
தயிர் ஒரு ‘புரோபயாடிக் உணவு’(Probiotic food) என்கிறோம். அப்படி என்றால் என்ன?
பாக்டீரியாவில் நன்மை செய்யும் பாக்டீரியா, தீமை செய்யும் பாக்டீரியா என இரண்டு வகை உண்டு. இயற்கையாகவே நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள உணவை `புரோபயாட்டிக் உணவு’ என்கிறோம். நம் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிற பாக்டீரியா வகைகளும் ஈஸ்ட் வகைகளும் தயிரில் அதிகமுள்ளன. இவை உணவுச் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.
நம் செரிமான மண்டலத் தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் உள்ளன. இவை உணவைச் செரிப்பதற்குப் பெரிதும் உதவுவதுடன், உணவுக் கழிவை முறைப்படி வெளியேற்றவும் உதவுகின்றன. இந்த நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்போது செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிடும்போது, இந்த நல்ல பாக்டீரியா வகைகள் அழிந்துபோகின்றன. எனவேதான், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைச் சாப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. தயிர் போன்ற புரோபயாடிக் உணவின் சத்து முழுவதுமாகக் குடலில் உறிஞ்சப்பட வேண்டுமானால், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வகைகள் ஓரளவுக்காவது இருக்க வேண்டும்.
Post a Comment