TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கருணை காட்ட வேண்டுகோள்
12 ஆண்டுகளாக தவிர்ப்பாணை வேண்டி காத்திருக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கருணை காட்ட வேண்டும் - இயக்குனருக்கு வேண்டுகோள்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மன்றம்
நா. சண்முகநாதன் சந்தித்து வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வந்த கல்வித்துறை சார்ந்த பணி நியமன வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி நவம்பர் 16, 2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனையுடன் அடிப்படை ஊதியம் மட்டும் பெற்று கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 1500 ஆசிரியர்களுக்கும் அந்தந்த காலகட்டத்தில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு , வளர் ஊதியம் , ஊக்க ஊதியம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , பிரசவ விடுப்பு அனுமதிப்பு , பணி வரன்முறை போன்றவை கூட இன்றளவும் இவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.இவர்களில் சிலர் பணி ஓய்வு பெறும் வயதையும் தற்போது நெருங்கி விட்டனர் . இதில் 2012 முதல் சிலரும் பணியேற்றது முதல் அடிப்படை ஊதியம் மட்டும் பெற்றுக் கொண்டிருந்த பலர் 2019 முதல் மாத ஊதியம் ஏதும் இல்லாமலேயும் தற்போது வரை பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இவர்களுக்கு கேரளா , ஆந்திரா , கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த நடைமுறைகள் சிறப்பாக செயல்படுத்துவதைப் போல தமிழகத்திலும் நவம்பர் 16 , 2012 அன்று அப்போதைய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி இவ்வகை ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து அவர்கள் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து அவர்களது பணியை வரன்முறை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு காத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனையுடன் எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாமல் அவரவர் பணிபுரியும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை ஆண்டுக் காண்டு அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளிலும், ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த ஆசிரியர்கள் தாங்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களது கற்பித்தல் திறமைக்காக மாநில அளவில் மாவட்ட அளவில் கல்வித் துறையால் பாராட்டுகளும் நற்சான்றிதழ்களும் பலரும் பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பணியில் சேர்ந்தது முதலே ஒருவித அச்ச உணர்வுடன் பணி பாதுகாப்பு இன்றி பணியாற்றி வரும் இவர்களுக்கு தகுதித் தேர்வு நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டால் இது தொடர்பாக இதுவரை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். கல்வித்துறை அதிகாரிகளுக்கும் வழக்குத் தொடர்பான பணிச்சுமைகளும் அறவே நீங்கிவிடும். எனவே நவம்பர் 16 , 2012 வரை அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில்நிரந்தர பணியிடத்தில் பணிபுரிந்து வரும் தகுதி தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளித்திட அரசுக்குத் தக்க பரிந்துரையை செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment