
ஆசிரியருக்கு மாணவர்கள் கொடுத்த பரிசு "புல்லட்"..! கண்ணீர் மல்கும் பின்னணி உண்மை..!
மதுரை கோட்டக்குடி சி.எஸ்.ஐ நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் வேதமுத்து. இவர் பணி நிறைவையோட்டை, பள்ளியில் இருந்து கிளம்பிய தருணத்தில் ஒட்டு மொத்த மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை கரைய வைக்கிறது.
1996 ஆம் ஆண்டு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த வேதமுத்து, 2019 வரை அவரது பணியை தொடர்ந்தார். அவரது பணியின் போது மாணவச்செல்வங்களிடம் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும், அதேவேளையில், அவர்களது படிப்பில் அதிக ஆர்வமும் செலுத்தி வந்தார்.
வேதமுத்து சார் என்றாலே எங்களுக்கு அவ்வளவு பிரியம் என பள்ளி மாணவ-மாணவிகள் கூறுகின்றனர். அவர்களையும் தாண்டி மாணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுக்கு காரணமான பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி, எதில் மாற்றம் கொண்டு வர வேண்டுமோ அதில் மாற்றம் கொண்டு வரக்கூடிய மிக சிறந்த ஆசிரியராக அந்த ஊருக்கே திகழ்ந்துள்ளார் வேதமுத்து.
இந்நிலையில் இந்த ஆண்டு அவருக்கு பணி நிறைவு என்பதால் இதனை அறிந்து கொண்ட மாணவ மாணவியர்கள் கதறி அழத்தொடங்கினர். தலைமை ஆசிரியர் வேதமுத்துவை ஒருநாளும் மிஸ் பண்ண முடியாது என கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
தங்கள் குழந்தைகளுக்கு மிக சிறந்த ஆசிரியராக இருந்து வந்த வேதமுத்து அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் பணி நிறைவின் போது மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அவருக்கு விழா எடுத்துள்ளனர்.
இந்த விழாவின்போது தலைமை ஆசிரியராக வேதமுத்துவிற்கு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக புல்லட் அன்பு பரிசாக வழங்கப்பட்டது.
அப்போது தலைமை ஆசிரியர் வேதமுத்து மாணவ மாணவிகளுக்கு மரச் செடிகளை அன்பு பரிசாக கொடுத்தார். மாணவ-மாணவிகள் மட்டுமின்றி ஊர் மக்களே இவரை பாராட்டியதோடு கண்ணீர் மல்க அவரைப் பிரிய மனமில்லாமல் பிரியாவிடை கொடுத்தனர்.
ஆசிரியர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவருக்கு பரிசளித்த புல்லட் வண்டியிலேயே ஆசிரியரையும் அமர வைத்து, அவரது வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
மாணவ-மாணவிகளின் இந்த சம்பவம் அந்த கிராமம் மட்டுமின்றி, மதுரையை பேசுகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment