Title of the document


தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த தடை சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனு விவரம்:
இந்திய சட்ட கமிஷன் பரிந்துரையின்படி, 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் வீதம் இருக்க வேண்டும். தற்போது 10 நீதிபதிகள்தான் உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், வழக்குரைஞர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 10 சட்டக் கல்லூரிகளே உள்ளன.
கடந்தாண்டு சட்ட கல்லூரியில் சேர விரும்பிய 6,036 பேருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதைத் தடுக்கும் விதமாக, தடை சட்டமானது தமிழக அரசால் 2014 ஜூலை 30-இல் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்புக்கு எதிரான இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:-
கல்வி அளிப்பதும், கல்வி நிலையங்கள் அமைப்பதும், அடிப்படை உரிமையாகும். தற்போது, தனியார் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி, அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டக் கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டத்தை இயற்றியதாக தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், போதுமான அளவில் மாநில அரசே சட்ட கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை எதுவும் இல்லை. குறைந்த செலவில் தரமான கல்வியை வழங்காவிட்டால், எந்த தனியார் கல்வியும் தொடர்ந்து நிலைக்க முடியாது.
இந்த சட்டத்தை பொருத்தவரை, இது எத்தனை ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எதுவும் தெரிவிக்கவில்லை.
எனவே, இந்த தடை நீண்ட காலத்துக்கு நீடிக்கும். இதனால், இந்தத் தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இந்த சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறி, அவற்றை ரத்து செய்கிறோம்.
சட்டப் பல்கலைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்: வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தவை ரத்து செய்கிறோம். சட்ட கல்லூரி தொடங்குவதற்கான அவர்களது விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை காலதாமதமாக நிராகரித்தற்காக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ரூ.20 ஆயிரம் வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post