*தொடக்கப் பள்ளி மாணவர்கள் மீது அக்னிப் பரீட்சை வேண்டாம்*
தமிழக அரசிற்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை
1 முதல் 9 ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் வந்தால் போதும் என்கிற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து , மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
மே 13 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிசெய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால்
ஆண்டு இறுதித் தேர்வு என்னும் பெயரில் மாணவர்கள்மீது அக்னிப் பரீட்சை செய்ய வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்குப் பிறகு,
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்
பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கி,
கடந்த
நான்கு மாதங்களாகத்தான் சீராக இயங்கி வருகின்றன.
கொரோனா கால
கற்றல் இழப்புகள்
ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இருந்தாலும் கூட,
அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில்
அரசும்,
அரசுடன் சேர்ந்து, ஆசிரியர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
வழக்கமாகப்
பொதுத்தேர்வுகள்
மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரலுக்குள் முடிவடைந்து விடும்.
ஆனால்
நீண்ட விடுமுறை
நிறைய கற்றல் இழப்புகள் என சவால்கள் நிரம்பியிருக்கும் சூழலில்
மாணவர்களின்
கற்றலுக்கு சற்றே வழிவிட்டும்,
வாய்ப்புக் கொடுத்தும்
தேர்வை மே மாதத்தில் நடத்த
அரசு முடிவெடுத்து,
நாளை முதல் தொடர இருப்பது இக்காலத்திற்கு
மிகச் சரியான முடிவே ஆகும்.
ஏனெனில் ஈராண்டுகளாக தேர்வே இல்லாமல்
தேர்ச்சி என்பதில்
மாணவர்களுக்கு கற்றல் என்பதில் கவனம் குறைந்து போய்விட்டதென்பது உண்மை. எனவே எப்படியேனும் நடத்திவிட வேண்டும் என்னும் சிந்தனை ஆரோக்கியமான சிந்தனையே ஆகும்.
கோடையில் மாணவர்கள் தேர்வை எழுதுவதென்பதும்,
ஆசிரியர்கள் இக்காலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதென்பதும்
சவாலானதுதான் என்றாலும்கூட,
மாணவர்களின்
எதிர்காலம் கருதி,
அதற்கான நிறையத் திட்டமிடல்களோடு களம் இறங்கியிருக்கிறது கல்வித்துறை..
அதே நேரத்தில்
*பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களான*
1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட கற்றல் இழப்புகளையும்,
கற்றல் இடைவெளியையும் ஈடுசெய்வதில் இன்னும் ஆசிரியர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.
காரணம்
மாணவர்களது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு மத்தியில்,
பள்ளி தொடங்கிய நாள்முதல்,
பயிற்சிகளோடும்,
தொழில்நுட்பங்களோடும் போராடிக்கொண்டிருந்த
ஆசிரியர்களுக்கு
மாணவர்களோடு செலவழிக்க,
இந்தக் குறுகிய காலம் போதுமானதாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
வழக்கமாக இந்நேரம் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதுவரை இங்கு அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு ,
கற்றல் இழப்பைக் காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மை என்னவெனில்
விடுமுறை என்பது தேர்வுக்கான விடுமுறையே அல்ல,
இது
கோடை வெப்பத்தில் குழந்தைகள் சுகாதாரப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்.
இதுவரை கற்பிக்காத பாடங்களை,
தற்போது கற்பித்து விடலாம் என அரசு நினைக்கலாம்.
மாணவர்களுக்குத் தேர்வுகள் தேவைதான். அதனைப் பள்ளிகள் திறந்தபின்கூட,
நடத்திக்கொள்ள முடியும்.
தவிக்கிற நேரத்தில்
தண்ணீர்தான் தேவை,
தத்துவங்கள் அல்ல..
பசிக்கிற நேரத்தில்
உணவுதான் தேவை,
போதனைகள் அல்ல..
கடும்கோடையில்
மாணவர்கள் காலையில் வந்து மாலையில் வீடு திரும்புவதே சிரமம் என்னும்பொழுது,
காலை 9 மணிக்கு வருகை தரும் மாணவர்கள் தேர்வு முடித்து மதியம் 1 மணிக்கு வீடு திரும்பவதும்,
மதியம் தேர்வு எழுத வரும் மாணவர்கள்
மதியம் 1 மணிக்குப் பள்ளிக்கு வருகை புரிவதும் பெரும் சவால் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
*11 மணிக்குப் பிறகு 3 மணி வரை பெரியவர்கள் கூட வெயிலில் நடமாட வேண்டாம்* எனச் சுகாதாரத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும்பொழுது,
தற்போது கடும் வெப்பம் நிலவும் சூழலில்
1 முதல் 9 ம் வகுப்பிற்கு
தேர்வு குறித்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வரலாறு காணாத வெயில்
கடந்த
15 தினங்களாக வறுத்தெடுக்கும் நேரத்தில்,
நீர்க்கடுப்பு,
சளி,
காய்ச்சல், தலைச்சுற்றல்,
அம்மை நோய்,
சரும நோய்,
நீர்ச்சத்துக் குறைபாடு என்பவை
வியர்வையில் குளிக்கும் மாணவர்களிடம் அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் நேரத்தில்
இன்று
*அக்னியும் தொடங்கி விட்டது*.
இந்த நேரத்தில்
*ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு*
தற்போது
*வேண்டாம் அக்னிப் பரீட்சை* என தமிழக அரசிடமும், பள்ளிக்கல்வித்துறையிடமும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சிகரம்சதிஷ்
நிறுவனர்- கல்வியாளர்கள் சங்கமம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment