249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில், காலியாகவுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என, 249 பணியிடத்துக்கு, தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து, கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள, 38 பணியாளர்கள், 211 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இனசுழற்சி முறையில், நேர்முகத்தேர்வு மூலம், நியமனம் நடக்கும். கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி. 2018 ஜூலை, 1ல், 25 வயது பூர்த்தி அடைந்து, 35 வயதுக்குட்பட்டோர், அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விதவைகள், கணவரால் கைடவிடப்பட்ட பெண்களுக்கு, 40 வயது வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வசிக்கும் பெண்களின் கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. வயது, 20 முதல், 40க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கையாளும் திறன், பதிவேடுகளை எழுதும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு, 25 முதல், 43 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு, கடந்த ஜூலை, 1ல், 20 வயது முடிந்து, 40க்குள் இருக்க வேண்டும். விதவை உள்ளிட்டோர், மலைப்பகுதியில் வசிப்போர், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். காலிப்பணியிட, கிராமத்தைச் சேர்ந்தவராகவும், இல்லாதபட்சத்தில், 10 கி.மீ.,க்கு உட்பட்ட ஊராட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, குடும்ப, ஆதார் கார்டு ஆகியவற்றில் ஒன்றை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். சான்றொப்பமிட்ட கல்வி மாற்று சான்று, மதிப்பெண், ஜாதி, இருப்பிடம் மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி சான்றுகளை இணைத்தல் அவசியம். www.salem.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அக்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக அறை எண்: 204ல், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை அணுகி விபரம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment