Title of the document

அர்ப்பணிப்பு இருந்தால் அரசுப்பள்ளியும் அழகாகும் என ஆசிரியர்கள் அசத்துகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 173 மாணவ-மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்கள் எடுத்த முயற்சியால் இப்பள்ளி தனியார்
பள்ளிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. இங்குள்ள இயற்கை சூழல் தனியார் பள்ளிகளைவிட அழகாக காட்சியளிக்கிறது. திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ‘அரசுப்பள்ளிகளை காப்போம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதை அறிந்து, அவர்களை கோடேபாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து பேசினர். இத்திட்டத்தின் கீழ் எங்களது பள்ளியையும் அழகாக மாற்ற உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அந்த அமைப்பில் உள்ள ஆசிரியர்களான பாண்டியன், முருகன், சந்தோஷ்குமார், அரவிந்த் ராஜா, சுரேஷ்கண்ணன், ராஜசேகரன், பிரபாகரன் ஆகியோர்  கோடேபாளையம் பள்ளியில் முகாமிட்டு, விடுமுறை தினங்களில், இப்பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் அழகான ஓவியங்கள், அறிவியல் மேதைகளின் உருவங்கள், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள படங்களை தத்ரூபமாக வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென எந்த கட்டணமும் வசூலிக்காமல் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே, விழுப்புரம், தேனி, விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 26 பள்ளிகளை அழகாக மாற்றியமைத்த  அந்த இயக்கத்தினர் தற்போது இப்பள்ளியை தேர்ந்தெடுத்து, அழகுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 
பள்ளியின் சுற்றுப்புற சூழல் சுத்தமாக இருந்தால், கல்வி கற்கும் எண்ணம் மாணவர்களுக்குள் தாமாக உதயமாகும் என்பதை கருத்தில்ெகாண்டும், மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கிலும் இங்குள்ள சுவர்கள் அனைத்தும் சித்திரமாக மாறி வருகிறது. சிதிலமடைந்து கிடந்த இப்பள்ளியின் சுவர்கள் அனைத்தும் தற்போது அழகான ஓவியங்களாகவும், பாடங்கள் தொடர்பான படங்களாகவும், பொன்மொழிகளாகவும் மாறிவிட்டன. இதையெல்லாம் பார்த்து பரவசப்படும் இங்குள்ள மாணவர்கள், இப்பள்ளியில் படிப்பதை பெருமையாக கருதுகிறோம் என்கின்றனர். 
இப்பணியை மேற் ெகாண்டு வரும் ஆசிரியர்கள் கூறியதாவது: குழந்தைகளுக்கான கற்றல் சூழலை  இனிமையாக்கினால், அவர்களுக்கு சுமை தெரியாது. இதுபோன்று மற்ற ஆசிரியர்களும் தாங்களாக முன்வந்து தங்களது பள்ளிகளை அழகுப்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு நல்லமுறையில் பாடம் கற்பித்து கொடுத்தால் தனியார் பள்ளி மோகம் குறைந்து, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும். அரசுப்பள்ளி என்றாலே அழகாக இருக்காது, கட்டமைப்பு இருக்காது, தரம் இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இது தவறு. அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால் அரசுப்பள்ளியும் அழகாகும், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஜொலிப்பார்கள்.இவ்வாறு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post