Title of the document
கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்களுக்கு நகர ஊரமைப்புத்துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் சங்கச் செயலாளர் போஸ்கோ தாக்கல் செய்த மனுவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களது சங்கத்தைச் சேர்ந்த 3020 பள்ளிகள் உள்ளன. கடந்த 80 ஆண்டுக்கு மேல் கல்விச் சேவை செய்து வருகின்றோம். எங்களது கல்வி நிறுவனங்கள், கடந்த 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது கட்டடச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று கட்டப்பட்டவை. இந்த கட்டடங்கள் காலமுறை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னர் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களின் கட்டடங்களுக்கு நகர ஊரமைப்புத்துறை இயக்குநர் அனுமதி பெற வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளைப் பின்பற்றி அனுமதி பெறாத கட்டடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் தரப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
 இதேபோல் திண்டுக்கல், மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
 இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post