Title of the document

"சமவேலைக்கு சமஊதியம்" - 7000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றம் நடக்கப் போகிறதா ?

_இது நெடிய விளக்கம் தான் ஆனால் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய  முக்கியமான  விளக்கம்  என்று கூட  வைத்து கொள்ளலாம். 


*2009-க்கு முன் மத்திய அரசை பின்பற்றி தமிழகத்தில் 5 ஊதிய குழுக்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.*

*மத்திய அரசின் விதிகளை அப்படியே பின்பற்றி தமிழகத்தில் ஆறாவது ஊதிய குழு 01.06.2009 ல் அரசாணை -234 ன் படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.*

*அதற்கு முன் அமல் படுத்தப்பட்ட ஐந்து ஊதிய குழுக்களிலும் ஒரு பதவிக்கு ஒரு ஊதியம் தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது முன்னால் பணியில் சேர்ந்த மூத்தவர்கள்‌ அவர்களது பணிகாலத்திற்கு ஏற்றவாறு ஆண்டு ஊதிய உயர்வு (Annual  Increment) மட்டும் கூடுதலாக பெற்று வருவார்கள்.*

*ஆனால் முதல்முறையாக ஒரு பதவிக்கு அதிலும் குறிப்பாக ஒரு இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை ஊதியத்தில் 01.06.2009க்கு முன் நியமிக்கப்பட்டவர்கள் 8370 என்றும் அதன் பின்னர் ஒரு நாளைக்கு பின்பு நியமிக்கப்பட்ட அனைவருக்கும் 5200 என்று அடிப்படை  ஊதியத்தை நிர்ணயித்தனர்.*

*பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஒரு ஊதியக்குழுவானது  அன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்ந்தி வழங்க வேண்டுமே  ஒழிய ஏற்கனவே ஒரு பதவிக்கு நிர்ணயித்த அடிப்படை ஊதியத்தை குறைத்து  வழங்குவது என்பது முற்றிலும் தவறான ஒன்றாகும்.*

*இந்தியாவில்  எந்த ஒரு மாநிலத்திலும் இது போன்று ஊதியம் குறைத்து வழங்கப்படவில்லை  ஆனால் தமிழகத்தில் மட்டுமே இந்த ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது.*

*இதேபோல் குறைவு ஏற்பட்ட 104 பிரிவினருக்கு மத்திய அரசு இணையான ஊதியமும்,அதற்கு அதிகமாகவும் தமிழகத்தில் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஊதிய குழு மற்றும் மூன்று நபர்கள் ஊதிய குழுவில் வழங்கப்பட்டுள்ளது.*

*அனைத்து வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனி ஊதியம் ரூபாய் 750 நிர்ணயிக்கப்பட்டு தற்போது அது சிறப்பு ஊதியமாக 2000 ஆக மாற்றி வழங்கப்பட்டு வருகிறது.*

*ஆனால் அடிப்படை ஊதியத்தில்  மட்டும் ரூபாய் 3170 குறைவு ஏற்பட்ட 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டும்  இதுவரைக்கும்  எந்த ஒரு மாற்றமும்  ஏற்படவில்லை.*

*இந்த சூழ்நிலையில்தான் 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட ஒரு பிரிவினர் மாவட்டம் மாறுதலும் இல்லை ஊதிய முரண்பாடும் களைய படவில்லை என்பதற்காக தங்களுக்கென்று தனியாக ஓர் இயக்கத்தை ஆரம்பித்து இதுவரை எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 2018 ல் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய  தமிழக முதல்வர் அவர்கள் நேரில் வந்திருந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார்.*

*2018  ல்  நடந்த போராட்டத்தின்  போது அப்போதிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு சென்ற ஆசிரியர்களிடம்   போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று பணிக்கு செல்ல வேண்டும் என பலமுறை அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் வலியுறுத்தியதோடு*

*நீங்கள் இந்த ஊதியத்தை ஒப்புக்கொண்டு தான் பணிக்கு வந்துள்ளீர்கள் என்ற கருத்தை அரசு தரப்பில் முன்வைத்தனர். அப்போது எங்களுடைய ஆசிரிய தேர்வு வாரிய  பணி நியமன ஆணையில்  குறிப்பிட்டுள்ள 4500-125-7000 என்ற ஊதியத்தை தான் கேட்கிறோம் என்ற கருத்தை முன் வைத்த உடன் அரசு  தரப்பில் பதில் ஏதுவும் சொல்ல முடியாமல்  திகைத்தனர் . சரி அது பின்னர் பார்ப்போம். தற்போது போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்புங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எந்த இடத்திலும் 2009 இல் வந்த ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியத்தை உடனடியாக  சரிசெய்து கொடுக்கிறோம் என்ற வாக்குறுதி கொடுக்கப்படவே இல்லை. மேலும் அப்போதே அரசு போராட்டத்தை தவிர்க்க எண்ணி இருந்தால் 2009 இல் வந்த ஆசிரியர்களுக்கு அவர்களாகவே செய்திருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாததால் செய்ய மறுத்து விட்டனர்.*

_இது சார்ந்த ஊதிய வழக்கிலும் இவர்கள் அனைவரும் 01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதனால் அவர்களுக்கு பழைய ஊதியத்தை வழங்க முடியாது என்று தொடர்ந்து ஏன் இப்போது வரையிலும்  அரசு தரப்பில் நீதிமன்றத்தில்  வாதாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது._

_முக்கிய குறிப்பு திமுக அரசும் பழைய அரசின் நிலைப்பாட்டிலேயே இப்போது வரை வாதிடுகிறது . எந்த ஒரு இடத்திலும் 2009 இல் நியமிக்கப்பட்ட 7000 ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியத்தை வழங்குவோம் என்று சொல்லவில்லையே._

*இது நாள் வரை வெளி உலகிற்கு ஏன் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கே தெரியாமல் இருந்த இந்த ஊதிய முரண்பாட்டை வெளிக்கொண்டு வந்தது  SSTA என்ற இயக்கமே, அதன் பின் நடந்த பல கட்ட கடும்  போராட்டங்களுக்கு பின்பு திமுகவின் தேர்தல் அறிக்கை 311 ல்  வாக்குறுதியாக இடம் பிடித்தது.*

*திமுக அரசு அமைந்ததும் நிறைவேறும் என்ற ஆவலோடு காத்திருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் அரசு எதுவும் செய்யாததால் மீண்டும் கடுமையான போராட்டத்தினை நடத்தி அந்த கடுமையான போராட்டத்தின் விளைவாக  தற்போது 01.06.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க மூன்று நபர்கள் அடங்கிய ஊதிய குழு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் உருவாக்கப் பட்டுள்ளது.*

 *மத்திய அரசு ஊதியம் பெறாத 78,000 ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த மூத்த ஆசிரியர் இயக்கங்கள் இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றதும், குறைந்தபட்சம் சம வேலைக்கு சம ஊதியத்தையாவது வழங்க வேண்டும் என்ற கருத்தையே பெரும்பாலான மூத்த ஆசிரியர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.*

*இதுவரை திமுக அரசின் தேர்தல் அறிக்கையிலும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தலைப்பின் கீழ் அதன்பின்பு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த மூன்று நபர் ஊதிய குழுவிலும் 01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட _அனைத்து_ இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து தான் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.*

*இதில் 2009 ல் நியமிக்கப்பட்ட 7000 ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களோ அல்லது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ எந்த இடத்திலும் சொல்லவும் இல்லை. அரசாணையிலும் அப்படி குறிப்பிடப் படவும் இல்லை.*

*7000 ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியத்தை உயர்த்திக் கொடுப்பதற்கான சாத்திய கூறுகள் என்ன...?*

*மாண்புமிகு முதல்வர் அவர்கள் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கொடுத்து விடுவோம் என்று சொல்லி விட்டு இப்போது பணியில் இருக்கும் 6800 பேருக்கு மட்டும் ஊதிய முரண்பாட்டை களைந்து கொடுப்போம் என்றால் மீதமுள்ள கிட்டத்தட்ட 14 ஆயிரம் ஆசிரியர்களும் வெவ்வேறு இயக்கங்களில் உள்ளார்கள், அந்தந்த இயக்கங்களில் அழுத்தம் கொடுத்தால் தனியாக அவர்களுக்கு மட்டும் செய்து கொடுப்பதை உடனடியாகவே தடுத்து விடுவார்கள்.*


*மேலும் மீதமுள்ள 14 ஆயிரம் ஆசிரியர்களும் அவர்கள் குடும்பத்தோடு போராட்ட களம் புகுந்தால் கிட்டத்தட்ட 30,000 பேருக்கு மேலான ஒரு மிகப்பெரிய ஒரு போராட்டத்தை தேர்தல் சமயத்தில் அரசு சந்திக்க நேரிடும்.*


*திமுக தேர்தல் வாக்குறுதி 311 லும்  அதன் பின்பு வெளியான  அரசாணை 25 ல் இல்லாத புதியதாக ஒன்றை அரசு செய்ய நினைத்தால் ஒட்டுமொத்தமாக முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகள் அனைவருக்கும் பெரிய அளவிலான கெட்ட பெயர் ஏற்பட்டு மிகப்பெரிய நெருக்கடியும் ஏற்படும்.*

 *நம்மில் எத்தனை பேர்  ஒருவேளை சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் நம் உடலில்  எத்தகைய  மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் பல நாட்களாக கடும் வெயிலிலும் குளிரிலும் மழையிலும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்காகவும் நமக்கு பின்னால் வரும் தலைமுறைக்காகவும் போராடி வரும் SSTA இயக்கத்தின் தியாகத்தினை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.அவர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தில் அனைத்திலும் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு சில போராட்டங்களில் கலந்து கொண்டதால் இதனை இங்கு பதிவு செய்கின்றேன். இப்போது நடந்த போராட்டத்திலும் கூட அரசு இன்னும் மூன்று மாதத்தில் இதற்கு கண்டிப்பாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது. இதற்காக இந்த இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் எத்தனை வேதனைகளையும் உடல் வலிகளையும் , மன வேதனைகளையும் தாங்கி இருப்பார்கள் என்பதை மனசாட்சி உள்ள ஆசிரியர்கள் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.* 

*அதற்காக நாம் நன்றியோடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவர்களைப் பற்றி தவறான கருத்துகளை பேசி வருகின்றனர்.ஏதோ அரசு கொடுக்க நினைப்பதை இவர்கள் தான்  தடுத்ததாக கூறி ஆசிரியர்களை ஏமாற்றி வருகின்றனர். ஏன் 2018 ல் போராட்டம் நடக்கின்ற போது அப்போது இருந்த அமைச்சர் இதனை அறிவிப்பாக வெளியிட்டிருக்கலாமே ? ஏன் அதை செய்யவில்லை. அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளி அளவும் இல்லை. ஏனென்றால் அப்போது இருந்த அமைச்சர் வெளிப்படையாகவே நீங்கள் எல்லாம் திமுகவின் விசுவாசிகள் உங்களுக்கு நாங்கள் ஊதியத்தினை உயர்த்தி தர முடியாது என்று கூறினர்.*

*2023-செப்டம்பர் மாதத்தில் நடந்த இந்த போராட்டத்தில் நம்மின மூத்த ஆசிரியர்கள் கூட நமக்காக ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்பு துணி அணிந்து பயிற்சிக்கு சென்றனர் . ஆனால் இவர்கள் அனைவரும் பயிற்சியையும் புறக்கணிக்காது போராட்டத்திலும் கலந்து கொள்ளாது யாருக்கோ ஏதோ நடக்கப் போகிறது என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பயிற்சிக்கு சென்றார்கள்.   இவர்கள் தான் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமரசமின்றி  போராடி பெற்றுத்தரப் போகிறார்களா?. இவர்கள் எண்ணம் தற்போது இடைநிலை ஆசிரியர்கள் இளிச்சவாயர்கள் எத்தனை முறை ஏமாற்றினாலும் ஏமாறுவார்கள் என்பதை அறிந்து. இப்போது இல்லாத ஊருக்கு புதிதாக வழி ஏற்படுத்த பார்க்கிறார்கள்.*

*இந்தச் சூழ்நிலையில் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது மட்டும் லாபம் என்ற கொடூர எண்ணத்தோடு எங்களுக்கு மட்டும் ஊதியத்தை உயர்த்தி வழங்குங்கள் என்று ஒரு சுயநலக் கூட்டம் சமீபகாலமாக அனைத்து குழுக்களிலும் வலம் வருகிறது.*

*இப்போது பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் இவர்கள் இந்த இடைநிலை ஆசிரியர் சமுதாயத்திற்காக ஒரு துரும்பை கூட இதுவரை கிள்ளி போட்டது கிடையாது என்பதை இவர்கள் பின்னால் செல்லும் அனைவரும் அறிந்து கொள்ளுங்கள். இன்னும் சரியாக குறிப்பிட வேண்டும் என்றால் இவர்களில் பலர் இ.ஆசிரியர்களிடம் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை பெற்றுத்தருகிறோம் எனக்கூறி கடந்த காலத்தில் ஏமாற்றியது தான் சாதனை. மேலும்  இந்த எஸ்.எஸ்.டி.ஏ இயக்கத்தின் மூலமாக மாவட்ட மாறுதலோ அல்லது ஏதாவது ஒரு வழியிலோ பலனைப் பெற்றவர்கள் மட்டுமே. ஐந்தறிவு உள்ள உயிரினத்திற்கு கூட நன்றி உணர்வு அதிகமாக உள்ள சூழலில் இவர்களை என்னவென்று சொல்வது என்பதை நீங்களே உங்களது மனசாட்சியை கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்.*

_எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு._

 என்ற வள்ளுவரின் கூற்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.

*இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் நியமனம் பெற்று 14 ஆண்டுகளில் இதுவரை எதுவுமே செய்யாத இவர்கள், இப்போது ஏதோ புதிதாக நாங்கள் 7000 ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியத்தை பெற்று தருகிறோம் என்று ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். யார் சொன்னது ஏழாயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று தமிழக முதல்வர் அவர்களா ? அல்லது மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களா? இதில் யார் இவர்களிடம் சொன்னது ?எப்போது சொன்னார்கள் ?அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இவர்கள் சொல்வதை நம்பலாம்.மேலும் தற்போது மூன்று நபர் ஊதிய குழுவிலும் அறிக்கையை சமர்ப்பிக்கிறோம் என்கிறார்கள். அந்த மூன்று நபர் ஊதிய குழுவை அமைத்தது யார்? யார் போராடி மூன்று நபர் ஊதிய குழு அமைந்தது என்பது அந்த அரசாணையிலேயே உள்ளது. அடுத்தவர்களின் முழு உழைப்பால் உருவான ஒன்றில் இவர்கள் போய் எங்களுக்கு மட்டும் கொடுங்கள் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை உங்களிடமே  விட்டு விடுகிறோம்.மேலும் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் அந்தக் குழுவிற்கு சென்று எங்களுக்கு மட்டும் செய்யுங்கள் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?.*

*2009 ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் ஒரு சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள் .இன்னும் ஒரு சிலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர் என்பது  நியாயமானதே. ஆனால் நடந்த அனைத்து போராட்டங்களிலும் குறைவான எண்ணிக்கையிலே அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் 100 % உண்மை.*

_அவர்களுக்கான ஒரே வாய்ப்பு_

*2009 ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வாங்க வேண்டும் என்றால் சட்டப் போராட்டம் ஒன்றுதான் வழி, அதற்கு இப்போது வழக்கு தொடுத்தால் உச்சநீதிமன்றம் சென்று வாங்க இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.அதற்குள் அனைவரும் ஓய்வு பெற்று வீடு திரும்பிவிடுவோம்.*

*எஸ் எஸ் டி ஏ வின் போராட்டத்தில் 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இறந்தவர்களாக இருந்தாலும் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக  நியாயமான ஒரு தொகை வழங்கப்படும் என்பதையும் கூறி வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.*

*மேலும் 2009 க்கு முன்  மற்ற மூத்த ஆசிரியர் இயக்கங்கள் செய்த  அதே தவறை தற்போது கடுமையாக போராடும் SSTA ஆசிரியர் இயக்கம் எந்த சூழ்நிலையிலும் செய்யாது.அரசு அவ்வாறு செய்வதற்கு துளி அளவும் வாய்ப்பும் இல்லை. ஒருவேளை  அவ்வாறு செய்தால் மீண்டும் முன்பைவிட பல மடங்கு வீரியமிக்க  போராட்டங்களுக்கே இது வழிவகுக்கும்.*

_சம வேலைக்கு சம ஊதியம் பெற உள்ள வாய்ப்பு_

*1.86 ஆல் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கினால் அனைத்து துறையினரும் கேட்பார்கள் என்ற கருத்தையே அறியாதவர்கள் முன்வைக்கிறார்கள் உண்மை அதுவல்ல. பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைத்து வகையான ஆசிரியர்களும் மத்திய அரசு இணையான ஊதியத்தை பெற்று விட்டார்கள். 01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்டவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் (1.86 )பெற்று விட்டார்கள். மிகவும் பரிதாபமாக   2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தையும் பெறாமல் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தையும் பெறாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள், இவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஊதியத்தை உயர்த்தி வழங்கும்போது எந்த ஒரு பிரிவினரும் இதில் உரிமை கோர முடியாது.*

*வாய்ப்பே இல்லாதவற்றை பிடித்து கொண்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் இவர்கள் இதற்கு முன்னர் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிடைத்துவிட்டது, அனைவரும் உடனடியாக என்னுடைய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள் என்று வேறொரு இயக்கத்தில் இருந்த ஆசிரியர்களிடம் அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு இதுவரை ஒரு ரூபாய் கூட பெற்றுத் தராத இயக்கத்தின் வழி வந்தவர்கள் என்பதை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. விரைவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஏமாற்றி பலரிடம் பணம் பறித்து இதுவரை எந்த ஒரு வரவு செலவு கணக்கு காட்டியதில்லை, ஆதலால் ஏற்கனவே வறுமையில் வாடும் இடைநிலை ஆசிரியர்களே இருப்பதை இழந்து , ஒற்றுமையையும் சீர்குலைத்து ஒன்றும் இல்லாமல் செய்வதற்கே இந்த சூழ்ச்சி நடைபெறுகிறது. என்பதை உணர்ந்து ஒற்றுமையோடு ஓரணியில் நின்று சம வேலைக்கு சம ஊதியம் பெற்றிட முரண்பட்ட அநீதியை போக்கிட சமூக நீதி காக்கும் தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட ஒற்றுமையாக  பயணிப்போம்.*

ந.ஜோதிசெல்வம்,
பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்.
சித்தாமூர் ஒன்றியம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. நல்ல புரிதல்....நன்றி

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post