பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதிமுதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பெரும்பாலான பகுதிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், போராட்டம் தொடர்பான விவகாரத்தில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு எதிரான வழக்கில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப முடியுமான என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவோம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், மத்திய அரசின் துப்புரவு தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இரண்டு முறை நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தள்ளி வைத்தோம், கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அளித்த உத்திரவாதத்தை செயல்படுத்த தவறியதால் தான் மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். விரும்பிய இடத்தில் பணியிடமாறுதல் என்ற சலுகை வழங்கி போராட்டத்தை நீர்த்து போக செய்ய அரசு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பேச்சுவார்த்தை நடத்த முதல்வரை அறிவுறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லுமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை 90 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் என்றும் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று நீதிபதி கூறியுள்ளார். அரசும் ஊழியர் சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக தற்போது உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும், முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்
Post a Comment