Title of the document

உலகின் இளம் வயது செஸ் சாம்பியன்: தமிழக செஸ் வீரர்  குகேஷ் சாதனை!


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58வது நகர்த்தலில் குகேஷ் வீழ்த்தினார்.

இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.

கடைசி நேரத்தில் மாறிய ஆட்டம்

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 13 சுற்றுகளில் குகேஷ் - டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14வது சுற்று இன்று (டிச. 12) தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையில் முடியும் என்ற நிலையிலேயே இருவரின் ஆட்டமும் நீடித்துவந்தது.

எனினும் போட்டி முடிவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பு 55வது நகர்த்தலில் லிரென் செய்த சிறிய தவறு, குகேஷுக்கு சாதகமாக அமைந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து ஒரு புள்ளியைப் பெற்றார். குகேஷ் 7.5, டிங் லிரென் 6.5; இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார்.

சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்.

குகேஷ் பேட்டி

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற பிறகு குகேஷ் பேசியதாவது :

''டிங் லிரென் யாரென்று நம் எல்லோருக்கும் தெரியும். கடந்த சில ஆண்டு கால வரலாற்றின் சிறந்த ஆட்டக்காரராக லிரென் உள்ளார். அவ்வளவு அழுத்தங்களுடன் அவர் கொடுத்த கடினமான ஆட்டத்தை வைத்துப்பார்த்தால், எனக்கு அவர்தான் உண்மையான உலக சாம்பியனாகத் தெரிகிறார். லிரெனுக்கும் அவரின் குழுவுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு எதிராக ஆடிய அவருக்கு (டிங் லிரென்) என் முதல் நன்றி. இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய 6 - 7 வயதிலிருந்தே இதனைக் கனவு கண்டு அதிலேயே வாழ்ந்துவந்தேன். ஒவ்வொரு செஸ் வீரருக்கும் இருக்கும் கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகால தீவிர பயிற்சிக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. போட்டிக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். தற்போது இளம் செஸ் வீரனின் கனவு நனவாகியுள்ளது.

எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து உலக செஸ் சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் என் நாட்டுக்கு அப்பட்டம் கிடைத்துள்ளது. இந்த நாளுக்காக 10 ஆண்டுகாலமாக உழைத்தேன். இதை விட சிறந்த உணர்வு இருக்க முடியாது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை உரித்தாக்குகிறேன் '' எனக் குறிப்பிட்டார்.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post