மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால், அந்த நாள்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து, மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று, பல துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு நாள்கள் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலர்கள், அனைத்து அரசுத் துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
ஜனவரி 8, 9 ஆகிய இரு நாள்களில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் அங்கீகாரம் பெறாத ஊழியர்கள் சங்கங்கள் பங்கேற்கப் போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்று அரசுத் துறைகளின் அன்றாடப் பணிகள் பாதிக்கக்கூடிய வகையில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 பிரிவு 20,22,22ஏ ஆகியவற்றை மீறும் செயலாகும்.
எனவே, இதுபோன்ற விதி மீறல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அதையும் மீறி இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊதியம் கிடையாது: வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அந்த இரண்டு நாள்களுக்கும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளும் வழங்கப்படமாட்டாது. தினக்கூலி அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள் அந்தப் பணியிலிருந்து நீக்கப்படுவர்.
அதோடு, இந்த இரண்டு நாள்களும் மருத்துவ விடுப்பைத் தவிர, வேறு எந்தவகையான விடுப்பும் ஊழியர்கள் எடுக்க அனுமதிக்கக்கூடாது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment