Title of the document
1 - 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வலியுறுத்தல்! 
 
s-ramadoss-eps

கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்தரி வெயில் காலத்திலும் இயங்கும். மே 13ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும். கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக 2020- 21ஆம் கல்வியாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. 2021-22 ஆம் கல்வியாண்டும் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்புக்கு தப்பவில்லை. இரண்டாம் அலை காரணமாக நடப்பு கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில்தான் தொடங்கியது. மூன்றாவது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக்கூட மே 13ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். துயரத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்பர். அதேபோல் சுட்டெரிக்கும் வெயிலில் வகுப்புகள் நடத்தப்படுவதால் அனுபவித்து வரும் கொடுமைகளை மாணவர்கள் மட்டும்தான் அறிவார்கள். தமிழ்நாட்டில் 8 நகரங்களில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து தகிக்கிறது. மே மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கும் கத்தரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 44 டிகிரி செல்சியசையும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியசையும் தாண்டக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் கணித்துள்ளனர்.


இத்தகைய சூழலில் பள்ளிகளை மே 13ஆம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன? திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் பள்ளிகள் மாலை 4.15 மணி வரை தொடர்கின்றன. மழலையர் பள்ளிகளும், பெரிய பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளும் இதற்கு விதி விலக்கு அல்ல. அவ்வாறு 8 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மின் விசிறிகள் இல்லை. சில வகுப்புகளில் ஒரே ஒரு மின்விசிறி மட்டும்தான் உள்ளது. இருக்கும் மின் விசிறிகளும் மின்வெட்டு, பழுது உள்ளிட்ட காரணங்களால்  இயங்குவதில்லை. அதனால், செங்கல் சூளைக்குள் இருப்பது போன்ற சூழலில் 3 வயது, 4 வயதுக் குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும்? மழலையர், தொடக்க வகுப்புகளைக்கூட நடத்துவது ஏன்? நான் வாழும் தைலாபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்குக்கூட ஆண்டுக் கட்டணமாக ரூ.45,000 வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 3 கி.மீ சுற்றளவில் உள்ள குழந்தைகளை அழைத்து வருவதற்காக ஆண்டுக்கு ரூ.12,000 வாகனக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில்கூட ஒரே ஒரு மின்விசிறி மட்டும் தான் உள்ளது. ஆசிரியருக்கு மட்டுமே காற்று வீசும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த மின் விசிறியால் மாணவர்களுக்கு எந்த பயனும் கிடையாது. பல பள்ளிகளில் மர நிழல்கூடக் கிடையாது. இன்னும் பல பள்ளிகளில் குடிப்பதற்குக் குடிநீர் கூட இல்லை. இத்தகைய கொடுமையான சூழலில் மழலையர் மற்றும் தொடக்க வகுப்புகளைக்கூட நடத்துவது ஏன்? அதன் மூலம் நாம் கல்வியில் எதை சாதிக்கப் போகிறோம்? என்பதே என் வினா. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நடத்தப்படவுள்ளன. அதில்கூட நியாயம் உள்ளது. ஆனால், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்.


அவ்வாறு இருக்கும் போது அரசு, தனியார் பள்ளிகளில் அவர்களுக்கும் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன? பள்ளிக் கல்வித்துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளுக்கு குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் புரிவதில்லை. பள்ளிகளைச் சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் தங்களின் அலுவலகங்களை சொகுசுபடுத்திக் கொள்ளும் உயரதிகாரிகளுக்கு பள்ளி வகுப்பறைகளில் மின்விசிறிகள் கூட இல்லை என்ற உண்மை தெரியாததால்தான் இத்தகைய முடிவுகளை எடுத்து குழந்தைகளை வதைக்கிறார்கள்.


பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளை எந்த வசதிகளும் இல்லாத வகுப்பறைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அமர வைத்தால்தான் குழந்தைகளின் அவதியை அறிவார்கள். கொரோனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது  அரசின் கடமை. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியதால் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. அதேபோல், இப்போதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளின் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் அவ்வாறுதான் செய்யப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மே 2ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கவிருக்கிறது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்; அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post