Title of the document
TNPSC குரூப் 4 பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? தெரிந்து கொள்ளுங்கள்!

TNPSC குரூப் 4 பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. தேர்வர்கள் தேர்வாணையத்தின் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளாலாம்.

குரூப் 4ல் அடங்கிய காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு: கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியில் 425 காலியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும், தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும், பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும் நிரப்பப்பட உள்ளன,


தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வுகளில் பல்வேறு இடஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில், சாதி அடிப்படையிலான வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்(முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்க்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு - எந்தப் பிரிவினருக்கு எந்த ரேங்க் வரை வேலை உறுதி?

உதாரணமாக, இளநிலை உதவியாளர் (Junior Assistant) பதவியை எடுத்துக் கொள்ளலாம். இதில், அறிவிக்கப்பட்ட 5, 102 காலி இடங்களில், பொது முறையின் கீழ் 1,582 இடங்களும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பினருக்கு 51 இடங்களும், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 765 இடங்களும், ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கு 153 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1020 இடங்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு 179 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 1,352 இடங்களும் நிரப்பப்படும்.

இடஒதுக்கீடு பிரிவின் கீழ் வரும் மாணவர்கள், தகுதியின் அடிப்படையில் பொது முறையின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவராவர். அவ்வாறு, பொது முறையின் மூலம் நிரப்படும் காலிப் பணியிடத்திற்கு இடஒதுக்கீட்டின் கீழ் வரும் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டால், அவரது வகுப்புக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை எந்த வகையில் குறைக்கப்படாது.

பெண்கள் இட ஒதுக்கீடு:

அதேபோன்று, மொத்த அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள்( minimum of 30% of all vacancies), குறைந்தபட்சம் 30% பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு சாதி பிரிவு மற்றும் பொது பிரிவில், இடஒதுக்கீட்டின் படி, பெண்கள் / மூன்றாம் பாலின (பெண்கள்) விண்ணப்பதாரர்களுக்கு 30% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உதாரணமாக, இளநிலை உதவியாளர் பணியில் அறிவிக்கப்பட்ட மொத்த 5, 102 இடங்களில், 1530 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது அந்தந்த சாதிப் பிரிவின் கீழ், 30% இடஒதுக்கீடு செய்யப்படும். உதாரணமாக, பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 1,352 இடங்களில், 30% இடங்களான 405 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் போட்டியிட தகுதியானவர்கள்.

மேலும், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் தகுதியுடைய / பொருத்தமான பெண் / திருநங்கைகள் (பெண்) விண்ணப்பதாரர் இல்லாத இடங்களில், அந்தந்த ஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்த ஆண்/ திருநங்கைகள் / திருநங்கைகள் (ஆண்) நிரப்பப்படுவார்.

ஆதரவற்ற விதவைகளுக்கு இடஒதுக்கீடு:

மாநில அரசின் கீழ் ஊதியநிலை ரூ.Rs.20,600-75,900/-க்கு (திருத்தப்பட்ட சம்பளம்) மிகாத பதவிகளுக்கு பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில், 10% பணியிடங்கள் அந்தந்த ஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும். அதன்படி இளநிலை பணியில், குறைந்தபட்சம் 40 இடங்கள் ஆதரவற்ற பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆதரவற்ற விதவையில்லாத இடங்களில் அந்தந்த ஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கு/ திருநங்கைகளுக்கு (பெண்கள்) (ஆதரவற்ற விதவைகள் தவிர) வழங்கப்படும்.

முன்னாள் இராணுவத்திற்கான இடஒதுக்கீடு:

ஒவ்வொரு சாதிப் பிரிவிலும், முன்னாள் ராணுவத்திற்கு 5% இடங்கள் ஒதுக்கப்படும் (Section 27(c) of Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016).

மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீடு: ஒவ்வொரு இடஒதுக்கீடுப் பிரிவுகளிலும், 1% இடங்கள் நிர்ணையிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு: ஒவ்வொரு சாதிப் பிரிவிலும், முன்னுரிமை அடிப்படையில், 20% இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றோருக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில், முதலில் 20% இடங்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றோரைக் கொண்டு நிரப்பப்படும். தகுதியான நபர்கள் இடங்களில் அந்தந்த ஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்படும்.

வெற்றி வாய்ப்பு: குரூப் 4 தேர்வில் தேர்வர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் மற்றும் இனவாரியான மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் நியமனம் செய்யப்பட உள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு தேர்வர்கள் கலந்தாய்வு முறைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

குரூப் 4 தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட உள்ள 10,117 பணிகளுக்கு, மொத்தம் 20, 234 பேர் கலந்தாய்வு முறைக்கு அழைக்கப்படுவர். உதாரணமாக , 5102 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, மதிப்பெண்கள் பட்டியல் அடிப்படையில் குறைந்தபட்சம் 10, 200 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறைக்கு அழைக்கப்படுவார்கள்.

இதில், பொது பிரிவின் கீழ் 3,016 தேர்வர்களும், பிசி பிரிவின் கீழ் 2,704 தேர்வர்களும், பிசி(எம்) பிரிவின் கீழ் 358 தேர்வர்களும், எம்பிசி பிரிவின் கீழ் 2040 தேர்வர்களும், ஆதிதிராவிடர் பிரிவின் கீழ் 1530 தேர்வர்களும், ஆதிதிராவிட அருந்ததியின பிரிவின் கீழ் 306 பேரும், பழங்குடியின பிரிவின் கீழ் 102 பேரும் அழைக்கப்படுவர்.

2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும்,6366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post