப்பட்ட வினாத்தாளை வங்கி அதிகாரிகள் செயலியில் இருக்கும் ‘கேமரா’ மூலம் படம் பிடிக்க வேண்டும். அந்த படத்தில் சீல் இடப்பட்ட அரக்கு சரியாக மூடப்பட்டு இருந்தால் மட்டுமே படம் பதிவாகும்.   அப்போது வங்கி இருக்கும் இடம், நேரமும் அதோடு சேர்ந்து பதிவாகும்.  அங்கிருந்து வினாத்தாளை பெற்று செல்லும் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பள்ளிகளில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் வினாத்தாள் கவரை திறந்து படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது பள்ளி இயங்கும் இடம், நேரமும் அதோடு சேர்ந்து பதிவாகும்.  அதேபோல், தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் எழுதிய விடைத்தாளும் அரக்கு ‘சீல்’ இடப்பட்டு கவர் செய்யப்படும். அதையும் தேர்வு மைய கண்காணிப்பாளர் செயலியில் படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும்.   சரியாக சீல் இடப்பட்டு இருந்தால் மட்டுமே படம் பதிவாகும். இந்த செயல்முறைகள் அனைத்தும் உடனுக்குடன் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு சென்று விடும்.    இதில் எதுவும் முறைகேடுகள் நடந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   இந்த புதிய செயலி முறை வரவேற்கத்தக்க ஒன்று என்றும், இதனால் வினாத்தாள் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மேலாண்மை சங்கத்தின் செயலாளர் பி.அசோக் சங்கர் தெரிவித்தார்.
Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments