Title of the document
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்ககல்வி இயக்குனர், மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குனர் ஆகியோர், அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கல்வித்துறை நிர்வாகத்தை மாற்றியமைக்க பல கருத்துருக்களை தெரிவித்திருந்தனர்.
அதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் ஆய்வாளர். மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர், உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோருக்கு அதிகாரம் அளித்தல் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகள் உள்ளன. 8 ஆயிரத்து 403 நிதி உதவி பெரும் பள்ளிகள் உள்ளன. 12ஆயிரத்து 419 சுயநிதி தனியார் பள்ளிகள் உள்ளன. 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 67 மாவட்ட கல்வி அதிகாரிகள் இவர்கள் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆரம்பகட்ட நிலையில் இவர்கள் நிர்வாகம் செய்கின்றனர். அதேபோல் 32 மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் 836 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை நிர்வகிக்கின்றனர். 4 ஆயிரத்து 322 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. இவற்றை 17 ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இவர்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தவிர மற்ற கல்வி அதிகாரிகள் சம பதவி நிலையில் உள்ளவர்கள். 
இந்த பள்ளிகளை இந்த அதிகாரிகள் கண்காணிப்பது, நிர்வாகம் செய்வது ஒழுங்கு படுத்துவதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கிடையே அங்கீகாரமற்ற பள்ளிகளும் முளைத்து விடுகின்றன. ஆகையால் தொடர்ச்சியான ஆய்வுகளை நடத்தவும், பள்ளிகள் சிறப்பாக செயல்படவும் இந்த அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகல்வி இயக்குனர், உயர்நிலைப்பள்ளிகளுக்கான 2910 உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 2913 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க கூடிய அதிகாரம் பள்ளிகல்வித்துறை இயக்குனருக்கு உள்ளது.
அதேபோல் தொடக்கக்கல்வி இயக்குனரை பொறுத்த அளவில் 836 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இணை இயக்குனரை பொறுத்த அளவில், 23 ஆயிரத்து 815 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பாட வாரியாக நியமிக்கவும், 344 உடற்கல்வி இயக்குனர்களை மேல்நிலைப்பள்ளிகளில் நியமிக்கவும் அதிகாரம் உள்ளது. இணை இயக்குனர்(பணியாளர் தொகுப்பு) பொறுத்த அளவில் 61 ஆயிரத்து 451 துணை ஆய்வாளர்கள், பள்ளி உதவியாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் 120 விளையாட்டு இயக்குனர்கள் 2512 உதவியாளர்கள் ஆகியோரை நியமிக்கின்ற அதிகாரம் உள்ளது. இணை இயக்குனர்(தொழில் பிரிவு) பொறுத்தளவில் 1981 தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. 
அதனால், மாவட்ட, வட்டார அளவில் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று, மேற்கண்ட 100 இயக்குனர்களும் தங்களது கருத்துருவை தெரிவித்திருந்தனர்.
அவர்களின் கருத்துருவை அரசு நன்கு பரிசீலித்து மாவட்ட, வட்டார அளவிலான அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிர்வாகம் பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரங்களை வழங்குகிறது. இதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சிஇஓ) அனைத்து வகையான பள்ளிகளையும் நிர்வாகம் செய்வார். அதாவது ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், நர்சரி மற்றும் சுயநிதியில் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகளும், உதவி தொடக்க கல்வி அலுவலர்(ஏஇஇஓ) இனிமேல் வட்டார கல்வி அலுவலர்(பிஇஓ) என்று அழைக்கப்படுவர். 
இவர்களின் எல்லைக்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் ஆய்வு செய்வார் மற்றும் மேற்பார்வையிடுவார். அதாவது, ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப்பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வார் மேற்பார்வையிடுவார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post