Title of the document


கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சிவகாசியில் நோட்புக் தயாரிக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி, மூல பொருட்களின் விலை உயர்வால் 20 சதவீதம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் பாடநோட்டுகளின் விற்பனை சூடுபிடிக்கும்.

மாணவர்களுக்கு தேவையான பாடநோட்டுகளை தயார் செய்யும் பணி ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசியில் 25க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.லாங்சைஸ், பிராடிக்கல், கணக்கு, இரண்டு கோடு, நான்கு கோடு, கிராப் நோட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நோட்டுகள் தரமான பேப்பர், பல வண்ணங்களில் அட்டை என பல்வேறு டிஸைன்களில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் நோட்டுகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நோட்புக்கிற்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் போடப்பட்டதாலும், நோட்புக் தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் விலை உயர்வாலும் நோட்புக் விலை இந்த ஆண்டு 10 முதல் 20 சதவீதம் வரை உயரும் என நோட்புக் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நோட்புக் தயாரிப்பாளர் சங்கர் கூறுகையில், ‘பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக சிவகாசியில் அச்சு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பள்ளி நோட்டுகள் தரமாக இருப்பதால் தனிமவுசு உண்டு. ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு பாட நோட்டுகளின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும். கடந்த ஆண்டு நோட்டுபுக் தயாரிக்கப்படும் பேப்பர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தற்போது பேப்பர் தட்டுப்பாடு இல்லை. இந்த ஆண்டு ஆர்டர் அதிகமாக வந்துள்ளது’ என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post