பாடத்திட்டத்தை 50% குறைப்பது வரவேற்கத்தக்கது: மத்திய அமைச்சர்


பள்ளிகளில் பாடத்திட்டத்தை 50 சதவீதமாக குறைத்துவிட்டு விளையாட்டுப் போட்டிகளை கட்டாயமாக்குவது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் எடுத்துள்ள முடிவுக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் நடைபெறும் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தும் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தில்லியில், வருடாந்திர வர்த்தக மாநாட்டின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், ரத்தோர் கலந்துகொண்டு பேசியதாவது: அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களான ஹிமா தாஸ், ஸ்வப்னா பர்மன், சுஷில் குமார் உள்ளிட்டவர்கள் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள்.  ஒன்றுமே இல்லாத நிலையிலும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடு வெற்றி பெற்ற இவர்களெல்லாம் நாட்டின் ஆகச்சிறந்த உதாரணங்கள்.
விளையாட்டுகளை அடித்தட்டு மக்களுக்கும் நம்மால் கொண்டு செல்ல முடிகிறது என்பது பெருமையாக இருக்கிறது.
சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவை வெறுமனே பிரதிநிதிப்படுத்துவதற்காக மட்டும் நமது இளைஞர்கள் செல்வதில்லை. மாறாக, தங்கப் பதக்கங்களை வென்று திரும்புகின்றனர். அது முற்றிலும் பாராட்டத்தக்க விஷயம்.
பள்ளிப்பாடத்திட்டத்தை 50 சதவீதமாகக் குறைத்துவிட்டு, விளையாட்டுப் போட்டிகளை கட்டாயமாக்கப் போவதாக, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருக்கிறார். அது வரவேற்கத்தக்க முடிவாகும்.
கல்வி என்பது வகுப்பறைகளை மட்டுமே சார்ந்தது அல்ல. மைதானத்திலும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏராளமாக உள்ளன என்றார் ரத்தோர்.

0 Comments:

Post a Comment