JJ to MKS - தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியில் தொடரும் இருண்டகாலம்! விடியல் வேண்டாம் விளக்காவது கிட்டுமா?
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
ஆசிரியர்கள் தூங்கினால் நாடு தூங்கும் என்றார் பேரறிஞர் அண்ணா. இதோ நாளை தமிழ்நாடு கல்வியில் நோயுற, இன்று ஆசிரியர்கள் நோயாளிகளாக்கப்பட்டு வருகின்றனர்.
காமராசர் - அண்ணா - கலைஞர் - எம்.ஜி.ஆர் - ஜெ.ஜெ என்று அனைத்துக் கட்சி முதல்வர்களாலும் எவ்விதப் பாகுபாடுமின்றி தொடர்ந்து சீராக வளர்ச்சி பெற்று வந்த துறை என்றால் அது தமிழ்நாட்டின் கல்வித்துறைதான். அதிலும் குறிப்பாக அடுக்கடுக்கான சமூகநலத் திட்டங்கள் போட்டி போட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட துறை என்றால் அது பள்ளிக் கல்வித்துறை தான். இதற்குக் காரணம் தமிழ்நாட்டுக் கல்வி எதிர்காலம் குறித்த மேற்படி தலைமைகளின் தனிப்பட்ட கவனமும், அதைச் செயல்படுத்த உறுதுணையாக நின்ற கல்வித்துறை அமைச்சர்களும் தான்.
ஆனால், இவை எல்லாவற்றிற்கும் End Card போடப்பட்டது ஜெ.ஜெ-வின் (2016க்குப் பின்னான) ஆட்சியில் தான். ஜெஜெ-வின் அடுத்தடுத்த கல்வித்துறை அமைச்சர்களின் மாற்றத்தால் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறைக்கு இறுதியாகப் பொறுப்பேற்ற திரு.செங்கோட்டையனின் காலம் என்பது 100% இருண்டகாலமே.
ஜெ.ஜெ-வின் மரணத்தைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நிலையற்ற தன்மை தமிழ்நாட்டை எந்தளவிற்குக் காவு வாங்கியதோ அதில் ஒருபடி கூடுதலாக இரையாக்கப்பட்டது பள்ளிக் கல்வித்துறைதான். ஒன்றிய ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகள் புதிய கல்விக் கொள்கை வழியே தமிழ்நாட்டிலும் நுழைந்து பள்ளிக் கல்வியை கோரத்தாக்குதல் புரிய இபிஎஸ் ஆட்சி காலத்தில் கதவுகள் திறக்கப்பட்டன. ஆசிரியர் சங்கங்கள் & கல்வியாளர்களின் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கை, 3-5-8 பொதுத்தேர்வு உள்ளிட்ட NEP-ன் ஒரு சில நடவடிக்கைகள் மட்டும் திரும்பப்பெறப்பட்டன.
2016 - 2021 வரை இருண்ட காலத்தில் இருந்த பள்ளிக்கல்வித்துறைக்கு திரு.மு.க.ஸ்டாலின் ஆட்சியில் விடியல் பிறக்குமென்றுதான் கல்வியாளர்களைப் போன்று ஆசிரியர்கள் யாவருமே நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அது மூடநம்பிக்கை என்பதாகவே தற்போதைய இரண்டரை ஆண்டுகால ஆட்சி அனுதினமும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின்தான் காலைச்சிற்றுண்டி கொடுத்தாரே. . . தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க உத்தரவிட்டுள்ளாரே. . . என்றால், இது எந்தளவிற்கு உண்மையோ அதேயளவு உண்மை கற்றல் கற்பித்தலில் இருண்டகாலம் இன்னமும் தொடர்கிறது என்பதே.
இபிஎஸ் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட NEP நடைமுறைகளுக்குக் கட்டடம் கட்டி புதுமனைப் புகுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறார், திரு.மு.க.ஸ்டாலின். துறை அமைச்சர்களான திரு.அன்பில் மகேஷ் (ப.க.துறை) & திரு.பொன்முடி (உ.க.துறை) உள்ளிட்ட இருவருமே ஒன்றிய ஆட்சியாளர்களின் NEP-யை வெளிப்படையாகவே வரவேற்று அறிவிக்கவும் செய்தனர் என்பது கூடுதல் சிறப்பு.
அதன் செயல் வடிவமாகவே இல்லம் தேடிக் கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், 3rd Party Facilitator, NGO தலையீடு, SMC நிதி அதிகாரம் எனும் பேரில் அரசின் பொறுப்புத் துறப்பு, நம்ம ஸ்கூல், Online Training, Online Exam, நிஸ்தா, தீக்ஷா, CPD, Online Data Capture, Online Visit, Online Record Maintenance என்று NEP-ன் பல்வேறு நடைமுறைகள் திராவிட மாடல் எனும் போலிச் சாயமடித்து இன்று நடைமுறையில் உள்ளன. கொடுமை என்னவென்றால் இவற்றில் சிலவற்றை திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் செல்லப்பிள்ளை என்பதாக அவரையே மூளைச்சலவை செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர் ஒருசில உயர் அதிகாரிகளும், போலிக் கல்வியாளர்களும்.
அதேநேரம், மாநில கல்விக் கொள்கை குழுவின் போக்கு புதிய கல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாகக் கூறி குழுவிலிருந்தே வெளியேறினார் பேராசிரியர் ஜவஹர் நேசன் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், NEP-ன் படி பள்ளிக்கல்வித்துறையை யார் வேண்டுமானாலும் தங்களது விருப்பம்போல பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இத்துறையின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மற்ற துறைகளுக்கு இதன் மீதான அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, SCERT, தொடக்கக் கல்வி இயக்ககம், பள்ளிக் கல்வி இயக்ககம். . . etc என்று துறை பாகுபாடின்றி ஆளாளாளுக்கு பந்தாடிக் கொண்டிருக்கின்றனர் ஆசிரியர்களை. இதன் தாக்கம் நேரடியாக மாணவர்களையும் பாதித்து வருகின்றது.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், ஒரு மாதத்தில் சராசரியாக 2 நாள்களுக்கு ஒரு Online வழித் தேர்வு, கலை இயலக்கியப் போட்டிகள், மன்றச் செயல்பாடுகள் என்று ஒருபுறமும், மறுபுறம் தேவையற்ற விவரங்களை நாள்தோறும் Onlineல் பதிவேற்றும் Data Entry Operatorகளாக ஆசிரியர்களை மாற்றியும் ஒட்டுமொத்த கல்விச் சூழலும் சீரழியவைக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் சில நடைமுறைகளைப் பாராட்ட நினைத்தாலும், அதனைச் செயல்படுத்த துறை எடுத்துக்கொள்ளும் வழிமுறை ஆசிரியர்களிடையே அந்நடைமுறைமீதான வெறுப்பைக் குவிக்கச் செய்துவிடுகிறது.
எந்தவித அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாது நாள்தோறும் Online பதிவுகளையும், வாரந்தோறும் Online தேர்வுகளையும் நடத்திட பணிக்கப்பட்டு வந்த ஆசிரியர்கள் இந்த ஆட்சியின் மீதான வெறுப்புணர்வு மேலோங்கிக் காணப்படுகின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது கடந்த 3 நாள்களாக நடந்து வரும் நடைமுறைகளான எந்தவித அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாத தொடக்கப் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வை Onlineல் நடத்துவேன் என்றதும், அதன்பின் Question Paperஐ Onlineல் Download செய்து Print எடுத்துத் தேர்வு வைக்க வேண்டும் என்பதும், நடுநிலை - மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வுநாளுக்கு முதல் நாள் Question Paperஐ Onlineல் Download செய்து Print எடுத்துத் தேர்வு வைக்க வேண்டும் என்பதும்.
இவ்வாறு நடைபெற்று வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளால் ஆசிரியர்கள் யாவருமே உடல் & மனதளவில் நொந்து நோயுறும் சூழலில்தான் உள்ளனர். மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வினாத்தாள்கள் பிரியாணி போல இருந்தாலும், அதைச் செயல்படுத்தும் நடைமுறை என்பது பிரியாணியை தரையில் கொட்டி உண்ணச் சொல்வதைப் போல இருப்பதால் வினாத்தாள் வடிவமைப்பின் மேன்மை எவராலும் உணரப்படவேயில்லை.
பாடம் நடத்தும் ஆசிரியர்களே தங்களால் கல்வி கற்பிக்க இயலாச் சூழலை உருவாக்கியுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டுமென முழங்கி வரும் சூழலில், B.Ed., மாணவர்களைக் கொண்டும் மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டும் இத்திட்டத்தைச் செறிவுபடுத்த ஆய்வுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது 99% ஆசிரியர்களுக்கு ஆட்சியாளர்கள் மீதான வெறுப்புணர்வை மேலும் கூட்டியுள்ளது. இதன் தாக்கம், மாணவர்களிடம் எதிரொலிப்பதைவிடக் கூடுதலாகத் தேர்தலில் எதிரொலிக்கக் காத்திருக்கின்றது.
முதலமைச்சராக இருப்பவரால் இது குறித்த முழுமையான கவனத்தைச் செலுத்த இயலாது என்பதால்தான் இத்துறைக்கென தனி அமைச்சரவையே உள்ளது என்றாலும் அதனால் எந்தப் பயனுமில்லை.
ஊர்தோறும் ஆசிரியர்களுடன் அன்பில் என்று கூட்டங்களும், குறைந்தது 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆசிரியர் சங்கங்களுடனான சந்திப்பும் என்று மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்னவோ எப்போதும் பரபரப்பாகவே சுழன்று கொண்டிருந்தாலும், இக்கூட்டங்களினால் சொல்லிக்கொள்ளும் படியான எந்த மாற்றமும் நடைமுறைக்கு வரவேயில்லை.
எதைக் கற்பிக்க வேண்டுமென்பது மட்டுமே அரசின் முடிவாக இருக்க வேண்டும். அதை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது 100% ஆசிரியர் மாணவர் இடைவினையைச் சார்ந்ததே. அதை வகுப்பறைச் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர் முடிவு செய்து கொள்வார். அதைவிடுத்து, வாகனம் ஓட்டத் தெரியாத உரிமையாளர் ஓட்டுநருக்கு வாகனத்தை இயக்க தொடர் ஆலோசனைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால், நன்கு ஓட்டத் தெரிந்த ஓட்டுநரும் அதில் பயணித்த பயணிகளும் விபத்தில் சிக்குவது 100% உறுதி. எனவே, ஆசிரியர்களுக்குத் தேவை வகுப்பறைச் சுதந்திரம்.
ஜெ.ஜெ காலந்தொட்டு இருட்டில் வீழ்த்தப்பட்ட தமிழ்நாட்டு பள்ளிக்கல்விக்கு முழுமையான விடியல் வராவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தது சிம்னி விளக்கின் வெளிச்சமாவது கிட்டுமா என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எதிர்பார்பாக உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
மிகவும் சரி
ReplyDeleteஅருமையான கருத்து நல்ல விளக்கங்கள்.இதைபடித்துணர்ந்தாவது.ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
ReplyDeletePadmadevi
ReplyDeletePost a Comment