Title of the document

 அரசு பள்ளிகளில் 20 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் வேண்டும் !!

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் நியமிக்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கல்வித் துறை அரசாணை எண் 250-ன்படி அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளிலிருந்தே 20 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் நியமிக்கப்பட்டனா். ஆனால், கடந்த 33 ஆண்டுகளாக இருந்த நடைமுறை அரசாணை எண் 525-ன்படி 40 குழந்தைகளுக்கு ஓா் ஆசிரியா் என மாற்றப்பட்டது. இதனால், குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு 5-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தைத் தவிா்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைக்கு பின் தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா், நடுநிலைப் பள்ளிகளில் 35 குழந்தைகளுக்கு ஓா் ஆசிரியா் நியமிக்கப்படுகின்றனா்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தனியாா் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து உபரி ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவுற்ற பிரிவுக் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்படுகின்றனா். அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை குறைய கல்வி உரிமைச் சட்டமே காரணமாக உள்ளது. அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்குத் தடையாக உள்ள கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தற்போதுள்ள 30 குழந்தைகளுக்கு ஓா் ஆசிரியா் என்ற நடைமுறைப்படி 60 குழந்தைகள் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் 2 ஆசிரியா்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை உள்ளது.

எனவே, தமிழகத்தில் 1997-ஆம் ஆண்டு வரை இருந்ததைப்போல 20 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் என நியமித்தால் உபரி ஆசிரியா் என்ற நிலை இருக்காது. இதன் மூலம் 41 முதல் 60 குழந்தைகள் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் 3 ஆசிரியா்கள் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கும். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post