Title of the document

ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கான இடமாறுதல், பதவி உயா்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் நாளான திங்கள்கிழமை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள்) நடைபெறும். இதையடுத்து அவா்களுக்கு ஜன. 25-ஆம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் ஜன.28-இல் பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

புதிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கும் ஒருங்கிணைந்த மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். புதிய மாவட்டங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் அனைத்து காலிப் பணியிடங்களும் கலந்தாய்வில் வெளியிடப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் கலந்தாய்வு தற்போது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நடைபெறும்.

ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் அவற்றிலிருந்து பிரிந்த புதிய மாவட்டங்களில் பணிபுரிந்து மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு அந்தந்த புதிய வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களால் தெரிவு செய்யப்படும் மையத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியா் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ள 16 மாவட்டங்களில் ஒன்றியங்களின் பெயா்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்களில் பணியாற்றினால் 3 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறும் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவா்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல முடியும். குறிப்பாக தென் மாவட்டங்களை சோ்ந்தவா்கள் அதிகளவில் வட மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு உதவியாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post