மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ‘1 பிளஸ் 3’திட்டம்: தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள சங்க நிர்வாகிகள்

 மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பேரை தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு ஊழி யர்கள் சங்கங்களும் தங்கள் பங்குக்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.    தங்கள் போராட்டத்தை ஒடுக்கியவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தி சங்க உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குரூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.    போராட்டத்தின்போது அடைந்த துயரங் களை உருக்கமாக தெரிவித்து, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பணிக்குச் செல்லும் ஊழியர்கள், தபால் மூலம் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.    அதோடு, தங்கள் குடும்பத்தில் உள்ளோரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.    மக்களவைத் தேர்தலில் சிந்தாமல், சிதறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் 100 சதவீதம் ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.    ஒரு அரசு ஊழியர் குறைந்தது தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையாவது தாங்கள் சொல்லும் கட்சிக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வரு கின்றனர். இதை ‘1 பிளஸ் 3’ என பெயரிட்டு அழைக்கின்றனர்.    இதன்படி ஒரு அரசு ஊழியர் அவரது தந்தை, தாய், மனைவி, வாக்களிக்க தகுதி உள்ள மகன், மகள் ஆகியோரில் குறைந்தது 3 பேரையாவது தங்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்களிக்கச் செய்ய பிரச்சாரம் செய்து வருகின்றனர்.    இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:   எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் ஒடுக்கப்பட்டோம். எங்கள் வலிமையைக் காட்ட இதுவே தருணம்.   எனவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது எப்படி ஒற்றுமையுடன் செயல்பட்டோமோ அதே ஒற்றுமையுடன் எங்கள் வலிமையை இத் தேர்தலில் காட்டுவோம். இதற்காக 1 பிளஸ் 3 திட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் எங்களது பாதிப்பை உணர்ந்துள்ளனர்.    எனவே அவர்களையும் 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம் என்றார்.